Friday, September 14, 2018

திமுகவை எப்படித்தான் வீழ்த்துவது?


திமுகவை எப்படித்தான் வீழ்த்துவது?
அதன் புதிய தலைவரை எப்படித்தான் முன்னேற விடாமல் தடுப்பது?!
இது தான் இன்றைய மத்திய, மாநில பாசிச ஆட்சியாளர்கள் முன் இருக்கும் ஒரே கேள்வி மற்றும் கவலை மற்றும் ஆராய்ச்சி..!கடந்த நாலரை ஆண்டுகளாக மத்தியில் பாஜகவும்... ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுகவும் ஆண்டு கொண்டிருக்கின்ற நிலையில்....
ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக என்னென்ன காரணங்களைச் சொல்லி திமுக ஆட்சியை தமிழகத்திலிருந்து ஊடகங்களின் துணைக் கொண்டு அப்புறப்படுத்தினார்களோ.... என்னென்ன காரணங்களைச் சொல்லி மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சியை அப்புறப்படுத்தினார்களோ....
அந்த காரணங்கள் அனைத்துமே ஒரு மாய வலை தான், ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெறும் காற்றடைத்து பலூன் தான்.... இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் அவைகள் அனைத்துமே பச்சைப் பொய்கள் தான் என்பதை இப்பொழுது தான் மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள்..!
2011க்கு முன்னதாக திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு இவர்கள் மிகப் பெரிய அளவில் பரப்புரை செய்த ஒன்றிரண்டு குற்றச்சாட்டுகளைப் பற்றி மட்டும் நாம் இங்கே பார்த்தால்...
ஒன்று..., இலங்கைப் பிரச்சினையில் திமுக ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்பதும்... இரண்டாவதாக 2ஜி என்ற விஷயத்தில் உலக அளவிலான மாபெரும் ஊழலை திமுகவினர் செய்து விட்டார்கள் என்று பரப்புரை செய்ததுமே ஆகும்.
ஒன்று உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் பிரச்சினை, இன்னொன்று ஊழல் பிரச்சினை.
இது போன்று ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவுக்கு எதிராக திரளுகின்ற அளவிற்கு இல்லாத ஒன்றை இருபதாகச் சொல்லி மக்களை நம்ப வைத்து ஏமாற்றி, மக்களின் கோபங்களை திமுக மீது திணித்து....
அந்த மனநிலையில் மக்கள் இருக்கின்ற போது, அடுக்கடுக்காக, எந்த அடிப்படை ஆதாரமுமே இல்லாமல் குற்றச்சாட்டுகளை வீசும் போது, அவை அனைத்தையுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பொது விதியின் படி திமுகழகத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரட்டி....
இந்த சரியான தருணத்தில்....
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றும்...., குறுநில மன்னர்களின் அராஜகங்களை ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்மணியால் மட்டுமே அடக்க முடியும் என்று பொய் பரப்புரை செய்தும்...
மக்களின் திமுக மீதான கோபங்களை அப்படியே அதிமுகவுக்கு ஆதரவு மனநிலையாக மடை மாற்றி அதிமுகவை 2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தனர்..!
ஆனால் இந்த ஏழு ஆண்டு காலத்தில் இலங்கையில் தமிழ் ஈழம் மலர்ந்ததா என்பதற்கான விடை எதுவுமே இல்லை. ஈழத்தைக் கூட மலர வைக்க வேண்டாம், ஈழப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய நிலையிலும் கூட, இன்று வரை அவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதையும்...,
இங்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூட எவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது என்பதையும்..., தமிழக கிராமப்புர, அடித்தட்டு வர்க்க மக்களின் மருத்துவப் படிப்புக் கனவில் மண் அள்ளிப்போட்ட மத்திய அரசிடமிருந்து அதை மீட்டெடுக்கும் உரிமை கூட மாநில அரசுக்கு இல்லை என்பதையும்..,
இப்படி நம் தமிழக மக்களுக்குத் தேவையான உரிமைகளையோ, பாதுகாப்பையோ கூட ஒரு மாநில முதல்வரால் போராடியோ, மன்றாடியோ கூட மத்திய அரசிடம் இருந்து பெற முடியாத நிலை தான் இருக்கின்ற போது, அடுத்த நாட்டு உள் விவகாரத்தில் இந்திய அரசாங்கமே கூட தலையிட முடியாத நிலையில், ஒரு மாநில முதல்வரான கலைஞரால் எப்படி நீதியை பெற்றுத் தர முடியும் என்பதை இப்பொழுது தான் மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள்..!
இலங்கைப் பிரச்சினையில் இப்பொழுது தான் மக்களுக்கு உண்மையான புரிதலும் அதில் திமுகவோ கலைஞரோ எந்த துரோகத்தையும் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கவில்லை என்று தமிழக இளைஞர்கள் நம்ப ஆரம்பித்திருக்கும் நிலையில்...
திமுகவை மிகப் பெரும் ஊழல் கட்சியாக சித்தரித்த 2ஜி முறைகேட்டு வழக்கில்... எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்றதோடு மட்டுமல்லாமல், அதில் எங்கே ஊழல் நடந்திருக்கின்றது என்ற கேள்வியையே நீதிமன்றம் கேட்டு, திமுகவின் முன்னால் மத்திய அமைச்சர் ஆ. ராசா அவர்களை முழுமையான நிரபராதி என்று விடுதலை செய்திருக்கின்றது.
அந்த தீர்ப்பு வந்து ஆறு மாத காலங்கள் ஆகியும் இன்று வரையிலும் மத்திய அரசு மேல் முறையீடு செய்யவில்லை என்பதே அது திமுகவுக்கு எதிராக பொய்யாக புனையப்பட்ட கட்டுக்கதை என்பது தெள்ளத்தெளிவாக மக்களுக்கு புரிந்து விட்டது...!
இப்படி திமுகவுக்கு எதிரானவர்களால் புனையப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளால் அதன் பலனைப் பெற்று ஆட்சிக்கு வந்த அதிமுகவின் கடந்த ஏழு ஆண்டுகால ஆட்சியில்....
எத்தனை லட்சம் வேலை இழப்புக்கள்?! எவ்வளவு பெரிய விலைவாசி ஏற்றம்?! எவ்வளவு அதிகமான ஊழல்கள்?! எவ்வளவு கேவலமானதொரு கேடுகெட்ட ஆட்சி?! எவ்வளவு கோமாளித்தனமான அமைச்சர்கள்?! எவ்வளவு முடக்கப்பட்ட திட்டங்கள்?! எவ்வளவு தாரை வார்க்கப்பட்ட உரிமைகள்?! எவ்வளவு அரச பயங்கரவாதங்கள்?! எவ்வளவு அசிங்கமான அரசியல் நிகழ்வுகள்?!
இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு, தினம் தினம் மனம் புழுங்கித் தவிக்கின்றனர்..!
தமிழகத்தின் வளர்ச்சி என்பது திமுகழகம் ஆட்சியை விட்டு இறங்கிய 2011 முதல் முடங்கிப் போனது..! பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்கு படை எடுக்கின்றன. படித்து வெளியேறும் இளைஞர்களுக்கு வேலை இல்லை. பொறியாளர்களுக்கு மதிப்பில்லாமல் அந்தக் கல்லூரிகள் எல்லாம் காற்று வாங்குகின்றன. பணப் புழக்கம் என்பது அறவே இல்லை. நிர்வாகம் என்பது சுத்தமாகக் கிடையாது. இருக்கும் வரை சுருட்டுவது லாபம் என்று முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆடித் தீர்க்கின்றனர்.
யாரும் கோரிக்கையே வைக்காத, தேவையே இல்லாத சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மக்கள் அனைவரும் எதிர்க்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை அரசாங்கம் பாதுகாக்கிறது. அதற்காக மக்களைச் சுட்டுக் கொல்கின்றது..! எங்கு பார்த்தாலும் லஞ்சம், எதிலும் ஊழல்...
முதல்வராக இருந்த ஜெயலலிதா மர்மமாக இறந்து போகின்றார். அவர் ஊழல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளிக்கின்றது. உயிரோடு இருந்தால் அவர் அரசாங்கத்திற்கு 100 கோடி ரூபாய் அபராதம் கட்டிவிட்டு, சசிகலாவோடு சேர்ந்து சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருக்க வேண்டும்..!
