Wednesday, November 22, 2017

ஸ்டாலினை எப்படித்தான் வீழ்த்துவது..?!


அடுத்து தேர்தல் என்ற ஒன்று வந்தால் இவர் தான் வெல்வார் என்று எதிரிகளே ஏற்றுக்கொள்ளும் நிலை தான் இங்கிருக்கிறது..!
இவரை எப்படித்தான் வீழ்த்துவது?!
ஆட்சி அனுபவம் இல்லை என்று ஒதுக்கவும் முடியாது....
சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர் என்று படிப்படியாக ஆட்சி அனுபவத்தை வசப்படுத்தியிருக்கிறார்...!

சிறந்த நிர்வாகி இல்லை என்றும் கூறிட முடியாது...
ஏற்றுக்கொண்ட அனைத்து பொறுப்புக்களையும் திறம்படச் செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முதற்கொண்டு, பயன் பெற்ற மக்கள் வரை அனைவரும் இவரது செயல்பாடுகளை பாராட்டித் தீர்த்திருக்கின்றார்கள்..!
ஊழல் கரை படிந்தவர் என்றும் வாதிட முடியாது...
இத்தனை பெரிய பொறுப்புக்களை வகித்திருந்தும், இதுவரையிலும் ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டை இவர் மீது கூறி ஒரு சின்ன வழக்கு கூட தொடுக்க முடியாத அளவிற்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவுமே வாழ்ந்திருக்கின்றார்...!
உழைக்கத் தயங்குபவர்.. சோம்பேறி என்றும் யாருமே கூறிட முடியாது...
ஒரு நாள் தவறாமல் மக்கள் பிரச்சினைகளுக்காவும், தமிழக நலனுக்காகவும், தமிழகமெங்கும் மக்களோடு மக்களாக சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் ஒரே தமிழக தலைவர் இவர் தான் என்று தமிழகத்தின் சிறு குழந்தைகளுக்குக் கூட தெரியும்..!
இவர் வந்தால் தமிழகத்திற்கு நலன் பயக்கும் தொலை நோக்குத் திட்டங்கள் எதுவும் வந்திடாது என்றும் வாதிட முடியாது...
காரணம், சென்னை மெட் ரோ ரயில், நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்டம், ஒக்கேனக்கல், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள், மகளிர் சுய உதவிக்குழு சுழல் நிதி திட்டம்... இப்படியாக எண்ணற்ற சமூகநல, மக்கள் நலத்திட்டங்கள் இவரது முழு முயற்ச்சியினாலும், உழைப்பினாலுமே வந்ந்துள்ளன என்பதை நாடே அறியும்..!
சரி.. அரசியல் நாகரீகம் தெரியாதவர் என்று சொல்லலாமா என்றால், அதுவும் முடியாது...
காரணம், சமகால அரசியல் எதிரிகளாக இருந்த போதே, இருக்கும் போதே ஜெயலலிதாவிடமும், மோடியிடமும் நேரில் சந்தித்து உரையாடக் கூடியவர் என்பதுகூட அதிசயமில்லை, இவரை அரசியல் ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் வைக்கோவிடமே கண்ணியத்துடன் பழகக் கூடியவர் என்பதை மக்கள் அறிவர்..!
வழவழா கொழகொழா என்று உப்புச் சப்பில்லாமல் ஆட்சியை நடத்துவார் என்று யாரேனும் சொல்வார்களேயானால்...
இவர் பொறுப்பில் இருந்த போது துவக்கிய திட்டங்கள் அனைத்தையுமே, குறிப்பாக மெகா சைஸ் பாலங்களைக் கூட குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடித்து... அதிலும் திட்ட மதிப்பீட்டை விட குறைவான செலவிலேயே முடித்து சாதனை படைத்தவர். காரணம் அந்த திட்டங்களை தினம் தினம் அதிகாரிகளை அழைத்துச் சென்று பார்வையிட்டு துரிதப்படுதியது தான் என்று அந்தந்த பகுதி மக்களே எடுத்துச் சொல்வர்...!


அதெல்லாம் கிடக்கட்டும், அவர் குடும்ப அரசியல் செய்கிறார் என்று போட்டுவிடுவோம் என்றால்...
அவர் மகனோ, மகளோ கட்சியில் எந்தவொரு சிறு பொறுப்பில் கூட இல்லாமல், கட்சி செயல்பாடுகள் எதிலும் தலையிடாமல், தன் திரைத்துறையிலேயே படு பிஸியாக ஈடுபட்டு வருகிறார். ஸோ அதற்கும் வாய்ப்பில்லை..!
யோவ்... இப்டியே சொல்லிட்டிருந்தா எப்டிய்யா...?! வேற எப்படித்தான் அவரை களங்கப்படுத்தி... அவரிடமிருந்து வாய்ப்பை தட்டிப்பறிக்கிறது..?!
சார்... அதுக்கு ரெண்டு மூனு வழி இருக்கு சார்...!
சொல்லித்தொலைய்யாஆஆஆ?!
ஏற்கனவே மக்கள் கிட்ட அப்டி இப்டி பேச்சாகி, கட்சியிலேர்ந்து கட்டம் கட்டப்பட்டுள்ள அவர் அண்ணனை பேச வச்சி, அவர் கட்சிக்குள்ளாற வர்ற மாதிரி நம்ம ஊடகங்களை எல்லாம் ஊதி பெருசாக்க வச்சி, அதை நம்ம சேனல்கள்ல விவாதப் பொருளாக்கி.... மக்கள் கிட்ட இந்த செய்தியை கொண்டு போனா... மக்களும் அதை நம்பி... இவர் கிட்ட ஆட்சியைக் கொடுத்தா, திரும்பவும் பழைய மாதிரி குடும்ப அரசியல், பவர் பாலிடிக்ஸ் நடந்து, இவர் சுதந்திரமா செயல்பட முடியாம போயிடும்ன்னு நினைச்சு.... இவர் ஆதரவு நிலையிலேர்ந்து பின் வாங்க வாய்ப்பு இருக்கு சார்...!
ஹ்ஹா... சூப்பர் ஐடியாய்யா...! உடனே நம்ம ஆளுங்களுங்க கிட்ட சொல்லி அதுக்கு ஏற்பாடு செய்யச்சொல்லுய்யா...!
சரி... வேற என்னென்னா ஐடியா இருக்கு சொல்லு...!
சார்... அவர் வேட்டிக்கு பதிலா அடிக்கடி பேண்ட்டு போடுறாருன்னு சொல்லலாம் சார்...! கலைஞர் மாதிரி கவிதை பாட தெரியலன்னு சொல்லலாம் சார்...! அண்ணா மாதிரி அடுக்கு மொழியில பேச தெரியலன்னு சொல்லலாம் சார்...! பெரியார் மாதிரி பார்ப்பனர்களை இவர் காட்டமா திட்டுறது இல்லன்னு சொல்லி சிறுபான்மையினர் ஓட்டு இவருக்கு கிடைக்காம செஞ்சுடலாம் சார்...!
பரவால்லய்யா.... இதெல்லாம் ரொம்ப மொக்கையா இருந்தாலும்... இதையெல்லாம் நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ங்க கிட்ட கொடுத்து அடிச்சிவிடச்சொன்னா.... இதுக்காக தொகுதிக்கு பத்து இருவது ஓட்டு அவருக்கு குறையும் தானே...!?
ஆமா சார்...!
அப்ப இதையெல்லாம் உடனே முன்னெடுக்க ஆரம்பிச்சிடுங்க....! இப்புடியெல்லாம் முக்குனாதாம்ப்பா... தொகுதிக்கு மூவாயிரம் ஓட்டாவது நமக்கு தேறும்..!


No comments: