Tuesday, July 12, 2011

"இதற்கும் தானே ஆசைப்பட்டாய் கொக்கரக்கோ..."!!!

2011 ஆம் வருடம், ஜனவரி 26 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

முன் குறிப்பு: தலைப்பை பார்த்தவுடன், நான் வலைப்பதிவாளர் ஆன பின்னர் நேற்று முதல் முறையாக தமிழ்மண சூடான இடுக்கை பகுதியில் வந்தமைக்கான பதிவு என்று நினைத்து வந்திருப்பவர்களுக்கு... மன்னிக்கவும், இது வேறு ஒரு விஷயத்திற்கான சுய சொறிதல் பதிவு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

                           *****************

இன்னைக்கு குடியரசு தினம், ஒரு முபபது முப்பத்தியஞ்சு வருஷத்துக்கு முன்ன இதே நாள்ல என்கிட்ட கேட்டா, இத கொடி ஏத்தி மிட்டாய் குடுக்குற நாள்னு தான் சொல்வேன்!

அப்பல்லாம் குடியரசு தினம், சுதந்திர தினம்னா உடனே மனசுக்குள்ள துள்ளலான சந்தோஷம் ஆரம்பிக்கும். பின்ன அது கொஞ்சம் கொஞ்சமா மாறி, ஒருவித வருத்தத்துடன் கூடிய ஏக்கமாக அந்த நாள் முடிவுக்கு வரும்.

சந்தோஷத்துக்கான காரணம் சொல்லவே வேண்டாம், எல்லாருக்குமே கிட்டத்தட்ட அது வாய்த்திருக்கும். முதல் காரணம்னா, அன்னிக்கு ஸ்கூல் லீவு, இரண்டாவது காரணம் அன்னிக்கு ஸ்கூலுக்கு போனா அரை மணி நேரத்திற்கு யார் யாரோ பேசிவிட்டு, மிட்டாய் வேறு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்!

வீட்டுக்கு வரும் வழியில் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றால் அங்கும் கொடி ஏற்றி விட்டு 'சாக்லெட்' தந்து கொண்டிருப்பார்கள். அங்கு சாக்லெட் வாங்க வேண்டும் என்றால் சில பல உள்ளடி அரசியல்(!) வேலைகள் செய்ய வேண்டும். அது என்னன்னா ஸ்கூல்ல மிட்டாய் கொடுத்த அடுத்த வினாடியே அங்கிருந்து 'எஸ்' ஆக வேண்டும். கிராஃட் சார், பி.டி சார் இருவர் கண்களிலும் மண்ணை தூவி விட்டு வருவதில் தான் த்ரில்லே இருக்கு. அதிலிருந்து  இரண்டாவது நிமிடத்தில் முனுசிபாலிட்டி என்று அழைக்கப் படுகிற நகராட்சி அலுவலகத்தில் ஆஜராகி விட வேண்டும். அங்கு ஒரு சின்ன அரசியல் வேலையை கச்சிதமாக செய்தால் வெற்றி நிச்சயம். அது என்னன்னா, எங்கள் வார்டு கவுன்சிலர் தங்கவேல் தேவர் நிற்கிற இடத்திற்கு வேகமாக முன்னேறி(!) அவர் அருகில் நின்று கொண்டால் போதும். பிறகு எல்லாமே தானாக நடந்துவிடும்!! இதுக்கு ஏன் இவ்வளவு முன்னெடுப்புன்னா, ஸ்கூல்ல எல்லாம் வெறும் ஒத்த காசு சாக்லெட் தான். ஆனால் இங்கு பத்து காசு சாக்லெட்! இப்ப சொல்லுங்க இதுக்கெல்லாமா இவ்வளவு கஷ்டப்படுவாங்களான்னு நீங்க நெனச்சது தப்பு தான?!

சந்தோஷத்துக்கான காரணம் எல்லாம் சரிதான். இங்க எப்படி வருத்தம் கலந்த ஏக்கம் எல்லாம் வந்ததுன்னு நெனக்கிறிங்களா? வரேன்! எங்களது ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். கடைக்குட்டியான என்னையும் சேர்த்து நான்கு பிள்ளைகள். தினமும் மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் போது 'வாங்கி தின்பதற்காக' அம்மா கொடுத்தனுப்புவது 5 பைசா! குடியரசு / சுதந்திர தினம் என்றால் முதல் நாள் 5 பைசாவையும் மறுநாள் 5 பைசாவையும் சேர்த்து 10 காசுக்கு ஒரு கொடி வாங்கி சட்டைப் பையில் குத்திக் கொண்டு செல்வோம். இங்கு தான் பிரச்சினையே. கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் துணிக்கொடி வாங்கி குத்திக்கொண்டு வருவார்கள். அது  20 பைசா!

நான்கு நாள் மாலை தின்பண்டத்தை தியாகம் செய்து துணிக்கொடி வாங்கும் அளவிற்கு தியாக மனப்பான்மையும் இல்லை, அதே சமயம் துணிக்கொடி ஆசையையும் மனம் விட்டுத்தருவதாயில்லை. பள்ளியிலும், நகராட்சியிலும் மிட்டாய், சாக்லெட் எல்லாம் வாங்கிய மகிழ்ச்சியில் அடுத்த வருடமும் கொஞ்சம் கூட பிளான் மிஸ் ஆகாமல் இதே போல் இரண்டு இடத்திலும் வாங்கிவிட வேண்டும் என்று சக நண்பர்கள் பேசியபடி வந்து கொண்டிருக்க... என் மனம் மட்டும் அடுத்த வருடம் துணிக்கொடி தான், என்பதில் லயித்திருக்கும். அடுத்தடுத்த வருடங்களில் அதற்கான முன்னெடுப்பைக் கூட்டி அதுவும் சாத்தியமாக, அடுத்ததாகத்தான் அந்த விபரீதமான ஆசை மனதில் ஊற்றெடுக்க ஆரம்பித்தது...

