Monday, June 18, 2012

கலைஞர் V/s கலாம்

இந்தியாவின் முதன்மைக் குடிமகனுக்கான தேடல் அல்லது தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை வழக்கம் போல இதுவும் இன்னுமொரு தேர்தல் தான் என்றாலும் தமிழகத்தில் நிலைமை அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம், கதையாகத்தான் இருக்கிறது, இங்குள்ள கலைஞர் எதிர்ப்புநிலை எடுத்துள்ள ஒரு சாராரின் இது தொடர்பான பேச்சுக்களும், செயல்களும்.

ஆம், குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் அடிபடத் தொடங்கியவுடனேயே, தன் கட்சி எம் எல் ஏக்களும் அமைச்சர்களும், பத்திரிகைகளும் நடத்தும் முகஸ்துதி மேளாவில் தினம் தினம் பரவசப்பட்டு ஏகாந்த மனநிலையில் இருக்கும் ஜெயலலிதா,  தான் தான் அடுத்த பிரதமர் என்று காரியம் சாதிக்கும் கூட்டம் கச்சிதமாக உசுப்பேற்றி விட்ட மனநிலையோடு சங்மா என்ற பழங்குடி இனத்தவரைப் பிடித்து இவர் தான் அடுத்த குடியரசு தலைவர் என்று அறிவித்து விட்டார்.

ஏலம் எடுக்கப்போன முதலாளியின் அல்லக்கை தாறுமாறாக ஏலத்தை ஏற்றிவிட்டது போல ஆகிவிட்டது பிஜேபிக்கு. ஒரு வேளை அவர்களுடைய தேர்வும் சங்மா தான் என்றிருந்திருந்தால் கூட, முந்திரிக் கொட்டை போல தன்னிச்சையாக ஜெயலலிதா அறிவித்து விட்ட நிலையில் அதை ஏற்றுக் கொண்டால், முப்பது வருடங்களுக்கும் மேலாக உழைத்து, கொண்டுவந்து சேர்த்திருக்கும் இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசியக் கட்சி என்ற பிம்பம் அடியோடு தவிடுபொடியாகிவிடும் அபாயம் இருக்கிறது அவர்களுக்கு..

அதனால் ஙே.... என்ற விழிப்பையே பதிலாக ஊடகங்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் சொல்லிவிட்டு அமைதி காத்துவிட்டது பி ஜே பி.

சரியான தருணம் கனிந்து விட்டதை உணர்ந்து களமிறங்கிய காங்கிரஸ், நீண்ட கால பிரதமர் கனவில் இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு, அதற்கான வாய்ப்பு தான் வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தை, அவருக்கான வாழ்நாள் சாதனையாக.... குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்துவதன் மூலம் ஓரளவுக்கு சமண் செய்து விடலாம் என்று காய் நகர்த்தத் தொடங்கி விட்டது.

முதல் கட்டமாக முறைப்படி அதற்கான தாக்கிதுகளை சரியான தூதுவர் மூலமாக அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் அனுப்பி அவர்களிடம் பேசி அதற்கான ஓப்புதலையோ அல்லது மாற்று ஏற்பாடுகளையோ திரட்டிக் கொண்டது.

மிக முக்கிய இரண்டு தோழமைக் கட்சிகளில் ஒன்றான திமுக அதை ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், இன்னொரு கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் தலைவி மம்தா பூடகமாக பேசிக்கொள்ளலாம் என்று அனுப்பிவிட, காங்கிரஸ் தலைமையோ, மம்தாவை தவிர்த்து பர்முடேஷன் காம்பினேஷன் கணக்கைப் போட ஆரம்பித்து விட்டது.

தன்னைவிட குறைந்த வாக்கு சதவிகிதம் வைத்துள்ள ஜெயலலிதாவே ஒரு வேட்பாளரை அறிவிக்கும் போது, தான் ஏன் ஒருவரை நியமித்து வெற்றிபெற வைக்க முடியாது? என்று மம்தா பானர்ஜி எண்ணிவிட்டாரோ என்னவோ? ......ஆரம்பித்து விட்டது குடியரசு தலைவர் தேர்தலில் அரசியல் சடுகுடு!

சோனியா சொல்லும் பிரணாப்பை, தான் ஏற்க முடியாது என்று நடுரோட்டில் வைத்து நிருபர்களிடம் சொல்லி விட்டு, முலாயம் வீட்டில் போய் முகம் கழுவிக் கொண்டு அவரோடு வெளியே வந்து, அப்துல்கலாம் தான் அடுத்த குடியரசு தலைவர் என்று ஒரு குண்டை போட்டு விட்டு ரயிலைப் பிடிக்க ஓடிவிட்டார்! 

ஜெயலலிதாவிடம் ஆரம்பத்திலேயே உச்சந்தலையில் அடி வாங்கிய பி ஜே பி இப்பொழுது தான் லேசாக மயக்கம் தெளிந்து, தன்னுடைய தேசியக் கட்சி அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டுமே என்று அரக்கப்பரக்க விழிக்க ஆரம்பித்து விட்டது.

ஆனால் அக்கட்சியில் அனைவருமே பிரதமர் கனவில் இருப்பதால், தங்கள் பெயர் யார் மனதிலும் தோன்றிவிடக் கூடாது என்று தனித்தனியாக யாகங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்!

தன் பெயரை யாராவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து போய், அத்வானியே வேட்பாளர் வேட்டைக்கு கிளம்பி விட்டார்!!!

சாதாரணமாக, காங்கிரஸில் ஆயிரம் கோஷ்டிகள் இருக்கும். ஆனால் அத்தனை கோஷ்டிகளுமே ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டிருக்கும். ஆனால் பி ஜே பியிலோ கோஷ்டிகள் எதுவும் பெரிதாக வாலாட்டாது ஆனால், நூற்றுக்கணக்கான தலைவர்கள் மட்டும் இருப்பார்கள்! அவர்கள் யாருமே அதிகாரப்பூர்வ தலைவர் சொல்வதை மறந்தும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!!

சங்மா பெயரைச் சொன்னாலோ தங்கள் அனைவரின் குடுமியும் ஜெயலலிதா கையில் நோகாமல் சென்று குடிபுகுந்து விடும் என்பதையும் தெளிவாக புரிந்து வைத்திருந்தனர்.

இந்த தருணத்தில் தான், குழம்பிய குட்டைக்குள் மட்டுமே மீன் பிடிக்கத் தெரிந்த சுனா சாமி இது தான் சரியான நேரம் என்று அப்துல் கலாம் பெயரை அறிவிக்கிறார். 

ஆஹா, இவரு ஏற்கனவே சோனியாவுக்கு கடுக்கா கொடுத்தவராச்சே, பதவியிலிருக்கும் போதே ஜெயேந்திரரிடம் சம்மணமிட்டு தரையில் அமர்ந்த நல்ல பிள்ளையாச்சே, குஜராத்தில் கொத்துக் கொத்தாக தன் இன மக்களை கொன்று குவித்தாலும் எதுவுமே நடக்காதது போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தவராச்சே, தமிழ் அது இதுன்னு குறுகிய வட்டத்தில் அடங்காமல், ராஜபக்‌ஷேவானாலும், கூடங்குளம் அணு உலையானாலும், இந்திய இறையாண்மை என்னும் குடையின் நிழலில் நட்பு  பாராட்டுபவராச்சே......  என்று பல ச்சேக்களை ஒன்றிணைத்து, “இது நம்ம ஆளுன்னு” அனைத்து பி ஜே பி தலைவர்களும் சுனா சானாவை ஆரத் தழுவிக் கொண்டார்கள்.

இதில் இன்னொரு (சின்ன) தொலைநோக்கு லாபமும் அவர்களுக்கு இருந்தது. காங்கிரஸ் கூட்டனியின் முக்கிய பங்குதாரரான மம்தாவின் வேட்பாளரை நாமும் ஆதரிச்சிட்டா, மத்திய அரசுக்கு சீக்கிரமாவே ஆப்பு அடிச்சிடலாம்கிறது தான் அது! (அதுக்கப்பறம் இவிங்க ஜெயிச்சி ஆட்சி அமைப்பாங்களாங்கிறது எல்லாம் வேற விஷயம்)

ஆனா இன்னொரு பிரச்சினையும் இதுல இருக்கு. அது என்னன்னா? மம்தா சொன்ன ஆள ஆதரிச்சா, ஜெயலலிதாவின் ருத்ர தாண்டவம் அரங்கேற்றப்பட்டு, அடுத்த தபா மத்தியில ஆட்சியமைக்கலாம் என்ற கொஞ்சநஞ்ச கனவும் எரிந்து சாம்பலாகிவிடுமே?! என்ன செய்வது?

இருக்கவே இருக்காரு, ஜெயலலிதா எவ்ளோ அடிச்சாலும் தாங்குற நம்ம அத்வானி! அவரு வந்து ஜெயாவ பாக்குறாரு.

ஓட்டு எண்ணிகைய கூட்டி கழிச்சி பார்த்தா, கையோட கை தான் ஓங்கி இருக்கு. நீங்க சொன்ன சங்மாவுக்கு எல்லாருமா சேர்ந்து சங்கு ஊதிடுவாய்ங்க. அது சங்மாவோட தோல்விங்கறத விட உங்களோட (ஜெயலலிதாவோட) தோல்வின்னு தான் கருணாநிதி பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சிடுவாரு.

அது உங்களோட வருங்கால டெல்ல அரசியல் கனவையே அடி மரத்துல ஆசிட் ஊத்துன மாதிரி கருக்கிடும். அதனால நாம எல்லோரும் சைலண்ட்டா சங்மாவுக்கு சங்கு ஊதிட்டு, கலாமை ஆதரிக்கும் பிரச்சாரத்தை ஊதி விட்டோம்னா,  நமக்கு ரெண்டு பலன் கிடைக்கும்.

அது என்னன்னா? ஒன்னு காங்கிரஸ் கூட்டணிலேருந்து மம்தாவை கழட்டி, சீக்கிரமா தேர்தல் வரவழைத்து, அவங்களோட சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து மத்தியில ஆட்சியைப் பிடிச்சிடலாம். ரெண்டாவதா: கருணாநிதி ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளரைத் தான் கூட்டணி தர்மப்படி ஆதரிப்போம்னு சொல்லிட்டதால, அதுலேர்ந்து மாற மாட்டார். அத் வச்சே, ஒரு தமிழரான, சிறுபான்மை சமூகத்தவரான, கலாமை எதிர்க்கும் கலைஞர்னு....  பிரச்சாரம் பண்ணி, அவர் ஒரு இனத் துரோகி மட்டுமல்ல, இஸ்லாமியத் துரோகின்னும் பரப்புரை செய்ய நல்ல வாய்ப்பு கிட்டும்னு......

அத்வானி சொல்லச் சொல்ல, .... பட் இந்த கடேசி பாய்ண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேன்!  அப்டீன்னு ஒத்த வரியில ஜெ. தன் முடிவை அறிவிச்சிட்டார்!

ஆனா இதெல்லாம் எதுவுமே புரியாத, ஒரு அப்பாவி பொதுஜனம், ஏன் சார், இப்ப இருக்குற கண்டிஷன்ல கலைஞர் கலாமை ஆதரிச்சாலும் கூட பிரணாப் தான சார் ஜெயிப்பார். அப்பறம் ஏன் ஜெ. அத்வானில்லாம் தேவையில்லாம கலாமை ஆதரிச்சி நிப்பாட்டிவச்சி.....  ஒரு ஜனாதிபதியா இருந்தவரை தோற்கடிச்சி அசிங்கப்படுத்தப் பார்க்குறாங்க?

அட அப்ரசண்டி, எங்களுக்கும் இந்த கணக்கெல்லாம் தெரியும்டா வெண்ணை, ஆனா, ஒரு மாதிரி தமிழின துரோகின்னு நாங்கள்லாம் ஃபிலிம் காட்டிட்டிருகற அந்தக் கருணாநிதிய, இஸ்லாமியர்களின் எதிரின்னு இன்னோரு டர்னிங் பாய்ண்ட்டோட நல்ல மசாலா படமா காட்ட இந்த திரைக்கதை ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்குண்டா!!!

இப்படிக்கு ஜெ. & அத்வானி மைண்ட் வாய்ஸ் கூட்டறிக்கை!!!1 comment:

Anonymous said...

கருணாநிதி கட்சிக்கு எத்தனை ஓட்டு உள்ளது?

நீங்கள் கூறும் குஜராத் வன்முறையின் போது கருணாநிதியின் கட்சியும் இந்திய அரசில் பங்குதாரர். கருணாநிதி ஒரு புல்லையும் புடுங்கவில்லை.

கலாம் என்றால் கலகம்...அஞ்சுகம் என்றால் ஐந்து வகையான சுகமா?

சும்மா பேசவேண்டுமென்றால் எதை வேண்டுமானாலும் பேசலாம்.

நான் ரெடி...!