Wednesday, August 3, 2011

உத்தமன்...

அவனுடைய வயதை அத்தனை சுலபமாய் யாராலும் கணித்துவிட முடியாது! அந்தக் கட்டிடத்தின் கான்க்ரீட் மேற்கூறை போடுவதற்கான நாள் அன்று தான் குறிக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் மயூரன் கோவிலுக்கெல்லாம் போய் விட்டு, காலை 7 மணிக்கே தன் குடும்ப சகிதமாக அங்கு பிரசன்னமானான். அவனுடைய கண்கள் இஞ்சினியரையும், மேஸ்திரியையும் தேடிக் கொண்டிருந்த போது தான், " ஐயா, ஒரு சின்ன கட்டர், ரெண்டு எம்ப்லிச்சம் பழம், அப்புறம் ஒரு சின்ன துண்டும் கொடுங்க" ன்னு வந்து நின்றான்.

நீ யாருப்பா? உனக்கு எதுக்கு இதெல்லாம்? நானே இஞ்சினியரையும், மேஸ்திரியையும் காணோமேன்னு பாத்துட்டிருக்கேன், 8 மணிக்குள்ளாற பூஜையப் போட்டு முதல் சட்டி காங்க்ரீட்ட போட்டுடனுமேன்னு இருக்கேன்... என்று எரிச்சலாய் அவனைப்பார்த்த போது தான் முழுதாக அந்த உருவம் அவன் மனதுக்குள் வந்தது. என்ன மனுஷன் இவன்? எலும்புக்கூட்டு மேல தோலை ஒட்டவச்ச மாதிரி இருக்கான்?!

தகுதிக்கு மீறின சம்பளத்தை கொடுத்தா இப்படித்தான் இவனுங்க எல்லாம் குடிச்சே தன்னையும் கெடுத்துக்கிட்டு, குடும்பத்தையும் நட்டாத்துல விட்டுடுறாங்க!, அவன் கண்ணப்பாரு, அது இருக்க வேண்டிய இடத்துல ரெண்டு பொந்து தான் இருக்குன்னு நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவன் கிட்ட வந்து முதலாளி, வேலையெல்லாம் முடிஞ்சி கிளம்பறப்போ சம்பளத்துல இல்லாம எனக்கு நீங்க தனியா இருவது ரூவா கொடுத்துடனும் சரியா? என்று சொல்லிக்கொண்டே சிரித்த போது கன்னம் இரண்டும் டொக் என்று உள்ளே போக முன்பக்க பல் மட்டும் தனியாக வெளியே நீண்டது!  அதைப் பார்த்த மாத்திரத்தில் மயூரன் ஒரு விநாடி மிரண்டுத்தான் போய்விட்டான்.

அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமலேயே, இன்னும் வேலையே ஆரம்பிக்கல அதுக்குள்ளாற எக்ஸ்ட்ரா பணம் வேற கேக்குறான் பாரு, இவன் என்னா வேலைய செஞ்சி கிழிச்சிடப் போறான்னு கூட்டிட்டு வந்திருக்காங்க, நமக்கு கணக்கு காமிக்கிறதுக்காக ஒரு ஆளுன்னு கூட்டிட்டு வந்திருக்காங்க, அவன் சம்பளத்துல பாதிய மேஸ்திரி தான் கட்டிங் போட்டுக்குவான்..னு தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டே கான்க்ரீட் போட வேண்டிய முட்டுக்கொடுத்த முதல் தளத்திற்கு வேகவேகமாக வந்தான்.

அங்கு கம்பி கட்டும் ஆட்களும், எலக்ட்ரீஷியனும் மிச்ச சொச்சமிருந்த வேலைகளை செய்து கொண்டிருக்க, என்னப்பா இன்னும் முடிக்கலயா? 20 நிமிஷத்துல பூஜை போட்டாகனுமே என்று சற்று பழைய எரிச்சலை இவர்கள் மேல் காட்ட..., சார் நீங்க பூஜை போட்டு ஆரம்பிக்கறதுக்குள்ள நாங்க எங்க வேலைய முடிச்சிடுவோம், இதப்பத்தி கவலைப்படாம பூஜை வேலைய பாருங்க என்று பதில் வந்தது அவர்களிடமிருந்து.

அந்த நேரத்தில் மேஸ்திரி மூன்று கொத்தனார்களுடன், பூஜை சாமான்கள் சகிதமாக மேலே வர, என்ன செல்வராஜி இப்பத்தான் வர்றீங்க? என்று மயூரன் கேட்க, என்ன சார் பண்றது? கலவை மிஷின், லிஃப்டு, ஒட்ட ஆட்கள் எல்லாரையும் ஒன்னு சேர்த்து கிளப்பிவிட்டுட்டு தான் வர வேண்டியிருக்கு, நான் அங்க போயி கிளப்பிவிடலன்னா வேற யாரவது அவங்க கட்டிடத்துக்கு அந்த கூட்டத்த தள்ளிட்டு போயிடுவாங்க! அதான் லேட்டாயிடுச்சு என்று தன் பக்க நியாயத்தை செல்வராஜ் மேஸ்திரி எடுத்து விட்டான்.

கவலபடாதிங்க சார், கீழ ஒரு சட்டி காங்க்ரீட்ட இளக்க சொல்லிட்டு தான் வந்தேன், இன்னும் அஞ்சே நிமிஷத்துல பூஜை போட்டு முதல் சட்டி காங்க்ரீட்ட போட்டுடலாம், என்று மயூரனுக்கு ஒரு முட்டுக்கொடுத்தும் பேசினான்! அவன் பேசிக்கொண்டே பூஜை ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட அந்த நேரத்திலேயே ஒரு மினி லாரியில் காங்க்ரீட் கலைவை மிஷினும், லிஃப்ட்டும் இருபது ஒட்ட ஆட்களும் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்திற்கெல்லாம் இஞ்சினியரும் மேலே வர அவருக்குப் பின்னால் ஒரு சித்தாள் பெண், ஒரு சட்டி காங்க்ரீட்டை தலையில் சுமந்து வந்தாள். மயூரனுக்கு வாயெல்லாம் பல்! எத்தனை வருட கனவு?! சொந்தவீடு கட்டி குடிபோக வேண்டும் என்பது. அந்தக் கனவு மெய்ப்பட ஆரம்பிக்கும் பொழுது, கட்டப்படும் வீட்டின் சில முக்கிய நிலைகளைக் கடக்கும் பொழுது ஏற்படும் ஆனந்தம் தான் அந்த சிரிப்பு! அதை சரியான நேரத்தில் ஆண்டவனை துணைக்கழைத்து ஆரம்பிக்க வேண்டுமே என்ற எண்ணம் சரியாக நிறைவேறும் பொழுது ஏற்படும் ஒரு பூரிப்பு அது!!

குறித்த நேரத்தில் பூஜை போடப்பட்டு மயூரன் அவன் மனைவி, மகன் எல்லோரும் ஆளுக்கு ஒரு கரணை அந்த கலவையை எடுத்து ஈசான்ய மூலையில் வைக்க.., சரி சீக்கிரமா மிஷின் லிஃப்ட்டல்லாம் ரெடி பண்ணுங்கப்பா என்ற சத்தத்துடன் மேஸ்திரி கீழே இறங்க ஆயத்தமானார். பிறகு மயூரன், கிச்சனில் தன் மனைவி சொன்ன சில மாற்றங்களைப் பற்றி இஞ்சினியருடன் பேசிக்கொண்டிருக்க, அந்த எலும்புக்கூட்டு மனிதனைப்பற்றி இஞ்சினியரிடம் சொல்ல நினைவுபடுத்தினாள் அவன் மனைவி. ஆமா சார், இந்த மேஸ்திரி இத்துப் போன ஆளுங்கள எல்லாம் கணக்கு காமிக்கிறதுக்காக அழச்சிட்டு வந்திருக்கான், மத்த வேலைன்னா கூட பரவாயில்ல ஆனா இந்த புரோ போடுற வேலைக்கு நல்ல ஆளுங்களை அழைச்சிட்டு வரக்கூடாதான்னு அங்கலாய்த்துக் கொண்டான்.

அவரும், அப்படி எல்லாம் எதுவும் இருக்காது சார், இனி இதே மாதிரி நடக்காம நான் பார்த்துக்கறேன் என்று பொதுவாக சொல்லிவைத்தார். அவர் மேலே லிஃப்ட் ஃபிக்ஸ் பண்ணும் இடத்துக்கு நகர்ந்ததும், இவரும் சேர்ந்து கூட்டுக் களவாணித்தனமாத்தான் செய்றாங்க போலருக்கு என்று மயூரன் தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டே, ஆனா நாம இப்படி கண்கொத்திப் பாம்பா இருந்து ஒவ்வொரு தப்பையும் சொன்னா தான், இவங்க உஷாரான ஆளுங்கன்னு அடுத்த தடவை இந்த மாதிரி பண்ணமாட்டாங்க என்று தன்னோட பல்முக விஷய ஞானத்தையும்(?!) மனைவியிடம் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தான்! அவளுக்கும் தன் கணவனை நினைத்து கண்ணுல ஜலம் வச்சிண்டு, தாலிய எடுத்து கண்ணுல ஒத்திக்காத குறை தான்!!

அடுத்த அரை மணி நேரத்தில் முதல் பக்கெட் காங்க்ரீட் குழம்பு லிஃப்ட் வழியாக மேலே வந்து அங்குள்ள மேடையில் கொட்டவும், அதை இருவர் கை தள்ளு வண்டிக்கு இழுத்துவிட்டு பின்பு கீழே கம்பிகளுக்கு மேல் இரும்பு தகட்டைப் போட்டு அதன் மேல் தள்ளிக் கொண்டு போய் ஒரு மூலையிலிருந்து கொட்ட ஆரம்பித்தார்கள். குறைவான எந்திர வசதிகளை வைத்துக் கொண்டு அதிக மனித வளங்களை பயன்படுத்தி ஒரு கடுமையான வேலையை எவ்வளவு நாசுக்காகவும், விரைவாகவும் செய்யப் பழகிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்! என்று ஒரு மாதிரி அதிசய ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மயூரன்.

காங்க்ரீட் போட்டு முடியும் வரை மேலேயே இருந்து சரியான கனத்தில் முழுவதும் சீராகப் போடுகிறார்களா? ஒருவர் அருகில் நின்று கொண்டு கம்பியால் குத்திக் கொண்டே காற்றுக் குமிழிகள் ஏற்படாமல் கலவையை கம்பிகளுக்கு கீழே இறக்கிவிடுகிறார்களா? என்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்தபடியே தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருந்தான் மயூரன்! ஒரு வழியாக எல்லாம் சுபமாக நடந்து கொண்டிருக்க.. லிஃப்ட் மேடைப் பலகை வைக்கப்பட்டிருந்த இடம் மட்டும் தான் பாக்கி. அங்கேயேயும், அது அகற்றப்பட்டு பக்கெட் மட்டும் மேலே வந்து நேரடியாக கலவையைக் கொட்டியது.

ஆனால் தொடர்ந்து இப்படி பறந்து வரும் சிமெண்ட்டை சுவாசிக்கும் பொழுது நாசி மற்றும் தொண்டையெல்லாம் எரிய ஆரம்பித்தது. லேசாக தொண்டையில் சளி உற்பத்தியாக இரண்டு மூன்று தும்மல் போட்டு காறித்துப்பிக் கொண்டிருந்தான். அவன் மனைவிக்கும் அதே பிரச்சினை வந்துவிட்டது போல் தெரிந்தது. இருவருமே ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டது, "நம் சொந்த வீட்டிற்காக இந்த ஒரு நாள் கஷடத்தைக் கூடவா தாங்கிக்க முடியாது" என்பது போல் இருந்தது!

அந்த நேரத்தில் தான் மேஸ்திரி.., ஏய்..மிக்ஸிங்க ஏண்டா மாத்துறீங்க? மணல் ஜாஸ்த்தியா இருக்கு, சிமெண்ட்ட ஏத்துங்கடா என்று சத்தம் போட்டு பக்கெட்டை கொட்டவிடாமல் கீழே அனுப்பினார். அதற்குள் மயூரன் தன் மனைவியிடம், இன்னும் 20 சதுர அடிதான் பாக்கியிருக்கு, நீ பார்த்துக்க, நான் கீழ போயி அந்த மிக்ஸிங்க பாத்துக்கறேன்னு சொல்லிட்டு கடகடன்னு கீழிறங்கி கலவை போடும் இடத்திற்கு வந்தான். அதற்குள் இறக்கிவிடப்பட்ட பக்கெட் கலவையை மிஷினுக்கு மாற்றி ஒரு பாண்டு சிமெண்ட்டை கொட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் வந்து, ஏம்ப்பா இவ்ளோ நாழி சரியாத்தான செஞ்சிட்டிருந்தீங்க? கடைசி நேரத்துல போயி சொதப்புறீங்களே? இன்னும் அஞ்சு நிமிஷத்துல வேலை முடியப்போவுது பார்த்து பண்ணுங்கப்பா, ரூஃப் முக்கியம் இல்லியா? என்று பரிதாபம் தொனிக்கும் குரலில் கேட்டான்.

தப்பா எடுத்துக்காதீங்க சார், சிமெண்ட்டு கொடுக்கறவர் ஒண்ணுக்கு இருக்க போயிட்டாரு, ஒரு பாண்டு தான் பாக்கி, அவருக்காக பார்த்தா பக்கெட் மேல அனுப்ப முடியாதுன்னு தான் தூக்கி விட்டுட்டோம், அடுத்ததுல சரி பண்ணலாம்னு நெனச்சோம் அதுக்குள்ள மேஸ்திரி மேலேருந்து சத்தம் போட்டு கீழ அனுப்பிச்சிட்டாரு என்றான். ஏம்ப்பா ஒரு ஆளு கொஞ்சம் வெளிய போயிட்டா ஒரு பாண்டு சிமெண்ட்ட இன்னொருத்தர் போட்டு ஏத்த மாட்டீங்களா? கொஞ்சம் கோபமும் வருத்தமுமாகவே மயூரன் கேட்டான்.

சார்.., அதுக்குத்தான் காலைலயே ரெண்டு எம்ப்ளிச்சம் பழம் கேட்டேன், கொடுத்திருந்தா இந்த பிரச்சினை வந்திருக்காது! பரவாயில்ல விடுங்க அதான் சரிபண்ணியாச்சே என்று பக்கவாட்டிலிருந்து குரல் வரவே, சட்டென்று திரும்பினான மயூரன்.

நம்ம கதையின் அறிமுக நாயகன், தன்னுடைய டொக்கு விழுந்த கன்னத்தோடு முன்பல்லை வெளியே நீட்டி சிரித்துக் கொண்டிருந்தான்! உடம்பு முழுக்க சிமெண்ட். அந்த பொந்துக் கண்களில் இன்னும் அதிகமாக சிமெண்ட் அப்பியிருக்கவே, விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவனது கண்கள் இப்பொழுது பளபளவென்று தெரிந்தன!! ஒரு பெரிய படுதாவை விரித்து அதன் மேல் நின்று கொண்டிருந்தான். ஐந்தாறு மூட்டை சிமெண்ட் பிரித்து கொட்டப்பட்டிருந்தது அதன்மேல் தான் அவன் நின்று கொண்டிருந்தான்.

சார் எம்ப்ளிச்சம்பழத்த கட் பண்ணி இங்கன வச்சிக்குவேன். தாகம் எடுத்தா தண்ணி குடிக்காம ஒரு மூடிய எடுத்து நாக்குல ரெண்டு சொட்டு விட்டுப்பேன். தாகம் கொறஞ்சிடும், ஒண்ணுக்கு வராது. ஆனா காலைல முதலாளி கொஞ்சம் கோவமா இருந்தீங்களா, பூஜை போடுற நேரத்துல ஏன் தொந்தரவு செய்யனும்னு அப்படியே வேலைல இறங்கிட்டேன். அதான் இப்ப அடக்க முடியாம போயிட்டு! தப்பா எடுத்துக்காதீங்க முதலாளி. என் பொழப்பு தான் சிமெண்ட்ட சுவாசிச்சி சுவாசிச்சே இப்புடி ஆயிடிச்சு, ஏன் அவங்களையும் இதுல கை வக்க சொல்லணும்? அதான் நான் வேற யாரையும் இத தொட விடுறதில்ல... என்று சொல்லிக் கொண்டே சிமெண்ட் குவியலிலிருந்து ஒரு பாண்டு அள்ளி மிஷினில் கொட்டச் சென்றான்!!

அடுத்த பாண்டு அள்ள வந்தவன் பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்த மயூரனிடம், கவலைய விடுங்க  முதலாளி, இன்னும் கொஞ்ச நாள்ல இதுக்கும், பறக்காம கொட்டுற மாதிரி ஒரு மிஷின கண்டுபிடிச்சிடுவாங்க நம்ம பசங்க! என்று சொல்லிவிட்டு, வேலை முடிஞ்சோடுன எம்ப்ளிச்சம்பழ காசையும் சேர்த்து எனக்கு இருவத்தச்சு ரூவாயா கொடுத்துடனும் சரியா? என்று கேட்டுக்கொண்டே டைம் மிஸ் ஆகிவிடக்கூடாதே என்று அவசரமாக அடுத்த பாண்டு சிமெண்ட்டை அள்ள ஆரம்பித்தான்.

அந்த ஒரு சில நிமிடங்களில் எண்ணற்ற உணர்ச்சிக் கலவையோடு நின்று கொண்டிருந்த மயூரன், உன் பேர் என்னப்பா? என்று கேட்கவே அவன் திரும்பி "உத்தமன்" முதலாளி என்று சொல்லிவிட்டு சிமெண்ட்டை அள்ள ஆரம்பித்தான்...!!

11 comments:

மதுரை சரவணன் said...

super..vaalthtukkal

அபி அப்பா said...

:-(((((((( பாவம் அந்த உத்தமன். அவன் குடியிருப்பில் நூத்துக்கு ஐந்து உத்தமன்கள் இதே போல உண்டு. தினம் தினம் பத்து கிராம் சிமெண்ட் அவர்கள் நுரையீரல் மேல் படிந்து கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். என்ன செய்வது. fools build the house wise man living என எங்க கம்பனி டைரக்டர் அடிக்கடி சொல்வது தான் நியாபகம் வந்தது:-(

சேலம் தேவா said...

அருமையான சிறுகதை..!!தொய்வில்லாத எழுத்துநடை..!! மேலும் இதுபோன்ற கதைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

கொக்கரக்கோ..!!! said...

வாருங்கள் மதுரை சரவணன் & சேலம் தேவா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

sultangulam@blogspot.com said...

நல்ல படைப்பு. விளிம்பு நிலை மனிதர்கள் அது இது என்று இல்லாமல் சாதாரண நடையில்

manjoorraja said...

முடிவு கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும் என எதிர்ப்பார்த்திருந்தாலும், கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சௌம்யன்.. முதல் முறையாக உங்கள் தளம் வருகிறேன்.

வந்ததும்.. உணர்ச்சிப் பூர்வமான ஒரு கதையினை கொடுத்து.. அசத்திட்டீங்க.

அடுத்தவரும் தன் போல் ஆகி விடக் கூடாது என்று.. என்னும் அந்த ஏழைக்கு.. உண்மையில் பொருத்தமான பெயர் தாங்க.

பகிர்வுக்கு நன்றி! :)

கொக்கரக்கோ..!!! said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. திரு. சுல்தான், திரு. மஞ்சூர் ராஜா, மற்றும் ஆனந்தி.

கொக்கரக்கோ..!!! said...

கருத்துக்கு ரொம்ப நன்றி அபிடாடி!

நிகழ்காலத்தில்... said...

கதை மாதிரி இல்லை., நிஜமா நடந்தது மாதிரி இருக்கு..

யதார்த்தமான நடை
வாழ்த்துகள் கொக்கரக்கோ.

bandhu said...

என்ன ஒரு பிரமாதமான நடை.. நல்லா எழுதியிருக்கீங்க..