Sunday, June 29, 2014

உதயநிதி ஸ்டாலினும் அரசியல் பிரவேசமும்

உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வளர்ந்து வரும் ஒரு நல்ல சினிமா நடிகர். மற்ற நடிகர்களுக்கு இருப்பது போன்று அவருக்கும் ரசிகர் மன்றங்களும், அதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் இருக்கின்றார்கள்.
அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்த தலைவரான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் மகன்.
ஆனாலும் அவர் இதுவரையிலும் நேரடியாக திமுகவின் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் இறங்கியது கிடையாது. அப்படி அவருக்கு ஒரு எண்ணம் எழுந்தால், நேரடியாகவே அவர் திமுக சார்பாக அரசியலில் களம் இறங்கும் முழு உரிமையும் அவரையே சார்ந்தது. அவர் அரசியலில் இறங்கக் கூடாது என்று சொல்லும் எந்த அதிகாரமும் எவருக்குமே கிடையாது.
ஆனால் அரசியலில் நுழைந்தால் அவரை அக் கட்சியின் தொண்டர்களும் அடுத்ததாக தமிழகத்தின் பொது மக்களும் ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவளிக்கின்றார்களா? அதற்கு ஏற்றார் போன்று அவரும் உழைக்கின்றாரா என்பதும்... கட்சித் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் ம்ற்றும் அவருக்கும் இடையிலான பிரச்சினை.
அவர் சினிமா துறையில் இறங்கி முதலில் பட விநியோகம் செய்தார்... அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்கினார்... அதற்கடுத்தபடியாக கதாநாயகனாக நடிக்கவும் ஆரம்பித்தார். இதில் ஒவ்வொன்றையுமே அவர் செய்ய முற்படும் போதும் அவரை சிலர் விமர்சிப்பதை ஒரு ஆகச் சிறந்த கொள்கையாகவே வைத்துக்கொண்டிருந்தாலும், அவர் ஒவ்வொரு படியிலுமே தெளிவான வெற்றிகளை படிப்படியாக சந்தித்தே வந்து கொண்டிருக்கின்றார்.
அவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களுமே வியாபார ரீதியில் வெற்றிப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் அவர் விநியோகஸ்தர்களை மிரட்டுகிறார்... திரையரங்குகளை மிரட்டுகிறார்... அதனால் தான் படத்தை ஓட வைக்கின்றார் என்றார்கள். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், அவர் மக்களையே மிரட்டி படம் பார்க்க வைக்கின்றார் என்ற அளவிற்கு எல்லாம் எழுதித் தள்ளியதையும், இதே இணையத்தில் நான் தலையில் அடித்துக்கொண்டவாறே பார்த்து கடந்து சென்றிருக்கின்றேன்.
திமுக ஆட்சி போனால், இவரு திரைத்துறையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிடுவார் என்றவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்று, இவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களுமே அதிமுக ஆட்சியில் தான் வெளி வந்து வெற்றியடைந்திருக்கின்றது.
இந்த அதிமுக ஆட்சியிலும் அவர் படத்தயாரிப்பையும், விநியோகத்தையும் கைவிடாமல் அதையும் வெற்றிகரமாகவே செய்து வருகின்றார்....
இந்நிலையில், இன்றைக்கு அவர் மனைவியின் பிறந்த நாள். அதற்கு வாழ்த்துச்சொல்லி அவர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களோ, திமுகவைச் சார்ந்த சிலரோ இங்கே பதிவிட்டால், ஏன் சிலருக்கு எரிச்சல் ஏற்படுகின்றது என்றுதான் புரியவில்லை?!
இங்கே நம் இணைய நண்பர்களின் பிள்ளைகள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் இப்படி யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள் என்று எந்த நிகழ்வாக இருந்து அவர்கள் பதிவிட்டாலும், நாம் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இயல்பான வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.
அதே நிலைப்பாட்டின் அடிப்படையில், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை திமுகவின் அடுத்த தலைவராக ஏற்றுக்கொண்டவர்களில் சிலர் அன்பு மிகுதியாலோ அல்லது வேறு ஏதோ சில எதிர்பார்ப்புகளின் காரணத்தாலோ (அப்படியும் சிலர் தவறான எண்ணத்தில் இருக்கலாம்) அவருடைய மருமகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை!
ஒரு கட்சித் தலைவரின் மனைவியோ, மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ எந்தத் தொழில் செய்தாலும் விமர்சிப்பதும், அந்த தலைவர் பிரச்சாரப் பயணம் செல்லும் போது உதவிக்காக பின் செல்வதும், அவர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை கொண்டாடுவதும், அதற்கு யாரேனும் வாழ்த்துச் சொல்வதும்.....
இதெல்லாம் கூடாது என்று சொல்வது என்ன மாதிரியான மனநிலை???
ஒரு கட்சியையோ, அதன் தலைவரையோ விமர்சிப்பதற்கு எவ்வளவோ அளவுகோல்களும், வழிமுறைகளும், காரண காரியங்களும் இருக்கும் போது, இந்த மாதிரியான அவர் குடும்பத்தினர் மீதான விமர்சனம் என்பது வெறும் காழ்ப்புணர்ச்சியாகவே என்னால் கருதமுடிகிறது.
இப்படியே போச்சுன்னாஆஆஆஆ... ஏன்? நான் அரசியலுக்கு வந்தால் தான் தப்பென்ன? என்று கூட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சிந்திக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. அவர் சிந்திப்பது இருக்கட்டும், கட்சித் தொண்டர்களையும், பொது மக்களையுமே அப்படி இந்த நபர்கள் சிந்திக்க வைத்து விடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

1 comment:

இராய செல்லப்பா said...

மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், நீங்கள் பார்த்திருக்கலாம்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர், தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் மேடையில் நிற்கவைத்துக்கொண்டுதான் பேசுவார். குடும்பம் இல்லாமல் தனியாக நிற்கும் வேட்பாளர்களை மக்களும் பத்திரிகைகளும் மதிப்பது கிடையாது. எனவே, தமிழ்நாட்டில் அதுபோல நடந்தால் அதில் என்ன தவறு என்று புரியவில்லை. சொன்னாலும் சொல்லாவிட்டாலும், எந்த ஒரு அரசியல் தலைவரும் தன்குடும்பத்திற்கு நிச்சயம் நல்லதைத்தானே செய்துகொள்ளப்போகிறார்? அதை யாராலும் தடுக்க முடியுமா?