அப்படியே பிளாக் & ஒயிட் படத்தை கட் பண்ணிவிட்டு, கலர் படத்திற்கு வாங்க மக்கா..! சென்ற ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாள், மாயவரத்தில் தற்பொழுது பிரபலமான A.R.C. விஸ்வநாதன் கல்லூரியின் ஆட்சிமன்ற குழு செயலரும் அக்கல்லூரியின் முன்னால் முதல்வருமான, Dr. இளங்கோவன் அவர்களிடம் இருந்து எனக்கு செல்பேசி அழைப்பு. "நீங்கள் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவிற்கு எங்கள் கல்லூரியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறீர்கள், நீங்கள் தான் கொடி ஏற்றி பேச வேண்டும் - சம்மதமா?" என்றார்.

ஆடுகளம் படத்தில் அந்த அழகுப் பெண் தனுஷைப் பார்த்து காதலிப்பதாக சொன்னவுடன், கைலியை தூக்கி விட்டு போடுவார் பாருங்கள் ஒரு ஆட்டம்... அதே நிலை தான் எனக்கும். சரி சார் கண்டிப்பாக வந்துவிடுகிறேன் என்று ஒற்றை வரியில் சம்பாஷணையை உடனடியாக முடித்துக் கொண்டேன்.

அந்த நாள் முதல் எம்.எஸ் அம்மாவின் பிரபலமான "அந்த நாளும் வந்திடாதோ" பாடல் மட்டுமே எனக்கு பிடித்த பாடலாகி விட்டது. 'அந்த' நாளும் வந்தது. இந்த சந்தோஷம் எல்லாம் ஓக்கே தான், ஆனால் மனதிற்குள் ஏனோ ஒரு நெருடல். "இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்" பாணியில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு குடியரசு தினத்தன்று மனதில் எடுத்துக் கொண்ட வைராக்கியம் நிறைவேறும் மகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும், இந்த மரியாதைக்கு நான் முழு தகுதி உடையவன் தானா என்ற கேள்வியும் மனதின் ஒரு பக்க மூலையில் நிலை கொண்டிருந்தது.

என்.சி.சி மாணவர்களால் மேடைக்கு அழைத்துவரப்பட்டு, பின்பு கொடிமர மேடைக்கு சென்று அந்த என்.சி.சி தலைவர் கொடிக்கயிற்றைப் பிரித்து என் கைகளில் தந்து, அதை நான் கீழே இறக்க இறக்க நம் தேசிய கொடி மேலே.. மேலே எழுந்த கம்பீரம் இருக்கிறதே...! அதோடு சேர்த்து என்னையும் தான் அந்த பாரத மாதா உயரே.. உயரே... கொண்டு செல்கிறாள்.

அதன் பிறகு எல்லாமே தன்னிச்சையாக நடப்பது போன்ற உணர்வு. மனதுக்குள் ஒரு அமைதி.., பூரணம்...!

அந்த நிலையிலேயே மேடையில் நின்று மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, இதற்கெல்லாம் நான் எந்த விதத்தில் தகுதியானவன் என்ற கேள்வியோடு மேடையில் அமர்ந்திருக்க, கல்லூரி குழுமத்தின் தாளாளரும், முதல்வரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னை ஏன் சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள் என்ற காரணத்தை எடுத்துரைத்த பொழுது, என் மனதில் இருந்த நெருடல் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, இதைக் காப்பாற்றி, அடுத்த நிலைக்கு செல்ல வேண்டுமே என்ற பயமும் ஜாக்கிரதை உணர்வும் என்னை தொற்றிக் கொண்டது.

நான் பேச வேண்டிய நேரம், அழைப்பும் வந்து விட்டது. ஒரு பத்து நிமிடம் பேசலாம் என்று தான் வ்ந்திருந்தேன். ஆனால் என் மனதிற்குள் ஏற்பட்டிருந்த ஒரு பூரணம், மனப்பாடப் பகுதியை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு, மனதில் தோன்றியதை நேர்மையாகப் பேச வைத்தது. பேச்சை முடித்த போது 40 நிமிடங்கள் ஓடியிருந்தன.

வெளியே வரும் பொழுது, பிளாக் & ஒயிட் காலத்தில், துணிக்கொடி ஆசையும் நிறைவேறிய பிறகு, ஒரு காலத்தில் நானும் ஒரு நாள் தேசியக் கொடி ஏற்றுவேன், அதற்கு என்னென்ன தகுதி தேவையோ அவை அனைத்தையும் உருவாக்கிக் கொள்வேன் என்று மனதிற்குள் உறு ஏற்றிக் கொண்டது நிறைவேறிய திருப்தி.

இந்த விஷயங்களை நான் வலைப்பதிவராக ஆகியிருக்கும் இந்த வருட குடியரசு தினத்தில், உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். திரும்பவும் சொல்கிறேன் இது ஒரு சுயபுராண பதிவு தான். மன்னிக்கவும்.

1 comment:

ராஜ நடராஜன் said...

உங்கள் மலரும் நினைவில் சங்கமித்துக்கொண்டேன்.