பொய்யாக புனையப்பட்ட 2ஜி ஊழலுக்கு எதிராக இந்த ஊழல் குற்றவாளிக்குத் தான் மக்கள் வாக்களித்தார்கள்... முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள் என்பது தான் இதில் வேதனை..!
மாநில அரசில் இவ்வளவு பிரச்சினை என்றால் மத்திய ஆட்சியிலோ மக்கள் வேதனையின் உச்சத்திற்கே சென்று... இப்பொழுது மன் மோகன் சிங்கை வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்..!
ஆக இப்படியான சூழ்நிலையில் தமிழகத்தின் இழந்த பொலிவை, வளர்ச்சியை, வளத்தை, உரிமைகளை மீட்டெடுக்க திமுகவால் மட்டுமே முடியும்.... அரை நூற்றாண்டு நாகரீகமான அரசியல்வாதி, ஆட்சி அதிகாரங்களில் இருந்திருந்தாலும் கறை படியாத கரங்களுடன், அடாவடி, அராஜகம், அத்துமீறல் என்ற எந்த குற்றச்சாட்டும் இல்லாமல், மக்களோடு மக்களாக பயணிக்கின்ற திமுகவின் தலைவர் தளபதியாரால் மட்டுமே முடியும் என்று மக்கள் காத்திருக்கின்ற நிலையில்....
இதைப் புரிந்து கொண்ட, உணர்ந்து கொண்ட காவிகள், இவரோடு கூட்டணி வைக்க எத்தனிக்கையில்.... அதை அவர் புறம் தள்ளிவிட்ட நிலையில்....
திமுகழகத்தை மீண்டும் அவதூறுகள் மூலம் அசிங்கப்படுத்தி, இன்னுமொரு முறை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்திடும் நோக்கத்தோடு...
ஊடகங்களின் துணை கொண்டு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்..!
அதிலும் திமுக தலைமை மீது ஒரு சிறு துரும்பைக் கூட தூக்கிப் போட இயலாத நிலையில்.... ஒன்னரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட திமுகழகத்தின் ஏதாவது ஓரிரு நபர்கள் எங்காவது சொந்த காரணங்களுக்காக அடாவடியில் இறங்கினால்... அதை வீடியோ எடுத்து ஊடகங்களில் வைரலாக்கி.... திமுக ரவுடி கட்சி என்று மக்களிடையே பரப்புவதற்கு முனைகின்றனர்..!
அராஜகம், ரவுடித்தனம் என்றால் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை அரசே சுட்டுக் கொன்றதும், ஏர்போர்ட் காவல் நிலையத்தில் கட்சித் தலைவரான தமிழிசை ஒரு சாமானியப் பெண்ணுக்கு எதிராகப் பொங்கியதும்... தங்களை விமர்சித்த கௌரிலங்கேஷ் போன்ற பல பத்திரிக்கையாளர்களை சுட்டுக்கொன்றதும் போன்ற நிகழ்வுகளைத்தான் சொல்ல வேண்டும்..!
மாறாக தங்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினரோ அல்லது முன்னால் பொறுப்பாளரோ கூட பொது வெளியில் அடாவடி செய்தால் அவர்களை கட்சியை விட்டு நீக்குகின்ற தலைமையைக் கொண்டிருக்கும் திமுக எங்கே..?!
அதே சமயம் கட்சியின் தலைமையே ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டும் அந்த ஊழல் குற்றவாளியில் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் மாட்டி வைத்து, ஊழல் செய்வது தப்பில்லை என்று அரசு அதிகாரிகளுக்கு சொல்லாமல் சொல்லி ஊழல் செய்து கொண்டிருக்கும் அதிமுக எங்கே..?!
ஆகவே இந்த முறையும் தமிழக மக்கள் காவிக் கூட்டத்தின் சின்னச் சின்ன உணர்வுச் சீண்டல்களுக்கு அடிமையாகி வாக்குச் சாவடிக்குச் சென்றால், அதன் பிறகு இந்த தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற இயலாது..!


No comments: