Friday, October 30, 2015

சாதி கலவரங்களை நோக்கி நகர்கின்றதா தமிழகம்?!


ஒரு மாநிலத்தில் மத ரீதியிலான கலவரங்களை தூண்டிவிட்டு பலனடையும் பாஜகவின் உத்தியை பயன்படுத்தி... தமிழகத்தில் சாதி மோதல்களை உருவாக்கி அதிமுக குளிர்காய நினைக்கிறதோ என்று தான் சமீப காலமாக தமிழகத்தில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் சந்தேகப்பட வைக்கின்றது. 

இளவரசன், கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா...  போன்றவர்கள் கொலையுண்டதோ அல்லது தூண்டப்பட்ட தற்கொலைகளோ அரசால் போதுமான அளவில் கண்டுகொள்ளப்படாமல், உண்மையான குற்றவாளிகள் சரியாக கண்டிக்கப்படாமலோ அல்லது கண்டுபிடிக்கப்படாமலோ அல்லது தண்டிக்கப்படாமலோ இருப்பதும்...

சில அடாவடி சாதி சார்பு ஆட்களை சில பல பொதுப் பெயர்களில் கட்சி ஆரம்பிக்க வைத்து, அவர்களை தங்கள் கண்ணசைவிற்கு ஏற்ப ஆட்டம் போட வைத்தும், தங்கள் அரசியல் எதிரிகளை அவர்களை வைத்து கடுமையாக விமர்சனம் செய்ய வைப்பதும், தங்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்தும் பிரச்சார பீரங்கிகளாக அவர்களை பயன்படுத்திக் கொண்டும்....

இப்படியெல்லாம் செயல்படுவதற்காக அவர்களுக்கு ஒன்றிரண்டு எம் எல் ஏ சீட்டுக்களை தூக்கிப் போடுவதும்,  அல்லது இன்னபிற லௌகீக உதவிகள் உட்பட அந்த கட்சித் தலைவர்களின் சாதி வெறி அட்டகாசங்களை கண்டுங்காணாமல் இருப்பதும்.....

என்று ஆளுங்கட்சியான அதிமுகவின் அல்ட்ரா மாடர்ன் ஃபார்முலா தான் இந்தக் கட்டுரையின் முதல் பத்திக்கான காரணமாக சந்தேகம் கொள்ள வைக்கின்றது...!

வேல் முருகன், சரத்குமார், சீமான், தனியரசு...   போன்று இப்படிச் சிலர், திமுக என்ற கட்சி ஆட்சியில் இருக்கும் போதும் சரி, ஆட்சியில் இல்லாத போதும் சரி திமுகவை மட்டுமே வசை பாடுவதும், அதிமுகவை அவ்வப்பொழுது புகழ்ந்து சாமரம் வீசுவதும் அல்லது மறுக்க முடியாத அதிமுகவின் தவறுகளுக்குக் கூட பட்டும் படாமல் ஒரு சில துறை சார்ந்த அதிகாரிகளை கண்டித்து கடந்து போவதுமாக இருப்பதைக் கொண்டே இந்த வாதத்தை நாம் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். 

இவர்களின் இந்த மாதிரியான போக்கினால் இது வரையிலும் அதிமுகவின் எதிர்க்கட்சிகள்... குறிப்பாக திமுக போன்ற கட்சிகள் மட்டுமே காயங்களை சுமந்து வந்த நிலையில்...  இதன் எல்லை எது என்பதை தற்பொழுது தமிழகம் அதாவது பொது மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடிக்க வந்து விட்ட கதையாக....

நடிகர் சங்க தேர்தலில் இதுவரை இல்லாத இயல்பாக, மிக அறுவருக்கத்தக்க வகையில் சாதியை முன்னெடுத்து ஒரு சாரார் மிகக் கேவலமாக, அடாவடித்தனமாக பேசி வந்ததும்...

தங்கள் அலுவலக வாசலை ஒட்டி வாகனங்களை நிறுத்திய கீழ் நடுத்தர வர்க்கத்து விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வாதாரமாக விளங்கக் கூடிய இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதும்...

அதை சட்ட ரீதியாக காவல்துறை பாதுகாப்புடன் அணுகிய அந்த அப்பாவிகளை காவல் துறையினர் முன்பே அரிவாள், உருட்டுக்கட்டை போன்றவற்றால் ஒரு சாதிக்கட்சியினர் கொடூரமாகத் தாக்கியதும்...

அதைவிடக் கொடுமையாக அப்படி தாக்கியவர்களை காவல்துறையினர் கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்துவதும்,  காவல் துறையினரையே அந்த ரௌடிகள் எச்சரிப்பதும்....

இவை அனைத்திற்கும் மேலாக சீமான என்ற கட்சித் தலைவர், ஒரு தொலைபேசி உரையாடலில், ஒரு சாதி நபரை தரக்குறைவாக பேசியும், தன் சாதியை உயர்த்திப் பிடித்தும், அடுத்து அவர் சீமானை கேவலமாகப் பேசியும்....  அதற்கு மீண்டும் சீமான் அதை விட கேவலமாக பதிலளிப்பதும் என்று....

ஒரு அசாதாரண சூழல் தமிழகத்தில் நிறுவப்படுவதை தற்பொழுது நுண்ணியமான அரசியல் நோக்கர்களால் உணரமுடிகிறது.  ஆனால் இதுவரையிலும் இப்பிரச்சினைகள் குறித்து அரசு மௌனமாய் இருப்பது,...

இந்த சாதி அடிப்படையிலான உரையாடல்கள் மூலம் தமிழகத்தில் மிகப் பலமான இதுவரையிலும் கண்டிராத சாதி மோதல்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயத்தை அடிமனத்தில் உருவாக்குகிறது.

அதிமுக ஆட்சியின் செயலற்ற தன்மையையும், அதன் மீதான மக்கள் அதிருப்தியும், அதை அழகாக திமுகவின் வருங்காலத் தலைவர் அறுவடை செய்து வருவதையும், நேர்மையான வழியில் எதிர்கொள்ள இயலாத ஜெயலலிதா அரசு, இப்படி சாதி மோதல்களை தமிழகம் முழுவதும் உருவாவதன் மூலம், மக்கள் கவனத்தை திசை திருப்பும் குயுக்தியை கையாள்கின்றதோ என்று தான் பொதுவான அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகின்றது.

எது எப்படி இருந்தாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக..   நடுவில் கோவை குண்டு வெடிப்புக் கலவரமும் அதைத்தொடர்ந்தான பாஜகவின் கோவை மண்டல வளர்ச்சியையும் தவிர்த்து வேறு எந்த சாதி மத கலவரங்களும் மக்களை பாதிக்காத நிலையில்...

இப்பொழுது தமிழகத்திற்குப் புதியதான...  தமிழகம் தழுவிய  இடைநிலை சாதிகளுக்கிடையிலான மோதல் உருவானால், அது தமிழகத்தில் வசிக்கும் அனைத்துச் சாதி மதத்தைச் சேர்ந்த அப்பாவி பொது மக்களையும், தத்தமது வீடுகளை விட்டே வெளியில் கால் வைக்க பயப்படும் சூழ்நிலையை உருவாக்கி விடுவதோடு,  தமிழகத்தை 100  ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் ஆபத்தும் இருப்பதை ஒவ்வொரு தமிழக குடிமகனும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது..!

பேயாட்சி செய்தால்...   பிணம் தின்னும் சாத்திரம்...

எவ்வளவு தொலைநோக்கிலான சொல்லாடல் என்பது இப்பொழுது புரிகிறது...!2 comments:

ராஜி said...

எங்க பக்கத்து வீட்டுக்கு அவங்க சாதி சார்ந்த சங்க புக் மாசா மாசம் வரும். அதுல முருகரையே நம்ம ஜாதி” நம் குலத் தோன்றல்ன்னு சொல்றாங்க. சாதி எல்லாத்துலயும் கலந்துடுச்சு.

கொக்கரக்கோ..!!! said...

@ராஜி,

விரைவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், வ.உ.சிதம்பரம் பிள்ளை... வரிசையில் முருகப் பெருமானையும் ஒரு சாதி சங்கத்தின் புரவலராக அறிவித்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது..!