Thursday, November 12, 2015

பீகார் தேர்தல் முடிவுகளும்... ராகுல் காந்திக்கான பாடமும்...!


பீகார் தேர்தல் முடிவுகள் சொல்ற சேதிய வச்சி, யாரு பாடம் படிக்கணுமோ இல்லியோ, ராகுல் காந்தி தான் முக்கியமா படிசிக்கணும்..!

ராகுல் அரசியலுக்கு வந்ததில் இருந்து இப்பொழுது தான் முதல் முறையாக தங்கள் கட்சியின் யதார்த்த பலம் என்ன என்பதை உணர்ந்து, தங்கள் கட்சியை சுறுக்கிக்கொண்டு, பலம்மிக்கவர்களை இணைய வைத்து, அருமையாக கோஆர்டினேட் பண்ணி பீகாரில் வெற்றியை உறுதி செய்திருக்கின்றார்.

இது ஒன்றும் புது ஃபார்முலா கிடையாது. ஏற்கனவே, சோனியா காந்தி கட்சித் தலைவராக அவதாரம் எடுத்து வந்த போது, காங்கிரஸின் நிலை இருந்த கேவலத்தைப் புரிந்து கொண்டு, பிரந்திய கட்சித் தலைவர்களோடு இணக்கமாக இருந்து அவர்களது பலத்தைப் புரிந்து அவர்களுக்கான மரியாதையையும், இடங்களையும் தந்து, பாராளுமன்ற தேர்தல் வரும் போது, அவர்கள் தாமாகவே காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கும் நிலையை உருவாக்கி, பிராந்திய கட்சி தலைவர்களிடம் அரசியல் கடந்து பாசமான நட்புணர்வை பலமாக்கி வைத்து இரண்டு முறை காங்கிரஸை அரியணை ஏற்றினார்.

ஆனால் இரண்டாவது முறை காங்கிரஸுக்கு கிடைத்த கூடுதல் பலத்தை மட்டுமே கண்டு அரசியலுக்குள் முழுமையாக நுழைந்த ராகுல் காந்தி, பிராந்தியக் கட்சிகளை எச்சில் துப்பி வம்பிழுத்து எட்டி உதைத்ததன் விளைவே, கடந்த பாராளுமன்ற தேர்தலில், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி ஆவதற்கே காங்கிரஸுக்கு அல்லுவிட்டுப்போகும் நிலை ஏற்பட காரணமாயிற்று...!!

அதன் பிறகு இப்பொழுது தான் பீகார் தேர்தலில், சரியான முடிவை எடுத்து காங்கிரஸ் கூட்டணி வெற்றி என்ற பேச்சு இந்திய அளவில் எழ வழி வகுத்திருக்கின்றார். இதே நிலைப்பாட்டில் அவர் தமிழக தேர்தலிலும் செயல்பட்டால், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்.

அதற்கு, தமிழகத்தில், தான் கூட்டணி அமைக்கவிருக்கின்ற....

அதாவது சில்லறைக் கட்சிகளோடு சேர்ந்து யாருமே வெல்ல முடியாத ஒரு கூட்டணியை பொழுது போக்கிற்காக அமைக்காமல்...,

வெல்லக்கூடிய வாய்ப்புள்ள, பாஜகவுக்கு எதிர்நிலையில் உறுதியாக இருக்கக் கூடிய கட்சியோடு பலமாக விட்டுக்கொடுத்து கூட்டணியை இப்பொழுது பேசி முடிவெடுத்து, அக் கூட்டணித் தலைமையோடு இணக்கமாக இருக்கின்ற மாநிலத் தலைமையையும் அமர்த்தி, காங்கிரஸ் அந்த அந்தக் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து இப்பொழுதிலிருந்தே பிரச்சாரம், போராட்டம் எல்லாம் பண்ணுகின்ற அஜெண்டாவை முன்னெடுக்க வேண்டும்

அதை விடுத்து, நாளை கூட்டணி அமைக்கவிருக்கும் கட்சியை கடைசி நாள் வரை திட்டிக்கொண்டிருந்து விட்டு, அல்லது அலட்சியமாக நடந்து கொண்டு, அந்த தலைமையினை மதிக்காமல் தன்னிச்சையாக நடந்து கொண்டு, தன் பலத்திற்கு மீறிய தொகுதிகளைக் கேட்டுக்கொண்டு....

இப்படி செய்து கொண்டிருந்தால், தானும் கெட்டு நம்பி வந்தவனையும் கெடுத்தது போலத்தான் ஆகிவிடும். கடந்த 2011 தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்றதன் காரணமே இது தான்.

புத்தியுள்ள புள்ள பொழச்சிக்கும்ன்னு எங்க பக்கத்துல ஒரு சொலவடை உண்டு...!


2 comments:

Anonymous said...

ம்ம்ம்ம் கெஞ்சுங்க கெஞ்சுங்க ....எவனாவுது மசியாரான பாக்கலாம்

Imayavaramban said...

நீங்கள் சொல்ல விரும்புவது, (1)இணக்கமான தலைமை அதாவது இளங்கோவன் மாற்றப்படவேண்டும்.(2)அ.தி.மு.க. தலைமை (இக்கட்டான சூல்நிலை ஏற்பட்டால் ஒழிய)ப.ஜ.க.-வை விரும்பாது! காரணம், இருக்கும் ஓட்டும் போய்விடும் என்பதே! (3) ஆக, அ.தி.மு.க.-வுக்கு விட்டுக்கொடுத்து,இப்போதிருந்தே திட்டமிட்டுப் பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும்! மிகச்சரியான அனுகுமுறை!அல்லது,தி.மு.க-வுடன் இணக்கமாகப்பேசி விட்டுக்கொடுத்து (பாராளுமன்றத்தேர்தலை மனதில் வைத்து)ப்போவதெந்பதே சரியான அனுகுமுறை! செய்வாரா ராகுல்?