Friday, September 30, 2011

உள்ளாட்சித் தேர்தலும்.. இயற்கை விதியும்..!!

கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக தமிழக அரசியலை உள்ளிருந்து உற்று நோக்கி வரும் என்னுடைய கணிப்பின் படி தமிழகத்தைப் பொருத்தவரை திமுக தான் தனிப்பெறும் கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் எம்ஜிஆர் அப்பொழுதைய காலகட்டத்தில் தனக்கென்று (நீண்ட பாரம்பரியம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகான தொடர்ந்த 20 வருட ஆட்சியினால்) 15 லிருந்து சில தொகுதிகளில் 20 சதவிகிதம் வரையிலும் வாக்கு வங்கியை வைத்துக் கொண்டிருந்த காங்கிரஸை நிலையான கூட்டணிக் கட்சியாக வைத்துக் கொண்டிருந்ததால் தனிப்பெறும் கட்சியான  திமுகழகத்தை வெற்றி கொண்டு வந்தார்.

ஆனால் எம்ஜிஆர் மறைவிற்குப் பின் அனைத்து கட்சிகளும் தனித்து நின்ற போது திமுக அமோக வெற்றி கண்டது. அடுத்ததாக ஜெயலலிதா அதே பழைய எம்ஜிஆர் ஃபார்முலா படி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து வெற்றியை ஈட்டிய நிகழ்வும் நடந்தது. அதன் பிறகு முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் பெரும் அணியுடன் (தமாகா)  கூட்டணி கண்டு திமுக அமோக வெற்றி கண்டது. அடுத்ததாக ஜெயலலிதா அதே பாணியில் (தமாகா வுடன் கூட்டணி போட்டு) வென்ற விபத்து நடந்தேறியது.

அதன் பிறகு தெளிவாக சுதாரித்துக் கொண்ட திமுக தலைவர் அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் நல்ல நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டு நிலைத்த கூட்டணியை உருவாக்கி,  தொடர்ச்சியாக இரண்டு பாராளுமன்றம், ஒரு சட்டமன்றம் மற்றும் ஒரு உள்ளாட்சி தேர்தல்களில் அமோக வெற்றி கண்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் தான் காங்கிரஸ் கட்சி இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களிடம் மிகப்பெறும் வெறுப்பைச் சம்பாதித்ததும், விஜயகாந்தின் தேமுதிக என்ற காங்கிரஸுக்கு மாற்றான ஒரு கட்சி உருவானதும் நிகழ்ந்தது.


கடந்த தேர்தலில் இதை மிகச்சரியாக கணித்துச் செய்தாரா அல்லது வேறுவழியின்றி செய்தாரா என்று தெரியாது ஆனால், இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து மிகப் பெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்டுவிட்டார் ஜெயலலிதா.


ஆனால் வயதின் காரணமாகவோ அல்லது வேறு சிலபல நிர்பந்தங்களின் காரணமாகவோ வெற்று வேட்டான காங்கிரஸை உதறிவிட்டு, தனித்தோ அல்லது வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோ குறைந்தபட்சம் கௌரவமான எதிர்கட்சி அந்தஸ்தையாவது அடையும் வாய்ப்பையும் தவறவிட்டுவிட்டார்.


ஒரு வேளை இப்பொழுது செய்ததைப் போன்று அப்பொழுது காங்கிரஸை கழட்டிவிட்டிருந்தால் 'உறுமீனுக்காக' ஒற்றைக்காலில் தவம் செய்துகொண்டிருந்த அதிமுக அதை கொத்திக் கொண்டு சென்று, தேமுதிக தனித்து விடப்பட்டு, அக்கட்சி திமுகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரித்து.... இன்று அதிமுக பெற்றிருக்கும் அதே வெற்றியை திமுக பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும்.!


ஆனால் இயற்கையின் விதி என்று ஒன்று இருக்கிறது.., அதனால் திட்டமிடப்பட்ட, ஒரு நாடகத்தின் முடிவை மாற்றும் சக்தி எவருக்கும் இல்லை. இப்பொழுது அதே "இயற்கை" தனது காய்களை ஒரு நான்கு மாதங்களுக்குப் பிறகு மாற்றி வைத்திருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது!!

பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

1 comment:

பெம்மு குட்டி said...

நல்ல அலசல்தான் :-))) ஆனா சட்டமன்ற தோல்விக்கு ஒரேஒரு காரணமா காங்கிரஸ் கூட கூட்டணி வைச்சதுதான்னு சொல்லுறது எனக்கு சரியா படல.... குருஜி ஒரு பஸ்ஸுல சொன்ன மாதிரி நம்ம மக்கள்ஸ்ஸெல்லாம் தடித்தோல் தாண்டவராயனுங்க ...... ஈழந்தான் (காங்கிரஸ்) தான் காரணம்னா 2009 பாராளுமன்ற தேர்தல்லே தோத்துருக்கனும்.....​... :-))))))

2006-2011 ஆட்சியில் உயர்மட்ட தலைவர்களின் சாதனைகளும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்னு நீங்க சொல்லியிருந்தா, உங்களுக்கு ஒரு சல்யுட் அடிச்சிருக்கலாம் ;-))))