Wednesday, December 21, 2011

சசிகலா - டு - சோ ..... கைமாறிய "கைப்பாவை"...!!!


கடந்த மூன்று நாட்களாகவே தமிழக அரசியல் களத்தை அதீத அமைதியுடன் கொந்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் ஜெயலலிதா - சசிகலா பிரிவு! ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களும்  இதை எந்த மாதிரி தொனியில் செய்தியாகத் தொகுக்க வேண்டும் என்று கூடப் புரியாமல் ஒரு வித பிதற்றல் செய்தியாகத்தான் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் தமிழகத்தில் மட்டும், ஜெயலலிதா ஆட்சிக்கு வர தீயாய் வேலை பார்த்த குறிப்பிடத்தக்க முக்கிய ஊடகங்கள் மட்டும், தெள்ளத்தெளிவாக ஒரே தொனியில், மக்கள் மனதில் 'இந்த' மாதிரியான கருத்து தான் பதியவைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரே அலைவரிசையில் கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.



அதாவது, ஜெ விடமிருந்தான சசி பெயர்ச்சி, அதிமுகவுக்கும், தமிழகத்திற்கும் அமோக பலன்களை வாரிக் குவிக்கப் போகின்றன. இதுவரையிலும் போயஸ் கார்டனிலிருந்து வெளிப்பட்ட அருட் கடாட்சத்தை வாசலிலேயே நின்று தடுத்தாட்கொண்டிருந்த  'சசி பகவான்'  "சோ"கால்டு பூஜை புணஸ்காரங்களாலும், மோடி வித்தையாலும் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு விட்டபடியால், அந்த அருட்கடாச்சமானது இனி நேரடியாக தமிழக மக்களை சென்றடைந்து, தமிழர்கள் தம் வாழ்வில் இனி எல்லா நலமும் வளமும் பெற்று, பால் விலை, பஸ் கட்டணம் குறைக்கப்பட்டு, மின் கட்டணமும் பழைய நிலையிலேயே தொடர்ந்து, இனி 24 மணி நேரமும் தடையில்லா மின்னொளியில் நனைந்து, ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் அனைத்து அரசுத்துறை வேலைகளையும் முடித்துக் கொள்ளும் பெரும் பாக்கிய நிலையை அடைந்து...... இப்படியாக இன்னும் பல கிடைத்தற்கரிய நன்மைகளையெல்லாம் பெற்று சீரும், சிறப்புடனும் வாழப்போவதாகத் தான் செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

சரி விஷயத்திற்கு வருவோம். பெருவாரியான மக்களால் தங்கள் மாநிலத்தை சிறப்புடன் ஆள்வதற்கு ஒப்புதல் கொடுத்து அமர்த்தப்பட்டுள்ள முதல்வரும், அவருடைய 25 வருடகால நெருங்கிய தோழியும், உடன்பிறவா சகோதரி என்று அவர் வாயாலேயே புகழப்பட்டவ்ரும், தன் கணவரை விட்டுப் பிரிந்து முதல்வர் வீட்டிலேயே வசித்து வருபவருமான சசிகலாவும் பிரிந்து விட்டதாக செய்தி வந்துள்ளது.

அதாவது வெளிப்படையான எந்த காரணமும் சொல்லப்படாமல், சசிகலாவும் அவர் குடும்பத்தினர் பதினான்கு பேரும், முதல்வர் வீட்டிலிருந்தும், அதிமுக விலிருந்தும் நீக்கப்பட்டதாகவும், அவர்களிடம் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் முதல்வரால் அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.

இது முதல்வர் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் சாதாரண ஒரு நிகழ்வாக ஊடகங்கள் செய்தி வெளியிடுமேயானால் யாரும் இதை பெரிதாக பேசப்போவதில்லை. அதற்கான உரிமையும் இல்லை. ஆனால் முதல்வர் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வை, அரசியல் நிகழ்வாக உருவகப்படுத்தி, இந்நிகழ்வால் தமிழகத்திற்கு அனேகம் கோடி நன்மைகள் வருவது மாதிரியான தோற்றம் ஏற்படுத்தப்படும் பொழுது தான், பொது மக்கள் இவ்விஷயத்தில் தங்களது கவனத்தையும், சந்தேகத்தையும் பதிய வைத்து, இதன் மீதான விமர்சனத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகி விட்டது.


சசிகலா வெளியேற்றத்தினால் அனேகம் நன்மைகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்று பரப்புரை செய்யப்படும் அதே நேரத்தில்..., அவர் முதல்வர் வீட்டில் தங்கியிருந்த காலங்கள் அனைத்திலும் ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போதெல்லாம், தமிழகத்திற்கு அனேகம் பாதகங்கள் நடை பெற்றிருக்கிறது என்று தானே அர்த்தமாகிறது?! அப்படியானால் அந்த பாதகங்களுக்கும், பேரிழப்புகளுக்கும் முதல்வரும் உடந்தை என்பது போல் தானே பொருள் கொள்ளப்படும்?!

சரி முதல்வருக்கு தெரியாமலேயே இவ்வளவு காலமும் தவறு நடந்திருக்கிறது என்றால், இந்த முதல்வரை இனியும் எப்படி நாம் நம்ப முடியும்?! அதிகாரிகளோடும், கட்சியினரோடும், ஏன் மக்களோடும் எந்த நேரடித் தொடர்புமே வைத்துக் கொள்ளாத, திறமையற்ற அல்லது சோம்பேறித்தனமான அல்லது பொறுப்பற்ற சுகவாசியான முதல்வரை இனியும் எப்படி நம்புவது?



போகட்டும், முதல்வர் தன்னிச்சையாக முடிவெடுத்து இந்த சீர் திருத்தத்தை செய்ததாக செய்தி வந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், பத்திரிகையாளர் சோ முயற்சியினால், குஜராத் முதல்வர் மோடி ஏற்பாட்டில் தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஊடகங்கள் சொல்கின்றன.

மேலும் சசிகலா இடத்திற்கு சோ வும் அவர் புதல்வரும் வந்திருப்பதாகத் தான் செய்திகள் வருகின்றன. முன்பு சசிகலாவைத் தேடிச் சென்ற கூட்டம் இப்பொழுது மெல்ல மெல்ல துக்ளக் அலுவலகம் நோக்கி செல்ல ஆரம்பித்திருப்பதும்... அங்கு காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருப்பதும்... தமிழகத்தின் அதிகார மையம் சசிகலா & கோ வின் கைகளிலிருந்து சோ & கோ வின் கைகளுக்கு இடம் மாறியிருக்கிறது என்றும்... நம் முதல்வர் இன்னமும் இடம் மாறிய "கைப்பாவையாக"த் தான் இருக்கிறார் என்பதும் தான் நிதர்சனம்.


 
நல்லதோ கெட்டதோ, தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த ஒருவர் தான் தங்களை தன்னிச்சையாக ஆள வேண்டும் என்பது, சாதாரண தமிழக பொது ஜனத்தின் எதிர்பார்ப்பு என்பதை முதல்வர் இந்த ஐந்து வருடங்களிலாவது உணர்ந்து கொள்வாரா?!

9 comments:

MOHAMED MOHIDEEN said...

simply super

கிராமத்தான் said...

ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி புரிந்த இத்தனை ஆண்டுகளும் சசி மாபியா கும்பல் மக்களை கொள்ளை அடித்தது, மிரட்டி, ஏமாற்றி அநியாயமாக அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரித்தது, கட்ட பஞ்சாயத்து மூலம் கபளீகரம் செய்தது, அரசாங்க இயந்திரத்தை தவறான வழிகளில் இயக்கி, எந்தவித முன்னேற்ற பணிகள் எதுவுமே நடைபெறாமல் கஜானவை மட்டும் காலி செய்தது, ரௌடி ராஜ்யம் செய்தது, நீதிக்காக போரடுபவர்களை மிரட்டுவது, மற்ற சாதியில் உள்ள ரௌடிகளை மட்டும் போட்டுத் தள்ளுவது (Monopoly in Rowdism), ரேட் நிர்ணயம் செய்து பட்டியலிட்டு அரசாங்க ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் மாறுதலுக்கு வசூல் செய்வது, மணல் கொள்ளை, காண்டிராக்ட் கொள்ளை, நல்ல முறையில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த தொழிலாக இருந்தாலும் மிரட்டியே அடைந்து கொள்வது, சாதிக்காரனுக்கு மட்டுமே சகல உரிமைகள் என ஆட்டம் போட்டது, ஏரியாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட சொந்தக்காரன் மூலம் மாமுல் வசூல் செய்வது – மந்திரி, உயர் அதிகாரிகள் மாதம் தோறும் கப்பம் கட்ட சாதிக்கார P.A மூலம் கறாராக வசூல் செய்வது, ஒத்துவராதவர்களுக்கு கல்தா கொடுப்பது, ஊடகங்களில் இவர்களின் அக்கிரமங்களைப் பற்றிய எந்தவிதமான செய்திகளும் வராதபடி சாதிக்காரர்களில் ஆளுமையில் வைத்திருப்பது - இன்னும் இது போன்ற காரியங்களால் தமிழக மக்கள் கடும் தொல்லைகளுக்கும், பாதிப்பிற்கும் ஆளாகி இருந்ததை ஜெயலலிதா தன் சுயநலத்தால் ‘எனது தோழி’ என்று மறைத்து, பாதுகாத்து துரோகம் செய்து வந்தார்.
ஆனால், ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து ஜெயலலிதாவைக் கடிக்கும் போது தான் சோ, மோடி, சு. சாமி எல்லாம் ஆஜாராகி இருக்கிறார்கள். ஏனெனில் இவர்களுக்கும் இதுநாள் வரை எந்தவித பாதிப்பும் இல்லை; ஜெ போய்விட்டால் தமது ராஜ்யத்திற்கே ஆபத்து என்று உணர்ந்து, இப்போது தான் ‘விழித்து’ சசி கும்பலை விலக்கி வைத்துள்ளார்கள். இது நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் வேண்டினாலும், தற்காலிக ஏற்பாடா என்று இன்னும் பலருக்கு ஐயம் உள்ளது.
உண்மையாக மக்களைப் பற்றி, தான் அடி வாங்கிய பிறகு உணர்ந்தவராக இருப்பின், மாவட்டம் தோறும் ‘சசி கும்பல் மீட்பு நீதிமன்றம்’ அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுத்து, கொள்ளை போனதை முறையிட ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தாமதமில்லாமல் ரௌடிகளை அழித்திட வேண்டும்; கட்ட பஞ்சாயத்து கும்பலை நசுக்க வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; உடமைகளை திரும்பக் கிடைத்திட சட்டப்பூர்வமாக செய்திடல் வேண்டும். மொத்தத்தில் தமிழகத்தில் மக்கள் சுதந்திரமாக இயங்க வழி செய்திடல் வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், ஜெயலலிதா புண்ணியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் மக்களின் சாபம், தூபம் சும்மா விடாது.

நாய் நக்ஸ் said...

:))))

SUPER

அபி அப்பா said...

சபாஷ்! ஒரு நல்ல பதிவுக்கு 2 பின்னூட்டம். எதிர்த்து வாதாடுபவர்கள் கூட வரவில்லை என்னும் போது அழகாக தெரிகின்றது ஏதோ ஒன்று!

Swami said...

அருமையாக சொல்லியிருக்கீங்க. இந்த கூட்டத்தில் இருந்து இன்னொரு கூட்டத்திடம் அகப்பட்டு இருக்கிறது நம்ம புரட்சி தலைவி. இதனாலே நாட்டுக்கு எந்த உபயோகமும் இல்லை. எப்பவும் extra constitutional authority தான் நம்மை ஆளுவது!!!

sathishsangkavi.blogspot.com said...

அண்ணே பொறுத்திருந்து பார்ப்போம்... யார் கைப்பாவை என்று...

Prakash said...

Good write up...

muthu said...

kallar admk ku good bye sollitu,ini avaa admk nu sollungo.idhu super

Unknown said...

அன்புடைய நண்பரே! உங்களுடைய பதிவினை ரசித்து! உங்களுக்கு சகபதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஜெர்மானிய Liebster Blog விருதினை என் வலைதளத்தில் வழங்கியுள்ளேன் தாங்கள் ஏற்றுக்கொண்டால் எனக்கு மிக மகிழ்ச்சியிளிக்கும் உங்களை அன்புடன் எதிர்பார்த்து

அன்புடன்
வீடு K.S.சுரேஸ்குமார்

"விருதுகள் எனும் ஊக்கமருந்து!