Friday, February 15, 2019

பண மதிப்பிழப்பு தீவிரவாதிகளை ஒழிக்கவில்லையா?!

தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான 45 இந்திய வீரர்களுக்கு #வீரவணக்கம்

மோடி ஆட்சி.... அது சொன்ன ஸ்வாட்ச் பாரத் என்கிற தூய்மை இந்தியா திட்டம், கங்கையை சுத்தமாக்குவது, ராமர் கோவில் கட்டுவது, கருப்பு பணத்தை ஒழித்து பொருளாதாரத்தை சீரமைத்து மேம்படுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது, தொழில்துறையை வளமாக்கிட ஜி எஸ் டியை நடைமுறப்படுத்தியது, மேக் இன் இந்தியா திட்டம் கொண்டுவந்தது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வந்து இன்னும் ஒரே ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட கண்ணுக்கு எட்டின தூரம் தெரியாம செஞ்சது, 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் மட்டும் நாட்டிட்டு நிதி கொடுக்காம நொட்டினது....
இப்படி நாலே முக்கால் ப்ளஸ் வருஷத்துல அவர்கள் செய்வதாகச் சொன்ன ஒரே ஒரு திட்டத்தைக் கூட வெற்றிகரமாக நடத்திடாமல், அல்லது மக்கள் தலையில் மண் அள்ளிப் போடுகின்ற அளவில் தான் நடைமுறைப்படுத்தியிருந்தாலும்...
இந்த ஒரு விஷயத்தில் அவர்கள் சமரசமே செய்து கொள்ள மாட்டார்கள் என்றே எல்லோரும் நம்பியிருந்த நிலையில்.... அந்த நம்பிக்கையும் நேற்று தர்ந்து விட்டது..! அவர்களே தம்பட்டம் அடித்துக் கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தீவிரவாதிகள்... பணம் கிடைக்காமல் தீவிர வியாதியில் சிக்கிக் கொண்டார்கள் என்ற பிரச்சாரமும் பொய்துப் போயிருக்கின்றது..!
அங்க அடிப்பட்டு 45 (எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை) ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தியிருக்கின்றார்கள்...
பிரியங்கா காந்தியோ இது அரசியல் பேசுவதற்கான நேரமில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே...
நிதி அமைச்சர் ஃபியூஷ் கோயல்... தேர்தல் கூட்டணி பற்றிப் பேச வந்துள்ளேன் என்று சிரித்தவாறே பேட்டி கொடுக்கின்றார்..!
திமுக பங்கேற்ற வாஜ்பாய் ஆட்சியில் கூட இந்தியா ஒளிர்கிறது என்று கம்பிரமாக தேர்தலுக்கு முன்பாக விளம்பரம் கொடுத்தார்...
அதற்கு ஏற்றார்போல, இன்றைக்கும் நினைவில் கொள்ளத்தக்க வகையில், அவர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றாக இணைத்த தங்க நாற்கர சாலை ஒளிர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
(ஒரே இந்தியா என்று சொல்லி, இந்தியாவையும் இந்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டுமானால் இப்படியான திட்டங்கள் தான் உதவும்..! அதை விடுத்து ஒரே மொழி, ஒரே சாப்பாடு, ஒரே சாமி, ஒரே பண்டிகை, ஒரே உடை.... இப்படியெல்லாம் பேசினால் உடைந்து தான் போகும்... இல்லை என்றால் அப்படி பேசுபவர்களுக்கு இந்தியர்களின் உதை தான் கிடைக்கும்..!)
கடும் நிதி நெருக்கடியிலும், உலக பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்தும்..., போக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தி பாகிஸ்தானை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்துக்கே உதறல் கொடுத்து, இந்தியர்களை கொஞ்சம் கம்பீரமாக ஃபீல் செய்ய வைத்து, அந்த ஃபீலுங்குக்காகவே உலக பொருளாதார தடையால் ஏற்பட்ட சிறு கஷ்டங்களைக் கூட இஷ்டப்பட்டு ஏற்க வைத்தார்..!
அப்படிப்பட்ட வாஜ்பாயின் ஆட்சி மீண்டும் வர முடியாமல் போனதற்கு காரணமே, அந்த ஆட்சிக்காலத்தின் கடைசி ஓராண்டில் அப்போதைய ஆர் எஸ் எஸ் டார்லிங்கான அத்வானியை அனைத்திலும் மூக்கை நுழைக்க அனுமதிக்கப்பட்டதால் தான்..!
அதனால் தான் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அக்கூட்டணியில் இருந்து விலகி சோனியாவால் ஒன்றிணைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு அடுத்த பத்து ஆண்டு காலம் ஆட்சி ஆளும் வாய்ப்பினைப் பெற்றன..!
மீண்டும் ஒரு முறை இந்தியர்கள் ஆர் எஸ் எஸ் டார்லிங்கான மோடிக்கு முழு அதிகாரத்துடன் ஆட்சி ஆளும் வாய்ப்பினை நல்கிய நிலையில்... அவர்கள் அனைத்து துறையிலும் கோட்டை விட்டு, இப்பொழுது ஆட்சி முடிய முப்பது நாட்களே இருக்கின்ற நிலையில் கையை பிசைந்து கொண்டு நிற்பது... இந்தியாவை உண்மையாகவே நேசிக்கும்.... இந்தியர்கள் யாராலும் ஏற்க முடியாத ஒன்று..!
தேர்தலை மனதில் வைத்து இவ்விஷயத்திற்காக பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது, இந்தியர்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு பதற்றத்தை ஏற்படுத்துவது எல்லாம், இந்த பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை தரவே தராது..!
புதிய தலைமுறை போன்ற பாஜக ஆதரவு ஊடகங்கள் இவ்விஷயத்திற்காக பாகிஸ்தானுடன் இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்று இந்தியர்கள் கொந்தளிப்பது போல செய்திகள் வெளியிடுவது.... இந்தியாவின் மீதும், இந்திய மக்கள் மீதும் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத செயல்..!

No comments: