Saturday, July 12, 2014

பதினோரு மாடி கட்டிட சரிவும்... அரசின் மீதான நம்பிக்கைச் சரிவும்..!!


தமிழக தலைநகர் சென்னையில் கட்டிட வேலை முற்றுப்பெறாத நிலையில் 11 மாடி கட்டிடம் அப்படியே பூமியில் புதையுண்டு இடிந்து விழுகிறது. கணக்குத் தெரிந்த வகையிலேயே அறுபதுக்கும் மேற்பட்ட ஏழை பாழைகள், பாட்டாளிகள், தினக்கூலிகள் என்று தங்கள் குடும்பத்தின் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கூட உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் மிகச் சாமான்யர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்...

மன்னிக்கவும் உயிரோடு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்....

இதில் இரண்டு தளங்கள் எங்கிருக்கின்றது என்றே தெரியாத நிலையில் இன்னும் எத்தனைப் பேர் மாண்டு போயிருப்பார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கின்றது. மேலோட்டமான மீட்புப் பணியை நிறைவு செய்யவே பத்து நாட்களை இந்த மாநில அரசு விழுங்கியிருக்கின்றது.

நியாயமாகப் பார்த்தால் இந்த சம்பவம் நடந்தவுடனேயே அரசு அசுரகதியில் செயல்பட்டு இந்த பாதிப்பின் எல்லையை சற்று தொலைநோக்கில் கூர்மையான..., நடுநிலையான புத்திசாலித்தனத்துடன் உணர்ந்து கொண்டு இதை உடனே ஒரு தேசிய பேரிடர் அளவிற்கு அறிவித்து மத்திய அரசின் உதவி உட்பட பல தொண்டு நிறுவனங்களையும் மீட்புப்பணிக்கு இறக்கிவிட்டிருந்தால் இன்னும் முப்பது நாற்பது பாட்டாளிகளைக் கூட உயிரோடு காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால் மாநில அரசின் ஏதோ ஒரு தனித்துவமான...
யாரையும் அண்ட விடாமல் பார்த்துக்கொள்வது மாதிரியான...
அதாவது வேறு எந்த அமைப்பு அல்லது நிறுவனத்திற்கும்...
அதாவது அண்டை மாநில அரசுகள், மத்திய அரசுகளின் எந்திரங்கள் எதையும் பயன்படுத்தி உயிரிழப்புகளை குறைக்காததற்கான...
அதாவது ஏதோ ஒன்று மாநில அரசு நிர்வாகத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கும்படியான நடவடிக்கை தான் இங்கே பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கின்றது!

அதுமட்டுமின்றி, இறந்து போனவர்களின் 16ஆம் நாள் காரியங்கள் கூட முடியாத சோகத்தில் அந்த குடும்பத்தினர் இருக்கின்ற நேரத்தில் அவசர அவசரமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட துறையின் பணியாளர்களுக்கு பாராட்டுவிழாவை அரசே...  முதல்வரின் ஆணையின் பேரில் நடத்துவது என்பது ஒரு ஆகச்சிறந்த முட்டாள்தனமான மனிதநேயமற்ற ஆட்சிக்கான சான்றாகவே பார்க்க முடிகிறது. ஒரு அரசு ஊழியர் செய்கின்ற வேலைக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. கூடுதல் பணியென்றால் அதற்கான படிகளும் வழங்கப்படுகின்றது... அதற்கு மேல் அவர்களது ஊழியத்திற்கு பரிசும், பாராட்டும் அரசே தருவதென்பது மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட லஞ்சமாகவே தான் கருதப்பட வேண்டும்.

அதுவும் இது ஒரு பேரிழப்பு. இதற்கான மீட்புப் பணியில் ஈடுபட அரசு ஒரு அறிக்கை கொடுத்தால், சொந்தக் காசை செலவு செய்து அதில் செயல்பட பல்லாயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களும், இளைஞர்களும், மாணவர்களும் தயாராகத்தான் இருக்கின்றார்கள்.

மேலும் உயிரிழப்பு ஒரு பக்கம் என்றால், ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி ஆகிய இருவருமே வேலைக்குச் சென்று வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி, அடிக்கடி குடி தூக்கிக் கொண்டிருக்கும் அவலத்தில் இருந்து விடுபடுவதற்காக சொந்தவீடு வாங்க வேண்டும் என்ற நிலையில்....  இந்த கட்டிடத்தில் வீடு வாங்குவதற்காக பணத்தைப் போட்டிருக்கும், இந்தியாவின் சபிக்கப்பட்ட அப்பாவிகளான நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு சில நூறு குடும்பம், இப்பொழுது தங்கள் பணத்திற்கான வழி என்ன என்று தத்தளித்துக் கொண்டிருப்பதையும் காண்கிறோம். இந்தக் கட்டிடம் மட்டுமல்லாது, அதற்கு அருகில் இருக்கின்ற கட்டிடங்களில் பணம் போட்டிருந்தவர்களுக்கும் இதே நிலை தான்!!!

இது ஒரு சாதாரண பிரச்சினை அன்று. கிட்டத்தட்ட ஐநூறில் இருந்து ஆயிரம் குடும்பங்கள் வரை உயிரிழப்பு, பொருள் இழப்பு, சேமிப்பு இழப்பு, அதன் காரணமாக மிச்ச சொச்ச வாழ்க்கையை ஓட்ட வேண்டியது பற்றிய கேள்விக்குறி....   இது எதனால் நடந்தது? இனிமேல் இது மாதிரி நடக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்க வேண்டும்? என்பது பற்றியெல்லாம், நீதி விசாரணை ஒரு பக்கம், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகளின் விசாரணை ஒரு பக்கம், இதைத் தவிர்த்து முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு அமைத்து அதன் மூலமான விசாரணை ஒரு பக்கம் என்று மும்முனை விசாரணைக்கு ஒரு அரசு உத்தரவிட்டு, மக்களின் எதிர்கால நிம்மதியான வாழ்விற்கும், பாதிக்கப்பட்டவர்களின் நிரந்தரமான நிவாரணத்திற்குமான வழி வகைகளை வெளிப்படையாக திறந்த மனத்துடன் செய்திருக்க வேண்டும்.

ஆனால் இப்பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு கூட அனுமதியளிக்காததும், அப்படி அனுமதிக்காததை மக்கள் மன்றத்தில் போட்டுடைக்க வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகளின் செயலை ஒரு மூத்த அமைச்சரே “ஓடுகாலிகள்” என்று கிண்டல் செய்வதும்....  இந்த அரசினை அதாவது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை ஒரு துக்ளக் தர்பாராகவே தான் பார்க்க வைக்கின்றது....!!!

இது நிச்சயமாக தமிழகத்தின் சோதனைக் காலம் தான்!!!

1 comment:

Anonymous said...

mak ஓடுகாலிகள்தான்