Tuesday, July 2, 2013

தளபதி ஸ்டாலினும்... ஆளுமைப் பண்பும்...!

இரண்டு நாட்கள் முன்பு, மதுரையில் நடைபெற்ற அற்புதமான நிகழ்ச்சி ஒன்றில், திமுகவின் பொருளாளரும், மாநில இளைஞர் அணிச்செயலருமான தளபதி ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் இந்த வருடம் நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவச் செல்வங்களுக்கு திமுக இளைஞரணி சார்பாக சான்றிதழும், பணப்பரிசும் வழங்கி மாணவச் செல்வங்களை ஊக்குவித்தார்.

இது ஒரு நிகழ்வு....!!

ஆனால் இதை தளபதி ஸ்டாலின் அவர்கள் எவ்வாறு தெளிவான திட்டமிடலுடன் நடத்தினார் என்பதில் தான் அவர் ஏன் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆக வேண்டும் என என்னைப் போன்றவர்கள் விரும்புகின்றார்கள் என்பதன் காரணம் பொதிந்திருக்கிறது.

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து இரண்டு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கும் மாணாக்கர்கள் மற்றும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாணாக்கர்கள் (ஒரே நிலையில் எத்தனை மாணாக்கர்கள் இருந்தாலும் அனைவரையும்) பட்டியலிடப்படுகின்றனர்.....



அப்படி பட்டியலிடப்பட்டவர்களை திமுக இளைஞரணியைச் சேர்ந்த அந்தந்தப்பகுதி மாவட்ட, நகர, ஒன்றிய கிளைக்கழக பொறுப்பாளர்கள், நேரடியாக வீடு தேடிச் சென்று, அதற்கான கடிதத்தைக் கொடுத்து, தேதியைச் சொல்லி அழைத்துச் செல்வதற்கான ஏற்பாட்டினையும் விளக்கி ஒப்புதல் பெற்றுக்கொள்கின்றனர்.

ஒரு மாணவருடன், தாய் தந்தை இரண்டுபேரோ அல்லது அவர்கள் சொல்லும் உறவினர்கள் இரண்டு பேரோ உடன் வரலாம். பிறகு அவர்களிடம் அறிவித்த படி, தனியார் பேருந்துகளில், அவர்கள் வீட்டிலிருந்தே அழைத்துச் சென்று மதுரையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட விடுதிகளில் முதல் நாள் இரவே தங்க வைக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு தரமான உணவும் நேரம் தவறாமல் வழங்கப்படுகிறது. மறு நாள் காலை நிகழ்ச்சி நடைபெறும் ராஜா அண்ணாமலை மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமரவைக்கப்படுகின்றனர். அரங்கில் நுழைந்தவுடன், எந்தவொரு அரசியல் கலப்பும் கிடையாது. மேடையிலும் தளபதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் சென்னை மாநகர மேயரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான மா. சுப்ரமணியன் தவிர வேறு அரசியல்வாதிகள் யாரும் கிடையாது. அது ஒரு கல்வி விழாவாகவே நடைபெறுகிறது.

பொதுவாக அரசியல் நிகழ்ச்சிகளில் ஒலி, ஒளிபரப்பப்படும் பிரச்சாரப்பாடல்கள், படங்கள் எதுவும் கிடையாது. மெல்லிய பியானோ இசை மட்டுமே தவழ்ந்தோடுகின்றது. மாணாக்கர்கள் அமர வைக்கப்பட்ட அடுத்த நிமிடம் தளபதி ஸ்டாலின் மேடையேறுகிறார். அழகான சுறுக்கமான முன்னுரை.  எந்த அவசரமோ, படபடப்போ தேவையில்லை. எத்தனை நேரமானாலும் அனைவரிடமும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு தான் செல்வேன். என்று உறுதி அளிக்கின்றார்....

வரிசைப்படி மாணாக்கர்கள் அழைக்கப்படுகின்றார்கள். ஒவ்வொருவராக தத்தமது பெற்றோருடன் அல்லது உறவினர் இருவருடன் மேடையேறுகின்றனர். சான்றிதழும் பணப்பரிசும் வழங்கப்படுகின்றது (மாவட்ட முதலிடத்திற்கு ரூ. பத்தாயிரம் ) பிறகு அவர்களோடு சேர்ந்து புகைப்படம்.

இந்த நிகழ்வு முடிவதற்கு நான்கு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் ஆகின்றன. இடையில் ஒரு நிமிடம் கூட அமர்ந்து ஓய்வெடுக்காமல், ஒரு மிடறு தண்ணீர் கூட அருந்தாமல் விழா தொடர்ந்து அதே உற்சாகத்துடன் கடைசி நிமிடம் வரை கடந்து நிறைவடைகின்றது.

வந்திருந்த அத்துணை பேருக்கும் அவ்வளவு உற்சாகம்! பிறகு தளபதி ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து மதிய சாப்பாடு. பிரியாணி மற்றும் வெஜிடேரியன் சாப்பாடு இரண்டும் அவரவர் விருப்பப்படி பரிமாறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சாப்பிட்டு எழும் முன்பாக, அவர்கள் தளபதி ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படமும் அவர்கள் கைகளில் கொடுக்கப்பட்டு விடுகிறது.

பிறகு அதே பேருந்துகளில், அவரவர் ஊர்களுக்கு வீட்டு வாசலிலேயே கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட ஆயிரத்தி அறுநூற்றி எண்பது மாணாக்கர்கள், மற்றும் அவர் தம் பெற்றோர் என்று அனைவருக்குமே உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி...!!!

இந்த அத்தனை பேருமே அந்தந்தபகுதிகளில் பலரால், பல தொண்டு நிறுவனங்களால், பள்ளி நிர்வாகங்களால் பாராட்டப்பட்டிருப்பார்கள். ஆனால் தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் அவர்கள் கையால், சான்றிதழும், பரிசும், இவ்வளவு அந்நியோன்யத்துடனும் அக்கரையுடனும், எந்த சிரமத்திற்கும் ஆளாகாமல் பெற்றது மற்றெதையும் விட சந்தோஷமான, தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நல்ல சம்பவமாக அமைந்து விட்டதாக போய் வந்த அத்தனை பேரும் சொல்வது தான் இதில் சிறப்பு.

தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அரசியல் சார்புடைய அணியை வைத்து, தமிழகம் தழுவிய, மிக முக்கியமான சென்சிடிவ் நிகழ்வை, சம்பந்தப்பட்டவர்கள் பயன் பெறுவது மட்டுமல்லாமல், சந்தோஷப்படும் அளவிலும், நிகழ்த்திக் காட்டும் வல்லமை பெற்ற ஒருவர் கைகளில் இந்தத் தமிழகத்தின் அரசு எந்திரம் வந்து சேர்ந்தால், ஒட்டு மொத்த தமிழகமும், தமிழர்களும் எவ்வளவு பயன்களும் சந்தோஷங்களும் அடைவார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே இதை எழுதுகின்றேன்.

இப்பொழுதெல்லாம் அரசியல் விழாக்கள் அல்லது அரசு சார்பான அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகள் என்றாலும் கூட, யாருக்காக அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்ற காரண காரியங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அந்த அரசியல் கட்சி அல்லது தலைவரின்  துதி பாடும் பிரச்சார நிகழ்வாகவே அமைந்துவிடுவது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

ஒரு வேளை அந்த தலைவரே விரும்பாவிட்டாலும் அதிகரிகளோ அல்லது அரசியல் அடிப்பொடிகளோ செய்யும் அலப்பறைகளும் நாம் அறிந்ததே!

ஆனால் அவை அனைத்தையுமே, மிகுந்த கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும், அந்த விழாவின் உண்மையான கதாநாயகர்களுக்குத் தான் அத்தனை மதிப்பும், மரியாதையும், முன்னுரிமையும், பாராட்டுக்களும் என்பதை முழுமையாக உணர்ந்து அதை கச்சிதமாக நிறைவேற்ற........,

அதை செயல்படுத்தும் ஒரு பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் அந்த ஆளுமைத் திறன் தான் இங்கே போற்றுதலுக்குரியதாகிறது. 



தலைவனை துதிபாடினால் போதும் பதவிகள் தேடி வரும் என்று தொண்டர்கள் எண்ணும் நிலையை மாற்றி, அந்தத் தலைவன் இட்ட கட்டளையை பன்னாட்டு நிறுவன ஒழுங்கு முறையுடன், செயல்படுத்தினால் மட்டுமே தலைவனின் போற்றுதலுக்கு தகுதியானவர்களாவோம் என்று அவர்களை எண்ண வைத்த......

அந்த சுயநலமில்லாத...., பொது மக்கள் நலனும் மகிழ்ச்சியும் மட்டுமே தனது லட்சியம் என்று செயல்படும் தளப்தி ஸ்டாலின் அவர்களின் புது பாணி நிச்சயம் பாராட்டுக்குறியது. இந்த மாதிரியான தலைவர்கள் தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் இன்றைய அத்தியாவசிய தேவை!

7 comments:

Avargal Unmaigal said...

ஆஹா அண்ணாச்சி இப்படி எல்லாம் பண்ணி இருக்கிறாரா அப்ப அவருக்கு அமெரிக்க ப்ரெசிடென்டாக ஆகும் தகுதி வந்துவிட்டது அவர் தமிழகத்தை ஆளக் கூடாது உலகை ஆளவேண்டும்...


ஆமாம் இவ்வளவு திறமை இருக்கும் இவர் தன் குடுமப்த்தில் உள்ள அனைவரையும் ஒன்ரு கூட்டி இதுபோல ஒரு விழா எடுக்கலாமே அது அவரால் முடியுமா?

கொக்கரக்கோ..!!! said...

நன்றி அவர்கள் உண்மைகள்....

உங்கள் விமர்சனத்தில் தனி நபர் வக்கிரம் தெரிகிறது. இந்த பதிவில் உள்ள கருத்துக்கான பதிலாக அது இல்லை.

Avargal Unmaigal said...

குடும்பத்தில் உள்ளவர்களை கூட்டி விழா எடுங்கள் என்று சொல்வது வக்கிரமா?????/

கொக்கரக்கோ..!!! said...

@ அவர்கள் உண்மைகள்,

இந்தப் பதிவின் சாராம்சத்துக்கு பதில் அல்லது விமர்சனம் வைக்காமல், அதைத் தவிர்த்து அந்த தனிநபரை கிண்டலும், கேலியும் செய்வது அதுவும் அவர் குடும்பத்துடன் இணைத்து விமர்சிப்பது நிச்சயம் தனி நபர் மீதான தாக்குதல் தான்.

Unknown said...

தொடரட்டும் நற்பணிகள்

Anonymous said...

அவருக்கு அமெரிக்க ப்ரெசிடென்டாக ஆகும் தகுதி வந்துவிட்டது அவர் தமிழகத்தை ஆளக் கூடாது உலகை ஆளவேண்டும்...

Barari said...

தலைவருக்கு பிறகு தி மு க வை தலைமை ஏற்று வழி நடத்த முழு தகுதி படைத்தவர் ஸ்டாலின் மட்டுமே.அதை பல முறை பல வழிகளில் நிரூபித்து வருகிறார்.பதிவின் கருத்தில் குறை எதுவும் சொல்ல இயலாத காரணத்தால்தான் தனி மனித தாக்குதல்.