Wednesday, April 23, 2014

மயிலாடுதுறை-மனித நேய மக்கள் கட்சி--ஓர் பார்வை

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பாக, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சகோதரர் சே. ஹைதர் அலி அவர்கள் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கின்றார். 

அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்!

தளபதி முதல் தலைவர் கலைஞர் வரையிலும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவிட்டுச் சென்றிருக்கின்ற நிலையில், திமுக தோழர்களின் பிரச்சாரம், மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும், அதிமுகவுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றிருக்கின்ற நிலையில், அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்களின் வாக்குகளும் முழுமையாக மெழுகுவர்த்திகள் சின்னத்திற்கே வந்து சேரும் என்பது உறுதியாகியிருக்கின்றது.



மமக, தமிழகம் முழுமைக்குமாக தாங்கள் போட்டியிடுகின்ற ஒரே தொகுதியான மயிலாடுதுறை தொகுதிக்கென்று தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை தயாரித்து, அதை தலைவர் கலைஞர் அவர்கள் கரங்களால் வெளியிட்டிருக்கின்றது.

இது தான் மயிலாடுதுறை மக்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம்.

ஒரு கட்சி.... அது போட்டியிடுவது நம் மயிலாடுதுறை தொகுதியில் மட்டுமே... ஒரு தேர்தல் அறிக்கையினை நம் தொகுதிக்காக மட்டுமே வெளியிடுகின்றது என்றால் அது எவ்வளவு நுணுக்கமானதாக இருக்க வேண்டும்?!

அப்படித்தான் அந்த தேர்தல் அறிக்கை அமைந்திருக்கின்றது. இந்நேரம் தொகுதி மக்கள் அனைவரின் கைகளிலும் அந்த தேர்தல் அறிக்கை வந்துவிட்டிருக்கும். திராவிட முன்னேற்ற கழகம் அப்பணியினை மிகச் சிறப்பாக தன் கைகளில் எடுத்துக்கொண்டு செயலாற்றி இருக்கின்றது.

மயிலாடுதுறை வாக்காளப் பெருமக்கள் அனைவரும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ள அதிகார வரம்பில் என்னென்ன செய்ய முடியுமோ, எதை எதைச் செய்ய வேண்டுமோ, அது தான் அந்த தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.

அதை விடுத்து மயிலாடுதுறையை சிங்கப்பூராகுவேன், லொட்டு லொசுக்குன்னெல்லாம் பேசி... கால் நூற்றாண்டாகியும் அதே பழைய ப்ளாக் அண்டு ஒயிட் நிலையிலேயே வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை!!

மாறாக மமக வெளியிட்டிருக்கும் இந்த தேர்தல் அறிக்கையானது, ஒர் பாராளுமன்ற உறுப்பினர் சின்சியராக களம் இறங்கி, சம்பந்தப்பட்ட துறைகளையும், அதன் அதிகாரிகளையோ, தேவைப்பட்டால் மத்திய மந்திரிகளையோ சந்தித்து கோரிக்கை வைத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலே, அவை அனைத்தும் நிறைவேற்ற சாத்தியமிருக்கும் திட்டங்கள் தான் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

சகோதரர் சே. ஹைதர் அலி அவர்களுடைய பேச்சைக் கேட்கின்ற போது அதில் ஒரு நேர்மையும், தெளிவும், உறுதியும் மிகத் தெளிவாக உணர முடிகின்றது. அவர் இரு கரம் கூப்பி வணங்கவில்லை என்று மாற்றுக்கட்சி நண்பர்கள் சிலர் குறை கூறுகின்றார்கள்.

என்னைப் படைத்த இறைவனை மட்டுமே நான் வணங்குவேன், இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களையும், எனது சகோதர, சகோதரிகளாக எந்த சாதி, மத பாகுபாடும் இன்றி சமமாக ஏற்றுக்கொண்டு, நான் என் சக மனிதனை விட எந்த விதத்திலும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்ற உயரிய கொள்கையோடு, வெறும் தேர்தல் வெற்றிக்காக அந்தக் கொள்கையை சமரசம் செய்யாமல் இருப்பதையே நாம் அவரது சிறந்த பண்பாக பார்க்க வேண்டும் என்பது என் கருத்து. அது தான் உண்மையும் கூட!

இப்படி தான் கொண்ட நல்ல கொள்கையை தேர்தல் வெற்றிக்காக மாத்திரம் சமரசம் செய்துகொள்ளாத நேர்மையான, வெளிப்படையான மனிதர், நிச்சயம் நம் தொகுதியின், தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக தான் தயாரித்து அளித்து, நிறைவேற்றுவேன் என்று உறுதி கூறியிருக்கின்ற இந்த தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவதில், எந்த சமரசத்தையும் யாருக்காகவும் செய்துகொள்ளாமல், பேச வேண்டிய இடத்தில் பேசியும், வாதாட வேண்டிய இடத்தில் வாதாடியும் நிச்சயமாக நமக்குப் பெற்றுத் தருவார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் கைகூப்பி நம்மை வணங்கி வெற்றிபெற்றுச் சென்றவர்கள், நாம் அவரை வழியில் பார்த்தால் திருப்பி வணக்கம் சொல்வதைக் கூட கண்டும் காணாமல் செல்வதைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம்.

ஆகவே ஒரு சிறந்த கொள்கைவாதி, தன்னுடைய வாக்குறுதிகளை எந்த சமரசத்திற்கும் இடமளிக்காமல் போராடிப் பெற்றுத்தருவார் என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் அதிமுக வேட்பாளர்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கே சொந்தமானது என்ற நினைப்பில் தொகுதி மக்கள் பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் இருப்பார்கள் என்பதை கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியின் செயல்பாடுகளில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும். இப்பொழுது அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் வேட்பாளரும் அதே நிலைப்பாடு உடையவர் தான் என்பதைத் தவிர வேறு எந்த தனிப்பட்ட சிறப்புத் தகுதிகளும் இல்லாதவர் தான்.

ஆகவே மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியைச் சார்ந்த வாக்காளப் பெருமக்கள் அனைவருமே, கட்சிப் பாகுபாடின்றி தங்கள் வாக்குகளை நமக்கான தேவைகளை, அதிலும் குறிப்பாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் செய்து தர இயலுகின்ற தேவைகளை மிகத்தெளிவாக பட்டியலிட்டு அதை நிறைவேற்றித்தருவேன் என்று உறுதி அளிக்கின்ற....

மனிதநேய மக்கள் கட்சியைச் சார்ந்த சகோதரர் சே. ஹைதர் அலி அவர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில் வாக்களித்து, நம் மயிலாடுதுறை தொகுதி உண்மையான வளர்ச்சியைப் பெற வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டுகிறேன்

No comments: