Friday, August 28, 2015

இரும்பு மனிதர்களால் தகர்க்கப்படும் மோடியின் கோட்டை..!


நாற்பது சதவிகிதத்திற்கும் சற்று அதிகமான குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்.., ஏழு கேபினட் அமைச்சர்கள்..., ஒரு முதல்வர்...
இவை அனைத்தும், குஜராத் மக்கள் தொகையில் 15 லிருந்து 20 சதவிகிதம் மட்டுமே இருக்கும் பட்டேல்களுக்கு பாஜக கொடுத்திருக்கும் பரிசு..!! இதைத் தவிர்த்து வல்ல்பபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை...  அவர் பெயரில் அகமதாபாத் பன்ன்னாட்டு விமான நிலையம்..., இத்தியாதிகள்...
இப்படியாகவெல்லாம், ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மையப்படுத்தி, கேஸ்ட் போலரைசேஷன் அரசியல் மூலம் குஜராத்தில் கடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி வாகை சூடிய பாஜகவுக்கு... அங்கே மூடு விழா ஆரம்பமாகிவிட்டது போலத்தான் தோன்றுகிறது.... இன்றைக்கு ஊரடங்குச் சட்டத்தின் மூலம் அனைத்தையும் மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் குஜராத் அரசை பார்க்கும் பொழுது..!!
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த பொழுதும், வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த பொழுதும்....
இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக மிகக் கடுமையாக பொங்கி போராட்டம் நடத்திய வட இந்திய மாணவர்களில்... பட்டேல் சமூகத்தினரின் பங்களிப்பு தான் பிரதானமானது..!!
ஆனால் இன்றைக்கு அதே பட்டேல்கள், ஹர்திக் பட்டேல் என்ற 22 வயது இளைஞனின் தலைமையில், தங்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று அதி தீவிர போராட்டத்தை முன்னெடுத்து, ஒட்டுமொத்த குஜராத்தையே இன்றைக்கு ராணுவத்தைக் குவித்து ஊரடங்குச் சட்டம் போடுமளவிற்கு முடக்கிப் போட்டிருப்பது தான் வேடிக்கை..!!


இட ஒதுக்கீடுகளுக்கு ஆதரவானவர் காங்கிரஸ்... எதிர்ப்பாளர் பாஜக என்ற அடிப்படையில் தான், கால் நூற்றாண்டுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த பட்டேல்கள், பாஜக பக்கமாக தங்கள் ஆதரவு கூடாரங்களை மாற்றும் படி வலை விரித்து பலனும் கண்டது பாஜக.!
இட ஒதுக்கீடு கூடாது என்று தங்கள் அரசியல் களத்தையே மாற்றிக்கொண்ட, குஜராத்தின் செல்வந்தர்களாகவும், பெரு வியாபாரிகளாகவும், அதிகாரபலம் கொண்டவர்களாகவும் விளங்கிய அந்த பட்டேல்கள்... இன்றைக்கு தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது??
பெரும் தொழில் வளர்ச்சி என்று காட்சியமைக்கப்பட்ட குஜராத்தின், தொழில்கள்... குறிப்பாக பட்டேல்கள் வசமிருந்த வைரம் மற்றும் இன்னபிற தொழில்கள் பெருமளவில் சமீபகாலத்தில் காற்று வெளியேற்றப்பட்ட பலூன் போன்று முடங்கிப் போனதன் விளைவே...
...இனி தொழில் செய்து பிழைப்பதை விட, இது வரை நமக்குத் தேவையில்லை என்று தட்டிக்கழித்த அரசு வேலை வாய்ப்புக்களில் நுழைந்தால் தான் தங்கள் வருங்கால சந்ததிகள் தப்பிக்க முடியும் என்ற ஐயத்தினால் தான், பட்டேல்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று களமிறங்கிவிட்டார்கள்..!!
இதில் பாஜக இரு வெவ்வேறு பாடங்களை படிக்க வேண்டியிருக்கின்றது. ஒன்று: ஜாதிகளை மையப்படுத்தி அரசியல் செய்து ஆட்சியைப் பிடிப்பது... இரண்டாவது: எதார்த்தத்திற்கு மீறிய மாய பிம்ப வளர்ச்சியை மக்கள் முன்னே நிறுத்தி, ஆட்சியைப் பிடிப்பது..!
இவை இரண்டுமே வெறும் குறுகிய கால பலன்களை மட்டுமே தரும் என்பதை இனியாவது பாஜக புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக இரு வாரங்கள் முன்பு மதுரையில் மையம் கொண்ட அமித்ஷா தேவேந்திர குல வேளாளர்களைக் கொண்டு, ஒரு பிரித்தாளும் அரசியலை முன்னெடுத்ததைச் சொல்லலாம்..!!

இதில் இன்னொரு கருத்தும் பலமாக முன் வைக்கப்படுகின்றது. மேல் ஜாதிக்காரர்களையும் இட ஒதுக்கீடு கேட்டு போராட வைப்பதன் மூலம்...  படிப்படியாக இடஒதுக்கீட்டை நிர்த்துப்போக வைக்கும் ஒரு சூழ்ச்சியாகவும் கூட இது பார்க்கப்படுகின்றது. 

ஒரு வேளை பாஜக அப்படியான முயற்சியில் இறங்கியிருந்தால், ஜோடிக்கப்பட்ட போராட்டம் இத்தனை உணர்வுப்பூர்வமாக கொந்தளித்திருக்க முடியாது என்பதும், அதில் பட்டேல்களைத் தவிர வேறு யாரும் பாதிக்கபடவில்லை (உயிரிழப்பு) என்பதும், கருத்தில் கொள்ளப்பட்டு, பாஜக நிலைமையின் வீரியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.!

ஜாதி, மதம், வெற்று விளம்பரம், இந்தி, சமஸ்கிருதம், மனு தர்மம் இதையெல்லாம் விட்டொழித்து... மக்களுக்கு சேவை செய்யும் உண்மையான எண்ணத்துடன் செயல்பட்டால் மட்டுமே இனி பாஜக பிழைக்கும்...!!


No comments: