Thursday, June 7, 2012

விவசாய தற்கொலைகள் ஆரம்பம் - விழித்துக் கொள்ளுமா ஜெ. அரசு?!

யார் சாபம் வேண்டுமானாலும் பொய்த்துப் போகலாம், ஆனால் தன் ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயின் வயிற்றெரிச்சல், குடி மக்களையும், முடியரசனையும் எரித்து சாம்பலாக்கிவிடும்!

தமிழகத்தில் ஒரு அரசு, அதில் விவசாயத்திற்கென்று தனி துறை, அதில் ஒரு அமைச்சர் அவருக்கு நான்கு உதவியாளர்கள், நூற்றுக்கணக்கான அதிகாரிகள், ஆயிரக் கணக்கான ஊழியர்கள் என்று மாதத்திற்கு ஐம்பது, நூறு கோடிகளை இவர்களுக்காக சம்பளமாகக் கொடுத்தும்.......

வெறும் ஐந்து லட்ச ரூபாய் கடனுக்காக ஒரு விவசாயி, விஷம் அருந்தி தன் உடலை மருத்துவ படிப்புக்கு தானம் செய்வதாக எழுதி வைத்து விட்டு, நடு வீதியில் இறந்து போகிறான்...!!!

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம், பழைய தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியான மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள மாப்படுகை என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்ற விவசாயி தான், தன் உயிரை பலி கொடுத்து... இல்லையில்லை தியாகம் செய்து இந்த அரசுக்கும், விவசாயத்துறைக்கும் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.

நாலு ஏக்கரில் கரும்பை போட்டுட்டு, கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து மூன்று மணி நேரம் கூட மின்சாரம் வராததால், தண்ணீரின்றி பயிர் வாடி சூம்பி விட... அதை தன் கண்ணீராலேயே பாதி எடை தேறினால் போதும் என்று வளர்த்துக் கொண்டு வந்து நிறுத்தினால்......

சர்க்கரை ஆலையில் ஸ்ட்ரைக். இரண்டு மாதம் வெட்டப்படாமல் காய்ந்து அதன் எடை இன்னும் குறைந்து போக.... ஆலை திறந்து விட்டாலும், கரும்பை வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை அதிகாரிகள். நொந்து போய் அலையாய் அலைந்து ஒரு வழியாக அனுமதியைப் பெற்றுவிட்ட அந்த விவசாயி, அதை வெட்டுவதற்கு ஆட்களை அழைத்தால், அதுவும் பஞ்சம்.

கரும்புத் தாளில் சுணையிருக்கும், அது அரிக்கும் என்று தொழிலாளிகள் கூற ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க இயலாமல், அதை எரிய விட்டார் அந்த விவசாயி. எப்படிக் குமுறியிருக்கும் அந்த மனிதனின் மனது?!

அந்தச் சோளை எரியும் போது ஏற்படும் வெப்பத்தில், டன் டன்னாக அடியிலிருக்கும் கரும்பின் சாறும் ஆவியாகி காற்றோடு கலந்திருக்கும். மீதமிருக்கின்ற எடைக்கு காசு கிடைத்தால் போதும், இப்பயிறை விளைவிக்க வாங்கிய கடனையாவது ஒன்றுக்குப் பாதி அடைத்து விடலாம் என்று அதை வெட்டி ஆலைக்கு கொண்டு சென்றால்......

அங்கேயும், இவரைப் போலவே வந்து காத்திருக்கும் விவசாயக் கூட்டத்தின் வரிசையில் கடைசி இடம் தான் கிடைத்திருக்கிறது. பரவாயில்லை என்று காத்திருந்தால், ஒரு வாரமாகியும் கரும்பு வண்டி, ஆலைக்குள் செல்லவில்லை.

இவர் காத்திருப்பார். கடன் காரர்கள் காத்திருப்பார்களா? வெட்டிய கரும்பு ஒரு நாள் காய்ந்தாலும் ஐந்து சதம் எடை இழக்கும். வாரக்கணக்கு என்றால் என்ன ஆகும்?!

கணக்குப் போட்டுப் பார்த்தவருக்கு, கவலையில் தலை சுற்றியது தான் மிச்சம். கால் போன போக்கில் சென்றிருக்கிறார். அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட போது அடைந்திருந்த இடம், சிதம்பரம் அண்ணாமலை நகர். கடிதம் எழுதி சட்டைப் பையில் வைத்து விட்டு, விஷத்தைக் குடித்து.... நிம்மதி அடைந்து விட்டார்.....!!!!!!

பொது மக்களே, ஆட்சியாளர்களே, அரசு விவசாயத்துறை அதிகாரிகளே, அந்த விவசாயியைப் பார்த்து யாரும் அனுதாபப்பட வேண்டாம். நாமெல்லாம் திருந்துவதற்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்து விட்டு அவர் விடுதலை ஆகிவிட்டார்.ஆகையால் நாம் தான் பயப்பட வேண்டும்!!

பற்றியெறிந்த அவரது வயிறும், நெஞ்சமும் நாம் திருந்தும் வரை விடாது. நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்.

ஒரு விவசாயிக்கு அடிப்படையாக என்ன தேவை? தண்ணீர் தான். தன் வீராப்பை எல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு, யார் காலிலாவது விழுந்து அவனுக்குத் தேவையான தண்ணீரை, தேவையான நேரத்தில் அவனுக்கு கிடைக்கும் வழிவகை செய்து தர வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமை.

அது முடியாமல் போனால் தண்ணீருக்குத் தேவையான மின்சாரத்தையாவது அவனுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வழங்கி தண்ணீர் பஞ்சத்தைப் போக்கியிருக்க வேண்டும்.

அடுத்து, விவசாயி என்பவன், மேலும் மேலும் உற்பத்தி செய்து நாட்டை பசியின்றி வைத்திருக்கும் படியான மனநிலையில் மட்டுமே எப்பொழுதும் இருக்க வேண்டும். அவன் விளைவிக்கின்ற பொருளை, விற்று முதலாக்கித் தரும் பொறுப்பை அரசாங்கம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தானே ஆயிரக் கணக்கான ஊழியர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும், கோடி கோடியாக சம்பளம் வாங்குகின்றார்கள்?!

அடுத்ததாக விவசாயம் செய்வதற்கு தேவையான் விவசாயத் தொழிலாளர்கள். இது இன்றைக்கு நம் தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

முன்பு போல இப்பொழுது யாரும் இந்த வேலைக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும், சொகுசாக இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார்கள். கரும்புச் சோலையை எரியவிட்டு, கரும்பு வெட்டும் காட்சியை இதுவரை நாம் பார்த்திருக்கின்றோமா? அல்லது காதால் தான் கேட்டிருக்கின்றோமா? இல்லையே!! பிறகு ஏன் இப்பொழுது மட்டும் இப்படி???

அனைவருக்கும், மூன்று வேலை சாப்பாட்டிற்கான முக்கியத்தேவையான அரிசி இலவசமாக எப்பொழுது கிடைக்க ஆரம்பித்ததோ அப்பொழுதே எல்லோரும் சோம்பேறியாகி விட்டார்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. இதை வெளிப்படையாகச் சொல்வதற்கு சிலர் தயங்கலாம். ஆனாலும் இது தான் உண்மை. 

சரி விவசாயத் தொழிலாளியால் அந்த கஷ்டத்தை தாங்க முடியவில்லை, இனி அந்த வேலையைச் செய்ய மாட்டேன் என்கிற பொழுது எப்படி கட்டாயப் படுத்த இயலும்? என்று சிலர் கேட்கலாம்.

நியாயம் தான். இந்த மாதிரியான சூழ்நிலையை சமாளிக்கத்தானே விவசாயத்திற்கென்று தனியாக ஒரு துறை இருக்கின்றது. எத்தனை கோடி அங்கு புரள்கின்றது தெரியுமா? அந்த வேலைக்குத் தேவையான கருவிகள், இயந்திரங்கள், உபகரணங்களை தருவித்து, அதை உபயோகிக்கும் பயிற்சியினைத் தந்து, தடையின்றி விவசாயம் நடைபெற வேண்டிய வேலையைச் செய்வதற்குத் தானே அவர்களுக்குச் சம்பளம், கிம்பளம் எல்லாம்?


அடுத்ததாக, அனுமதி கொடுத்து வெட்டப்பட்ட கரும்பை வாரக்கணக்கில் காய விட்டது யார் குற்றம்? அதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? யார்? விளைந்த உணவுப் பொருளை வற்றிப்போக வைத்தது......

வற்றிப்போன சாற்றின் மூலம் கிடைக்கும் சர்க்கரைக்கு ஈடாக இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கான, அந்நிய செலாவனி இழப்பு என்ற வகையில் அதை ஒரு தேசிய இழப்பாகத்தானே கருத முடியும்?! இதற்கு யார் பொறுப்பேற்பது?!

சரி இதெல்லாம் போகட்டும், உலகின் முதல் தொழிலும், முக்கியத் தொழிலுமான பசிப்பிணி போக்கும் விவசாயத்தை செய்ததை தவிர வேறெந்த தவறும் செய்யாத ஒரு மனிதனின் உயிர் போனதற்கு யார் காரணம்? யார் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்?

குடி மக்கள் கேட்டால் தான் முடி அரசன் ஆணையிடுவான். ஏனென்றால் அப்படித்தான் பழகியிருக்கின்றார்கள். அல்லது பழக்கப்படுத்தியிருக்கின்றோம்.

இன்னும் ஒரு சாவு கூட நம் தமிழக விவசாய நிலத்தில் விழக்கூடாது. 

அதற்கு குடி மக்களாகிய நாம் தான் பொறுப்பு......


5 comments:

easy baby said...

மனசே வலிக்கிறது ,,,, நெஞ்சு பொறுக்குதில்லையே

கோவை நேரம் said...

இருக்கிற விவசாய நிலங்களை எல்லாம் பிளாட் போட்டால் என்ன ஆவது...?
அப்புறம் இப்போ யாருங்க விவசாயம் பண்ண ரெடியா இருக்காங்க....

Anonymous said...

தலைப்பிற்கேற்றாற் போல, கூவியாச்சு! எத்தனை பேர் உண்மை உணர்ந்து திருந்துவார்கள்? முயற்சிப்போம்! வாழ்த்துக்கள்.....தளராமல் தொடருங்கள்!

கொக்கரக்கோ..!!! said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஈஸி பேபி மற்றும் அட்சயா.

கொக்கரக்கோ..!!! said...

@கோவை நேரம்,

இதேப் போன்று விவசாயம் செய்யவே வழியில்லாத போது, தற்கொலை செய்துகொள்வதை விட ப்ளாட் போட்டு விற்கும் முடிவிற்கு விவசாயிகள் தள்ளப்படுவது தான் உண்மை.

விவசாயிகளிடம் போய் உட்கார்ந்து அதிகாரிகளும், அமைச்சர்களும் பேசி, அவர்களுக்குத் தேவையானதை முழுமையாகச் செய்து கொடுத்து, பிறகு விளை நிலங்களை ப்ளாட் போடு தடைச் சட்டம் கொண்டுவர வேண்டியது அவசரமான அவசியம். இதைச் செய்தால் தான் நம் சந்ததிகள் தப்பிக்கும்.