Saturday, September 8, 2012

சின்னக் குயில் சித்ராவும் இன்ன பிறவும்...!


அது பூவே பூச்சூடவா படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த காலம். தமிழ் திரைக்கு அந்த மாதிரியான கதையும் களமும் புதிது. டப்பிங் மலையாளப் படமென்றால், இளசுகள் எல்லாம் ஒரே கண்ணோட்டத்தோடே காலை காட்சி சென்று ஆதரவு கொடுத்து வந்த  நேரம் அது.

அதனால் ஒரு கட்டத்தில் டப்பிங் கூட தேவைப்படாமல் அப்படியே திரையிட ஆரம்பித்து விட்டார்கள்! அந்த நேரத்தில் ஃபாஸில் அவர்கள் இந்தப் படத்தை தமிழ் டப்பிங்காக வெளியிட்டிருந்தால், இந் நேரம் நதியா,  தமிழ் ரசிகர்கள் மனதில் ஷகீலாவுக்கு போட்டியாக இடம் பிடித்திருப்பார்!

அதைப் புரிந்து கொண்டிருந்ததாலோ என்னவோ ஃபாஸில், அப்படத்தை அப்படியே ரீமேக்கினார். ஹீரோவுக்கான இடத்தில் எஸ்.வி.சேகர் நடித்திருந்தது மட்டுமே அப் படத்தின் ஒரே ஒரு திருஷ்டிப் பொட்டு.

பாலச்சந்தர் எந்த சீனுக்காக இப்படி இரு என்று சொல்லிக் கொடுத்தாரோ தெரியவில்லை. சீரியஸ் சப்ஜெக்ட் என்றாலே, வாயை ஒரு அரை இஞ்ச் அளவிற்கு பிளந்து வைத்துக் கொண்டு, கீழ் உதட்டை துவண்டது போல் மடித்து வைத்து வெறிச் என்ற பார்வையோடு நிற்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். ....  சரி அதை விடுங்கள்.!

அந்தப் படம் எல்லா கோணங்களிலும் வித்தியாசமாகவும், பளீர் என்றும் இருந்ததால், தமிழ் ரசிகர்களில் ஆண், பெண், வயது என்று எந்த வித்தியாசமுமின்றி அனைவரையும் ஒரு சேர கவர்ந்திருந்தது.

அதில் வந்த அத்தனையுமே ரசிக்கப்பட்ட பொழுது, எதேச்சையாக “சின்னக் குயில்” பாடலை அந்தப் படத்தில் பாடி அறிமுகமான (தமிழில்) அதே அடமொழியைக் கொண்ட சித்ராவையும் நம் தமிழ் ரசிகப் பெருமக்களுக்கு ஒரு சேர பிடித்துப் போய் விட்டது.

ஆனால் எனக்கு மட்டும் அந்தக் குரலில் ஏனோ ஒரு ஈர்ப்பு ஏற்படாமலேயே இருந்து வந்தது. சொர்ணலதா அறிமுகமான பிறகு அவரது குரலில் எனக்கு மையல் ஏற்பட்டவுடன், ஒரு கட்டத்தில் இவரது குரல் பிடிக்காமல் கூட போய் விட்டது என்று சொல்லலாம்.

ஏனெனில் தகுதிக்கு மீறிய பாராட்டும், பட்டங்களும் அவருக்கு கிடைத்தது கூட அந்த வெறுப்புக்குக் காரணமாக இருக்குமோ என்று நினைக்கின்றேன். ”பாடறியேன்” பாடலில் கடைசியாக வரும் ஒரு ஜதி கோர்வைக்காக அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஏனெனில் அந்த ஜதி மூன்று பிரிவாக பாடப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். அதைக் கூட நேர்த்தியாக செய்திருக்க மாட்டார்கள். அப்படி இருந்தும், அவருக்கு பாடும் போது மூச்சு வாங்கும்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு பல புதிய பாடகிகளின் வருகையும், அவர்களெல்லாம் அங்கீகரிக்கப்பட்டதும் நடந்தேறிய போது, பாடகி சித்ரா மேல் ஏற்பட்ட வெறுப்பெல்லாம் மறைந்து ஒரு சம நிலைக்கு வந்திருந்தேன்.

ஆனால் இப்பொழுது சூப்பர் சிங்கர் ஜூனியரில் அவர் பாடும் சில சங்கதிகளும், ஆலாபனைகளும் கேட்பதற்கு மிக அலாதியானதாக இருக்கின்றது. இன்னும் செத்த பாட மாட்டாரா என்று காதுகளும் மனமும் தானாகவே ஏங்குகிறது.

சொல்லப்போனால், அவர் வாங்கிய பட்டங்களுக்கெல்லாம் தகுதியானதாக இப்பொழுது தான் அவரது குரல் படிந்து வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. முன்பெல்லாம் மேல் ஸ்தாயியில் அவரால் போகக் கூட முடியாமல் திணறுவது நன்றாகத் தெரியும். ஆனால் இப்பொழுது, அங்கே நின்று நர்த்தனமே ஆடுகிறார். 
                                        

சொர்ணலதாவுக்கு “போறாளே பொன்னுத் தாயி” மாதிரியான, காலத்தை இழுத்து ஒரு தாளம்  அமைத்து, கண்டபடியான உச்சஸ்தாயிக்குச் செல்லும் மெட்டோடு ஒரு பாடலை இவருக்கு ஏ ஆர் ஆர் தந்தால் அது நம் தமிழ் திரை இசையில் ஒரு மைல் கல் பாடலாக அமையும்!

No comments: