Monday, July 9, 2012

ஸ்பெக்ட்ரம் என்னும் வர்ணஜால வான வேடிக்கை!!



இன்றிலிருந்து சற்றேரக் குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பற்றவைக்கப்பட்டது தான் ஸ்பெக்ட்ரம் என்னும் வான வேடிக்கையின் திரி! அது கொஞ்சம் கொஞ்சமாக புகைய ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பற்றிக் கொண்டு விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
மக்கள் அதை அண்ணாந்து வேடிக்கைப் பார்த்து, கைக்கொட்டி ரசித்துக் கொண்டிருந்த வேலையில், சத்தமில்லாமல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் வேட்டு வைக்கப்பட்டு, அந்தக் கட்சியின் மீது, வழக்கம் போல ஒரு சீசனல் களங்கமும் சுமத்தப்பட்டிருந்தது.

இடையில் என்னென்னவோ நடந்து, இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஊடகங்களால் மக்களுக்கு சுட்டிக்காட்டப்பட்ட முன்னால் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரும், திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான ஆ. ராசாவும், கலைஞரின் புதல்வியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பல சட்ட போராட்டங்களை நடத்தி 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொருவராக ஜாமீனில் வெளியே வர, இவ்வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் ஆ. ராசா மட்டும், குற்றப்பத்திரிகையின் கிட்டத்தட்ட பாதி அளவிற்கான விசாரணை நீதிமன்றத்தின் வாத பிரதிவாதங்கள் கடந்து விட்ட நிலையில், ஜாமீனுக்கு விண்ணப்பித்து, வெளியே வந்திருக்கிறார்.

ஆரம்பத்திலிருந்தே இந்த வான வேடிக்கையைப் பார்த்து உற்சாகமாக கைத்தட்டியவர்கள் அனைவருக்குமே, இது ஒரு நிமிடக் கூத்து தான்  வர்ண ஜாலாம் எல்லாம் முடிந்து, பற்றி எரிந்ததின் மிச்சமாக கொஞ்சூண்டு கரித்துகள்கள் மட்டுமே கீழே வரும் என்பதை உணர்ந்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

ஏனெனில் சிறைக்குச் செல்வதற்கு முன்பும் சரி, தன்னுடைய மத்திய கேபினட் அமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு சிறைக்குச் சென்ற அந்த நாட்களிலும் சரி, சிறையிலிருந்த கால கட்டத்திலும் உடனடியாக ஜாமீனுக்கு முயற்சிக்காமல், வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க அவர் கொடுத்த ஒத்துழைப்பும் சரி...... அந்த காலகட்டங்களில் அவர் முகத்தில் தெரிந்த ஒரு பயமற்ற நம்பிக்கை ஒளியும், நேர் கொண்ட பார்வையும், தெளிவான பேச்சும்.......

உண்மையான நடுநிலை எண்ணம் கொண்ட எவரையுமே, ஆரம்பத்தில் அவர் மேல் ஏற்பட்டிருந்த கட்டுக்கடங்காத கோபத்தை தவிடு பொடியாக்கி, இனி என்ன நடக்கப்போகிறது என்ற தெளிந்த சிந்தனையோடு அவரை உற்று நோக்க வைக்க ஆரம்பித்திருக்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சமீபத்தில் வந்திருக்கும் ஆ. ராசா அவர்களின் பேட்டி, அதிமுக ஆதரவு மனப்பான்மை கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அனைத்து உண்மையான நடுநிலையாளர்களையும், வான வேடிக்கை கொண்டாட்ட மன நிலையை எல்லாம் புறம் தள்ளி விட்டு, தீவிரமான எண்ண ஓட்டங்களுடன் அல்லது பார்வையுடன், இந்த 2ஜி வழக்கின் அடித்தளத்திலிருந்து தெளிந்த நீரோடை போன்ற மனநிலையுடன் ஆராய வைத்திருக்கின்றது.

அவருடைய பேட்டியிலிருந்து அவர் சொன்ன ஒரு சில விஷயங்கள், என்னைத் தனிப்பட்ட வகையில் வெகுவாக பாதித்து விட்டன. நிச்சயம் அவர் இவ்விஷயத்தில் தவறிழைத்திருக்க வாய்ப்பில்ல என்ற எண்ண ஓட்டத்தையும் என்னுள் அவை ஏற்படுத்தி விட்டன. அந்த மாதிரியான அவருடைய சில பதிகளை அல்லது விளக்கத்தை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

    1. முதலாவதாக, 2ஜி இல் மொத்தமிருந்த 100 மெகா ஹர்ட்ஸில் 35 ஐ ஐந்து நிறுவனங்கள் மட்டும் பயன்படுத்தி அவர்களே விலை நிர்ணயம் செய்து மக்களுக்கு வழங்கி வந்தனர். மீதியில் 30 ஐ ராணுவம் பயன்படுத்தியது போக பாக்கி 35 MH ஐ அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருந்ததை எடுத்து கையாண்டு, அதிக போட்டியாளர்கள் என்ற சித்தாந்தத்தின் மூலம் அடித்து நொறுக்கப்பட்ட விலை என்ற சேவையை பொது மக்களுக்கு வழங்கும் அந்த முடிவை தான் எடுத்தது தான் இன்றைய தன்னுடைய சங்கடங்களுக்கு எல்லாம் காரணியாக அமைந்துவிட்டது என்று அவர் சொன்னபோது, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

    2. இரண்டாவதாக, சி ஏ ஜி என்ற அமைப்பின் நோக்கமே, அது கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில், அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவிலும் ஏற்படும் லாப நஷ்டத்தை அவ்வப்பொழுது கணக்கிட்டு, இது தேவையா? அல்லது இதில் மாற்றம் கொண்டு வரலாமா? அல்லது மக்கள் நலன் என்ற அடிப்படையில் அப்படியே தொடரலாமா? என்பதை பொது கணக்குக் குழுவும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவும், அமைச்சரவையும் பிறகு பாராளுமன்றமும் விவாதித்து ஒரு முடிவை எட்ட வேண்டும்.

ஆனால் இந்திய வரலாற்றில் முதன் முறையான முன்னுதாரணமாக  அந்த சிஏஜி அறிக்கையைக் கொண்டு,  ஒரு குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு அது விசாரணைக்கு வந்திருக்கிறது என்றால், அந்த சி ஏ ஜி அமைப்பையே விசாரணைக்காக வழக்கின் உள்ளே கொண்டு வர முடியும் என்ற அவரது பேச்சு, பல விதமான சிந்தனைகளை ஏற்படுத்தியதோடு ஒருவித பிரமிப்பையும் உண்டு பண்ணியதை மறுக்க இயலாது.

   3. மூன்றாவதாக, ஊடகங்கள் பரப்பி விட்டதன் அடிப்படையில், பொதுமக்களுக்கு, இவ்வழக்கு சம்பந்தமாக பெரிய அளவில் சந்தேகத்தையும், உறுத்தலையும் ஏற்படுத்திய விஷயம் என்றால் அது ஏலமுறையில் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யாமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்தது மற்றும் அப்படிச் செய்யும் போது, முன்னால் அறிவித்த தேதியை முன் கூட்டியே முடித்துக் கொண்டது... என்று இவையெல்லாம் தான் அரசுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியதாக நம்பப்பட்டது.

இவற்றுக்கு பதிலளித்த ஆ. ராசா அவர்கள், அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக ஏல முறை என்பது அதுவரையில் நடமுறையில் இல்லாத ஒன்று, முதலில் வருபவர்களுக்கு முதலில் ஒதுக்குவது என்ற நடைமுறையைக் கொண்டுவந்ததே, 1999 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு  தான். அது பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கின்ற விஷயம்.

அதை மாற்ற வேண்டுமானால் மீண்டும் அமைச்சரவை இது பற்றி விவாதித்து, நடைமுறையை மாற்றி அதுவும் பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஏற்றுக் கொண்டபிறகு தான் நடைமுறைக்கு வரும்.

இந்த இடத்தில் தான் சி ஏ ஜி என்ற அமைப்பின் தேவையே வருகிறது. அதாவது இப்படிச் செய்தால் அரசுக்கு நட்டம் அதனால் ஏல முறையில் விடலாம் என்று நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவுக்குத் தான் தன்னுடைய அறிக்கையை அது  அனுப்ப வேண்டும். அந்தக் குழுவுக்கு அது சரி என்று பட்டால், அது அமைச்சரவையில் வைத்து, விவாதிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றி, பின்னர் அது பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

ஆனால் பொதுக் கணக்குக் குழு, சி ஏ ஜி இன் இந்த அறிக்கையை நிராகரித்து விட்டது. ஏனெனில், தொலைத் தொடர்புத் துறை என்பது ஒரு சேவை நிறுவனம். இந்தியாவின் குக்கிராமங்களுக்கும் இச்சேவை சென்றடைய வேண்டும், அதுவும் மிகக் குறைந்த விலையில் அவர்களுக்கு இச் சேவை வழங்கப்பட வேண்டும் என்பதால், ஏல முறை இவ்விஷயத்தில் ஒத்து வராது என்று வாஜ்பாய் காலத்திலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது. என்று தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டது.

ஆக முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற விஷயத்தில் எந்த முறைகேட்டினையும் ஆ. ராசா அவர்கள் செய்துவிடவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டது.

அதில் அடுத்ததாக ஏற்படும் சர்ச்சை அல்லது சந்தேகமான,  விண்ணப்பத் தேதியை முன் கூட்டியே மாற்றியமைத்ததன் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு இவ்வாறாக பதிலளிக்கிறார் ஆ. ராசா.

எங்களிடம் இருப்பது 65 MH தான் அதற்கு தேவையானதை விட மிக அதிகமாக மொத்தம் 525 விண்ணப்பங்கள் முன்னதாகவே வந்து விட்ட நிலையில் கடையைத் திறந்து வைப்பதில் என்ன பயன்? 

மேலும் ஒவ்வொரு விண்ணப்பமும் வந்து சேர்ந்தவுடன் அதற்கு வரிசை எண் அளிக்கப்பட்டு விடும். அந்த வரிசையின் அடிப்படையிலேயே நாங்கள் அலைக்கற்றையை (இருப்பு இருந்த வரை) 122 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். அந்த வரிசையில் நான் மாற்றம் செய்திருந்தால் மட்டுமே அது குற்றமாகும்.  அதாவது ஏ, பி, சி, டி க்கு மட்டும் தான் கொடுப்பதற்கு சரக்கு இருக்கிறது என்கிற போது நான் W, X, Y, Z க்கு கொடுத்திருந்தால் தான் அது குற்றமாகும்.

ஆனால் நான் ஏ, பி, சி, டி க்கு மட்டும் தான் கொடுத்திருக்கின்றேன். அதனால் அவ்விஷயத்தில் என் மீது எந்த குற்றமும் இல்லை என்றும் ஆணித்தரமாக தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

    4. அடுத்து நான்காவதாக, முன் அனுபவம் இல்லாத பல கம்பெனிகளுக்கு அலைக்கற்றையை ஒதுக்கியது ஏன்? என்ற கேள்விக்கு....

ஆரம்பத்திலிருந்தே இந்தியாவில் முன் அனுபவம் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றால், இந்தியாவில் எந்த நிறுவனமுமே அதற்கு தகுதியானதாக இருக்காது. ஏர்டெல், ஏர்செல், டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் என்று எதற்குமே முதன் முதலில் இதைக் கொடுத்த போது முன் அனுபவம் இருந்தது இல்லை.

மேலும் அப்படி முன் அனுபவம் உள்ளவர்களுக்குத் தான் அலைக்கற்றையை ஒதுக்க வேண்டும் என்று, இந்திய தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டதிட்டங்களின் எந்த இடத்தில் எந்தக் காலத்திலும் குறிப்பிடப்படவில்லை. எனவே இதுவும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று புறம் தள்ளினார்.

    5. அடுத்து ஐந்தாவதாக, இப்படி ஏலம் எடுத்த நிறுவனங்களில் பல, பங்கு வெளியிட்டு காசு பார்த்தன, கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டன, கொஞ்சம் பங்குகளை விற்று காசு பார்த்தன என்றெல்லாம் விமர்சனம் வருகிறதே என்ற கேள்விக்கு......,  அவர் அளித்த பதில், ச்சே இவ்ளோ சாதாரண விஷயத்தை யோசிக்காம குத்தம் சொல்லிட்டோமே இந்த மனுஷனன்னு தான் எனக்கு தோனிச்சு.

அதாவது, ஒரு நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அரசாங்கத்திடம் அனுமதி வாங்கிச் சென்று விட்டு, வீட்டில் உட்கார்ந்து மணியா ஆட்டிக் கொண்டிருக்க முடியும்?

அடுத்து குக்கிராமங்கள் வரை கொண்டு சென்றால் தான் அதிக வாடிக்கையாளர்களைப் பிடிக்க முடியும். அப்படிப் பிடித்தால் தான், அளவுக்கு அதிகமான (122) போட்டியில் தாக்குப் பிடித்து சம்பாதிக்க முடியும் என்கிற போது, ஒரு டவர் போடவே 60 லட்ச ரூபாய் தேவைப்படும் போது, சென்னை நகரத்திற்கு மட்டுமே 600 டவர்கள் போட வேண்டிய நிலையில், தமிழகம் முழுவதும்......  இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் டவர்கள் போட வேண்டும்? மற்ற செலவுகளையும் செய்தாக வேண்டும்....  இதற்கெல்லாம் பணம் திரட்ட வேண்டாமா?

இது எந்தத் துறையானாலும், எந்த லைசென்ஸ்களை எடுக்கின்ற நிறுவனங்களும் செய்கின்ற இயற்கையான நடைமுறை தானே? அதைத் தான் அவர்கள் செய்தார்கள்.

மேலும் லைசென்ஸ் கொடுப்பதோடு என் வேலை அதாவது தொலைத்தொடர்புத் துறை சார்ந்த வேலை முடிந்து விட்டது. அதற்கு பிறகான, வர்த்தகம் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் எல்லாம், வர்த்தகம் மற்றும் நிதித்துறை யைச் சார்ந்ததாகும். .....!!!!!!!

..... என்று சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத ஊழலைச் செய்தவர் என்று ஊடகங்களாலும், சில ஆதிக்கச் சக்திகளாலும் மிகப் பெரிய அளவில் பரப்புரை செய்யப்பட்டு, களங்கப்படுத்தப்பட்ட திரு ஆ. ராசா அவர்கள்.................

தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தன்னுடைய நேர் கொண்ட பார்வையாலும், ஒளி படைத்த கண்ணினாலும், தீச்சுவாலையாகத் திகழும் தன் அறிவுத் தீயினாலும் சுட்டெறித்து.........

என் பார்வைக்கு தகத்தாய சூரியனாய் தெரிகிறார்........!!!!!

இனி ஸ்பெட்ரம் என்னும் வர்ண ஜால வான வேடிக்கை முடிந்து போய், அந்தப் பொய் ஒளியில் மறைந்திருந்த மெய் ஒளியாம் இரவின் அணையா விளக்காம் சந்திரன் நம் கண்களுக்கு விருந்தாகி.... அதைத் தொடர்ந்து விடிந்தவுடன் வரும் அல்லது விடியலைக் கொண்டுவரும் உதயசூரியன் ஒளியில் உண்மைகள் அனைத்தும் நம் கண்களுக்கு புலப்படும் நாள் அதோ தெரிகிறது!!!!!!!!

2 comments:

kkk said...

Sun TV yum Dinakaran um patra vacha vaana vedikkai, DMK pathavi ezhanthu indru mudivukku varumbothu, neengal Rajavai Dhahadhaya sooriyan endru ellam solli, meendum Kalahathai undu pannatheerhal.I am sure that you know very well that Raja is kariveppillai and not dhahadhaya sooriyan. There is difference between Aandimuthu and Kalaignar.Raja is just Karveppillai only .Arasiyalil ethellam sahajamappa.

Prakash said...

Supper Sowmmiyan...