Friday, September 7, 2012

மாயவரம் புத்தக கண்காட்சி

நம்ம நண்பர்கள் எல்லோருமே, நான் அந்த ஊர் புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தேன், இந்த ஊரு கண்காட்சிக்கு சென்று வந்தேன், என்று கடந்த நான்கைந்து வருடமா பதிவு பதிவா போட்டு தாக்கிக்கிட்டு இருந்தாலும், எனக்கு அப்படி ஒரு பதிவு போடுவதற்கான வாய்ப்பே அமையாமல் இருந்தது.

சென்னை, நெய்வேலி, ஈரோடு என்று ஒவ்வொரு ஊரிலும் புத்தகத் திருவிழா ஆரம்பம்னு தெரிந்த்வுடனேயே, நம்ம பதிவுலக நண்பர்கள் அது பற்றி எழுத ஆரம்பித்து விடுவார்கள். நானும் உடனே இந்த வருடம் அவசியம் போய் ஒரு பத்தாயிரத்துக்காவது புத்தகங்களை அள்ளி வந்து விட வேண்டும் என்று முடிவெடுப்பேன்.

ஆனால் சரியாக அந்த பத்து நாட்களும், கண்காட்சி நடைபெறும் ஊருக்கு எதிர்திசை எல்லையில் நான் வாகாக மாட்டிக் கொள்ளும்படியான வேலை அமைந்துவிடும். ஒரே ஒரு நாள் இடைவேளை கிடைத்தாலும் போய் வந்துடலாமே, அதை வைத்து ஒன்பது பதிவுகள் போடலாமே..!!  அப்புறம் வாங்கி வந்த புத்தகங்களை படித்துப் படித்து விமர்சனம் என்ற பெயரில் எழுதி பதிவுலகை ஒரு கலக்கு கலக்கலாமே(!?) என்ற என்னுடைய ஆசை இது வரையிலும் கனவாகவே சென்று கொண்டிருந்தது.

எக்ஸ்ட்ரா வேலை இல்லாத நேரங்களிலேயே போக முடியவில்லை. அதுவும் இந்த வருடம் ரோட்டரி சங்கத் தலைவர் பொறுப்பு வேறு தோளில் ஏறிக் கொண்டுவிட்ட பிறகு.....  கனவை ஒரு வருடம் ஒத்திப் போட்டுவிடலாம் என்று முடிவெடுத்தேன். அந்த நேரத்தில் நெய்வேலி புத்தக கண்காட்சி ஆரம்பம் பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்தன.

அப்பொழுது தான் எனக்கு இந்த விபரீத எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் தோன்றியது தான் தாமதம்! அடுத்த ஓரிரு நாட்களிலேயே எனது ஐந்து வருட கனவை நிறைவேற்ற, மனம் துரிதமாக செயல்பட்டு, நம்மால் சென்று காண முடியாமல் இழுத்தடிக்கும் அந்த புத்தக கண்காட்சியை, மாயவரத்திற்கே கொண்டு வந்து எம் மண்ணின் மக்களுக்கும் அந்த அறிய வாய்ப்பை வழங்கிட வேண்டுமென்று கருதி அதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டேன்.

இதுவரை ஒரு புத்தக கண்காட்சிக்கு கூட சென்றது கிடையாது. ஆனாலும் அது பற்றி வந்திருந்த சற்றேறக் குறைய நூற்றுக்கும் அதிகமான பதிவுகளைப் படித்து, நேரில் சென்று வந்தவர்களை விட அதிகம இவ்விடயத்தில் பரிச்சயமாகியிருந்தேன்(!?)

அதை விட இணைய உலகில் எனக்கிருந்த நண்பர்கள் மேல் எனக்கு அலாதியான நம்பிக்கை இருந்தது. இவ்விரண்டையும் மட்டுமே மூலதனமாக்கி, எங்கள் ரோட்டரி சங்க கூட்டத்தில் இது பற்றிப் பேசி “மாயவரம் புத்தக கண்காட்சி” நடத்துவது பற்றி முடிவெடுத்து விட்டேன்!

அதற்கென ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, வேலை முடுக்கிவிடப் பட்டது. நமது இணைய சொந்தங்கள் மூலமாக பலரிடம் பேசி, 50 பதிப்பகங்கள் வரை (முதல் வருடம் தானே, அதோடு நேரமும் மிகக் குறைவு) அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சம்பந்தப் பட்டவர்கள் இந்நேரம் மதுரையில் முகாமிட்டு, பதிப்பகத்தார்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் ரோட்டரி சங்கத்திற்கென, 45 வருட பாரம்பரியமுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி நகரில் இருக்கின்றது. அதன் காலாண்டுத் தேர்வு விடுமுறை நாளை கணக்கில் கொண்டு, இந்த மாதம் 22 ஆம் தேதி முதல் 30 வரை என்று நாள் குறித்து விட்டோம். முக்கால் வாசி கடைகள், பள்ளியின் ஆடிடோரியம் ஷெட்டிலேயே வந்து விடும். மீதியை பள்ளியின் உள்ளேயே இருக்கும் மைதானத்தின் சுற்றிலும் டெம்பரரி ஷெட்டாக அமைக்கத் திட்டமிட்டு, வேலைக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டது.

அந்த மைதானத்தின் தெற்கு எல்லையிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மேடை அமைக்கப்படவுள்ளது. அதில் தான் தினமும் ஒரு பேச்சாளர் பேசவிருக்கின்றார். அது மட்டுமல்லாமல், மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள 50 பள்ளிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப் பெற்று, அதில் தேர்வாகும் மாணவ மாணவிகளை இங்கு ஒவ்வொரு நாளும் பேசவைத்து, பரிசு வழங்கும் ஏற்பாடும் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனது பதவியேற்பில் சமையல் செய்து அசத்திய குமார் கேட்டரிங்குக்கு, FOOD COURT பர்மிட் கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல தரமான சைவ உணவுக்கு கேரண்ட்டி. சகாயமான விலையில் கொடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த முக்கிய விடயமான விளம்பரங்கள். நகரிலும் அதைச் சுற்றிலும் 30 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்ய வெள்ளை அடிக்கும் பணி இன்று ஆரம்பமாகி விட்டது. 10 ஆம் தேதி முதல் விளம்பரங்களை மக்கள் பார்க்கலாம்.

12 அடிக்கு 8 அடி சைஸ்ஸில் 60  ஃப்ளெக்ஸ் பேனர்கள் மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றி 30 கிமீ சுற்றளவில் உள்ள முக்கிய ஊர்களில் வைப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. 15 ஆம தேதி அவைகள் வைக்கப்பட்டு விடும்.

லோக்கல் டீவி சேனல்களில் 10 ஆம் தேதி முதல் டீசர் விளம்பரங்களும், 15 ஆம் தேதி முதல் கண்காட்சி விளம்பரமும் வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 50000 நோட்டீஸ்கள் அச்சடிக்க கொடுக்கப்பட்டுள்ளன. அவைகள் 20 ஆம் தேதி முதல் தினசரிகளில் வைத்து அனுப்புவதற்கு திட்டமிடப் பட்டிருக்கிறது.

19 ஆம் தேதி முதல் ஆட்டோ விளம்பரத்திற்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு விட்டது. 20 ஆம் தேதி முதல் காரை FM இல் விளம்பரம் வரவிருக்கிறது......

.....மூச்சு முட்டுது... இப்பவே!  ஆனாலும் மிகவும் சந்தோஷமாக செய்து கொண்டிருக்கின்றேன். விநாயகர் சதுர்த்தி எங்களுக்கு தீபாவளி மாதிரி பெரிய சீசன் விற்பனை. கம்பெனியில் இரவு பகல் வேலை நடக்கும். இருப்பினும், இதை சுகமாக தோளில் தூக்கி வைத்து கூத்தாடிக் கொண்டிருக்கின்றேன்!

சில பிடித்த விஷயங்களைச் செய்யும் போது மனசு ஆனந்தத்தில் துள்ளும். அந்த நிகழ்வினை, அது நடைபெறப்போகும் நாளினை எண்ணி எண்ணி மனம் அவ்வப்போது பூரித்துப் போகும்........

இருந்தாலும், எல்லாம் சரியாக நடைபெற வேண்டுமே என்று மனம் ஒரு ஓரத்தில் பதைபதைத்துக் கொண்டே இருக்கும்.....!!

நான் அந்த மன நிலையில் தான் இப்பொழுது இருக்கின்றேன். என் இணைய சொந்தங்களுக்கு இதையே ஒரு அழைப்பாக வைக்கின்றேன். நேரமும் வாய்ப்பும் அமையப் பெற்றவர்கள் அவசியம் வந்து மாயவரம் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க அழைக்கின்றேன்.

29 comments:

Unknown said...

இதுக்காகவே மாயவரம் வருகிறேன்

கொக்கரக்கோ..!!! said...

நன்றி ஜெய்சங்கர். அவசியம் வாங்க. ))

Bruno said...

வாழ்த்துக்கள் அண்ணா

R. Gopi said...

மிக்க மகிழ்ச்சி சௌமியன்ஜி. ஊரில் இருந்திருந்தால் நிச்சயம் பலமுறை விஜயம் செய்திருப்பேன்.

ஜோதிஜி said...

முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

நிகழ்காலத்தில்... said...

கண்டிப்பா எல்லாம் நல்லபடியா நடக்கும் செளம்யன்...

ரோட்டரி சங்கத் தலைவராக இருக்கும் இந்தத் தருணமே இதைச் சாதிக்கப் பொருத்தமான நேரம்.
எல்லா வகையிலும் உதவியாக இருக்கும்

\\இருந்தாலும், எல்லாம் சரியாக நடைபெற வேண்டுமே என்று மனம் ஒரு ஓரத்தில் பதைபதைத்துக் கொண்டே இருக்கும்.....!!\\

நீங்கள் தலைமைப் பொறுப்பேற்று செய்யும் இந்த திருவிழா நிச்சயம் நல்லபடியாக அமையும்.

என்னுடைய மனமார்ந்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

கொக்கரக்கோ..!!! said...

@ டாக்டர் புரூனோ, நன்றி டாக்டர். வாழ்த்துக்கள் மட்டுமின்றி அவசியம் நண்பர்களோடு வந்து செல்ல வேண்டும் ))

@ நிகழ்காலத்தில் சிவா,

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா. தாங்கள் தந்த சுட்டியும் மிகவும் உபயோகமாய் இருந்தது. நிறைய அதன் மூலம் செய்தி கிடைத்தது. மிக்க நன்றி ))

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வாழ்த்துக்கள் சௌமியன் நேரம் இருப்பின் அவசியம் வருகிறேன்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வாழ்த்துக்கள் சௌமியன் ...
நேரம் இருப்பின் அவசியம் வருகிறேன் ...

நாய் நக்ஸ் said...

வாழ்த்துக்கள்...சௌமியன்...
அனைத்தும் நல்லாவே நடக்கும்....

ராம்ஜி_யாஹூ said...

wishes please, thanks for your great efforts

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தூள்! கலக்குங்க!!

ரோகிணிசிவா said...

Superb idea Anna, wishing it grand success

ரோகிணிசிவா said...

Superb idea Anna,wishing u a grand success

மணிஜி said...

சௌமி..வாழ்த்துக்கள்...

திவாண்ணா said...

நல்ல முயற்சி. உருப்படியான சமாசாரம். வாழ்த்துகள்!

M.Mani said...

புத்தக கண்காட்சி நல்லவிதமாக நடக்க வாழ்த்துக்கள்

மயிலாடுதுறை சிவா said...

Great Effort and Awesome work...

Good Job Sowmiyan....

please plan next one in Jan 2013 ;-))

Washington Sivaa....

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் சௌமியன். கலக்குங்க.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் சௌமி அண்ணா.

வவ்வால் said...

//நான் அந்த மன நிலையில் தான் இப்பொழுது இருக்கின்றேன். என் இணைய சொந்தங்களுக்கு இதையே ஒரு அழைப்பாக வைக்கின்றேன். நேரமும் வாய்ப்பும் அமையப் பெற்றவர்கள் அவசியம் வந்து மாயவரம் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க அழைக்கின்றேன்.//

ஒரு பதிவராக இருந்து நடத்தும் புத்தக கண்காட்சி இது ஒன்றே என நினைக்கிறேன்.

ஒன்றாம் தேதிக்கு அப்புறம்னா அந்தப்பக்கம் வரப்பார்க்கலாம் , மாதக்கடைசியில வேற வைக்குறிங்க,எதாவது வேலை வந்தா சேர்த்து வச்சு பார்த்திடலாம் .

வாழ்த்துக்கள்!

Admin said...

My wishes for book fair. I feel sad that I missing book fair in (nearby) my home town.

மரா said...

வாழ்த்துக்கள்.

இந்துமதி said...

Thanks I missed 2 years book fair @Chennai. Now I'm n mayiladuthurai. I never miss this oppurtinity. Thanks for ur great effort.

சேலம் தேவா said...

எழுத்தில் சொல்வது சுலபமாக இருந்தாலும் அதை நடைமுறை படுத்துவது பெரிய விடயம். குறுகிய காலத்தில் புத்தக கண்காட்சியை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளீர்கள் அண்ணா... சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

க.பாலாசி said...

முதல் வருடத்திலேயே இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் வியக்கவைக்கிறது சௌமி அண்ணா.. புத்தகத் திருவிழா சிறக்க வாழ்த்துகள். மழை வரும் நேரமென்பதாலும் அதற்கேற்ப முன்னேற்பாடுகளையும் கவனித்துகொள்ளுங்கள்.. முடிந்தால் அவசியம் வருகிறேன்.

கொக்கரக்கோ..!!! said...

வாழ்த்துகின்ற நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ))

அவசியம் கண்காட்சி நடைபெறும் நாட்களில் வசதிப்பட்ட ஒன்றில் அவசியம் வரவேணுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

Aruna said...

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
jaga. Rajaarunachalam
Mayiladuthurai

cheena (சீனா) said...

அன்பின் சௌமியன்

முதலில் ரோட்டரி சங்கத் தலைவர் ஆனதற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - மிகக் குறுகிய காலத்தில் நீண்ட காலக் கனவினை நிறைவேற்றியது நன்று. மாயவரத்தில் புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக ந்டைபெற நல்வாழ்த்துகள் - ஒரிரு நாட்கள் வர முயல்கிறோம் . வருகிறோம். நட்புடன் சீனா