Tuesday, December 16, 2014

தள்ளாடுகின்றனவா.... திராவிடக் கட்சிகள்...?!

திராவிட சித்தாந்தம் இனியும் தேவையா?  திராவிட இயக்க கட்சிகள் தேய்ந்து கொண்டிருக்கின்றதா??....

இப்படியான வாதப் பிரதிவாதங்களை, சமீபகாலமாக ஆரிய அடிவருடி ஊடகங்கள் தொடர்ந்து பரப்புரை செய்து வர ஆரம்பித்திருக்கின்றன.  இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இலகுவாக எதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தி காலூன்ற முடிகின்ற பாஜகவால், தமிழகத்தில் மட்டும் அப்படி இலகுவாக ஒரு சிறிய மாற்றத்தைக் கூட ஏற்படுத்திட முடியவில்லை.

ஊழல், தனி நபர் புகழ் கெடுத்தல், மயக்கும் விளம்பரங்கள்... இப்படி எந்த மாயாஜாலங்களும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற உதவிடவில்லை....!!

இதற்கான காரணங்களை பாஜக ஆராயும் போது தான், தமிழக மக்கள் ஒரு சித்தாந்தத்தின் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதும், அவர்களின் வாக்களிக்கும் முறை என்பது அந்த சித்தாந்தத்தின் வாயிலாக ஸ்கேன் செய்யப்பட்டே பதிவு செய்யப்படுவதும் புலப்பட்டிருக்க வேண்டும்.

அது தான் திராவிட இயக்க சித்தாந்தம் என்ற போதிலும், அதை உடனடியாக ஆரியத்திற்கான எதிர்ப்பு என்ற ஒற்றைச் சாளர பார்வையில் மட்டுமே கணிப்பதும் மிகத் தவறானதாகும் என்பதை இப்பொழுது தான் பாஜக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றது. அந்த சித்தாந்தத்தின் இன்னொரு பரிமாணம் அல்லது முக்கியமான பரிமாணம் என்பது ஆரியத்தின் கபடத்தில் இருந்து இங்கிருக்கும் மற்ற அனைவரையும் ஒரு குடையின் கீழ் நிறுத்தி பாதுகாப்பதுவே... என்பதை மிகச் சமீபத்தில் தான் புரிந்து கொண்டிருக்கின்றது!

அப்படியான திராவிட சித்தாந்தத்தின் பாதுகாப்பில், ஒட்டுமொத்த தமிழக தமிழர்களும் கடந்த அரை நூற்றாண்டில் அடைந்திருக்கின்ற பலன்கள் என்பது அளவிடற்கறியது.

அரை நூற்றாண்டுக்கு முன்னதாக பார்ப்பனரல்லாத அனைத்து தமிழக தமிழர்களின் வாழ்க்கைத் தரமும் இன்றைக்கு அவர்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டிருக்கின்ற கற்பனைக்கெட்டாத வளர்ச்சியையும், ஒவ்வொரு தமிழக இளைஞரும் 50 வயதினைக் கடந்த தங்கள் வீட்டுப் பெரியோரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய அளவில் மற்ற மாநிலங்களோடு நம் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உற்று நோக்கிட வேண்டும்.  கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை கூலி வேலைக்காக் கூட வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருந்த தமிழக தமிழர்களின் நிலை...  இன்றைக்கு தங்கள் வேலைகளுக்கு வெளிமாநில இந்தியர்களை இங்கே கூலி வேலைக்கு அமர்த்தக்கூடிய அளவிற்கு உயர்ந்திருப்பதையும் எண்ணிப்பார்த்திட வேண்டும். உடல்சார் வேலைகளுக்காக மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருந்த தமிழர்கள் இன்றைக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அறிவுசார் வேலைகளுக்காக பெருமளவில் உலகம் முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கின்ற நிலையினையும், உணர வேண்டும்.

ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலான அரை நூற்றாண்டுகால ஆட்சியானது, தவறானதாக இருந்திருக்குமேயானால், இப்படியொரு சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றங்கள் ஒரு சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. 

இதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டுவிட்டிருக்கின்ற பாஜக, ஆரியத்தின் அடிவேர்களான தாங்களே இதை எதிர்த்தால் இங்கே வேலைக்காகாது என்று தான், இங்கிருக்கும் சில சில்லரைகளை கட்சிகள் என்ற பெயரில் துவங்க வைத்து, அவை எல்லாம், திராவிட இயக்கங்களுக்கான மாற்று என்ற கோஷத்தை முன் வைத்து, திராவிட இயக்கங்களை நீர்த்துப்போக வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது.

பாமக, தமாக, தமிழ்தேசியக் கட்சிகள் மற்றும் இன்னபிற சாதிக்கட்சிகள் தான் பாஜகவின் இந்த வலையில் வீழ்ந்து அவர்களுக்காக இங்கே கூலி வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நேற்று புதிய தலைமுறை டீவியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் திராவிடக் கட்சிகள் தளர்ந்து போய்விட்டன என்ற பாமகவின் பாலுவுக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அளித்த ஆணித்தரமான விளக்கங்களுக்கு பதில் சொல்ல இயலாமல், 2ஜி ஊழலை கையில் எடுத்து பாமக பாலு பேசத் துவங்கியவுடன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஊழலைப் பற்றிப் பேசும் தகுதி பாமகவுக்கு கிடையவே கிடையாது என்று அன்புமணி சம்பந்தப்பட்ட ஊழல்களையும், பாமகவின் கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளையும் அப்பட்டமாக பேசிப் பொறிந்துதள்ளிவிட்டார்.

ஆரியம் தற்பொழுது திராவிடத்திற்கு எதிரான மிகப் பெரிய சூழ்ச்சியுடன் களமிறங்கியிருக்கின்ற வேளையில், ஆரியத்திற்கு துணை போகின்ற கோடரிக்காம்புகளான பாமக, தமாக, தமிழ்தேசியம் போன்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் இனிமேல் திமுகவும் அதன் தலைமையும் மிகப் பலமாக எதிர்கொள்ள வேண்டும். அவர்களிடம் மென்மையான எதிர்வினைகள் ஆற்றுவது என்பது திமுகவுக்கு வரும் தேர்தலில் மிகப் பெரும் சேதாரத்தை அளிப்பதோடு, திராவிட சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் சமாதி கட்டுகின்ற சூழலையும் தமிழகத்தில் உருவாகிவிடும்.

திமுகவுக்கு தன்னுடைய எதிரிகள் யார் என்று தெரியும்....   ஆனால் துரோகிகளை உடனடியாக கருவறுக்க வேண்டிய அவசர நிலையில் அது இருப்பதை திமுக தலைமை உணர வேண்டும்!!! 

No comments: