Monday, February 11, 2019

தேர்தல் T 20... நொடிக்கு நொடி விறுவிறுப்பு - பரபரப்பு..!


இன்னும் ஒரு மண்டலம்...
அதாவது கிட்டத்தட்ட 48 நாட்கள்...
அரசியலை படிக்க விரும்பும்..., பழக விரும்பும்..., புரிந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் உற்று கவனிக்க வேண்டிய காலம்..!

இதை ஒரு விரதம் போல் இருந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொரு பெரிய கட்சியிலிருந்து, லெட்டர் பேட் கட்சி வரையிலும், அவர்கள் கொடுக்கின்ற அறிக்கைகளை, விடுகின்ற சவால்களை, செய்கின்ற சமாதானங்களை, கடந்து போகின்ற முக்கிய பிரச்சினைகளை, தூக்கி வைத்துக் கொண்டாடுகின்ற அல்ப விஷயங்களை....
இப்படியாக ஒவ்வொன்றையும் மனதில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இவர்கள் உண்டு என்றால் அது இல்லை என்றும்.... இல்லை என்றால் அது உண்டு என்றும்... கூடாது என்றால் அது வேண்டும் என்றும்.... வேண்டும் என்றால் அது ஆகாது என்றும்... அழைத்தால் அவர்களை அரவணைக்கவே போவதில்லை என்றும்... அரவணைக்கப் போகின்றவர்கள, கண்டுகொள்ளாமல் நாள் கடத்துவதும்....
இவை அனைத்துமே இல்லாத கயிற்றின் மேல் நடந்து காட்டுகின்ற அரசியல் சாகசங்கள்..!
ஒரு சாதாராண அரசாங்க வேலைக்கே.... எத்தனை பெரிய உழைப்பு..., பணம்..., சமரசங்கள்..., சமாதானங்கள்..., போட்டிகள்... பொறாமைகள்.....

அப்படியிருக்க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாகின், இங்கு எதுவுமே தப்பில்லை... இது எக்ஸாம் ஹால்... இங்கு வெற்றி மட்டுமே குறிக்கோள்... தோற்றால் அதல பாதாளத்திற்கு சென்று விடுவார்கள்.... ஆகவே வெற்றிக்கான அனைத்துமே இங்கு புனிதப்படுத்தப்பட்டு விட்டும். தோற்றவர்களை ஏன் தோற்றாய் என்று காறி உமிழ்வார்கள்.

ஸோ.... இன்னும் ஒரு மண்டலத்திற்கு இங்கு எதுவுமே தப்பில்லை..!

கடந்த தேர்தலில் கடைசிவரை கூட இருந்து, அனைவரையும் கூட்டிக் கொடுத்த வைக்கோவுக்கு அவர் கேட்ட அளவு தொகுதிகளை கனத்த இதயத்துடன் ஜெயலலிதா மறுத்து... வெற்றியை ஈட்டினார். அங்கு மனிதாபிமானம், நியாய தர்மம் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்திருந்தால், வைக்கோவாலேயே தோற்றுப்போயிருப்பார்.

அதே வைக்கோ அதற்கு முன்பு ஒரு முறை கடைசி வரை திமுக கூட்டணியில் இருப்பதாக வாக்குக் கொடுத்து கலைஞரை நம்ப வைத்து, அவர் அசந்திருந்த வேளையில் அனைவரையும் தூக்கிச் சென்று ஜெயலலிதாவிடம் அடமானம் வைத்து மண்டியிட்டவர் தான் அந்த வைக்கோ. 2001இல் அவர் கலைஞருக்கு கொடுத்ததை, 2011இல் ஜெயலலிதா அவருக்கு திருப்பிக் கொடுத்தார்..!

ஆகையால் இது எதுவுமே இன்னும் ஒரு மண்டலத்திற்கு தவறில்லை. வெற்றி மட்டுமே இங்கு குறிக்கோள்... வெற்றியாளன் மட்டுமே இங்கு திறமைசாலியாக கருதப்படுவான். ஏனெனில் இது வரலாறாக பதிவாகப் போகின்ற விஷயம். இன்னும் 100 வருடம் கழித்தும் எடப்பாடி முதல்வராக இருந்ததை படிப்பார்கள். ஆனால் அவர் யார் காலை பிடித்து, டயரை நக்கி வந்தார் என்றெல்லாம் வரலாறு பதிவு செய்யாது..!

இதோ சதுரங்க ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. இந்தப் பக்கத்து ராஜாவும் எதிர்தரப்பு ராஜாவும் கடைசி வரை காப்பாற்றப்பட வேண்டும். இருவரும் நேருக்கு நேர் மோதவே மாட்டார்கள். சுற்றி வளைத்து யார் யாரோ யார் யாருடனோ, சம்பந்தமே இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

வியூகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அருகிலேயே இருக்கின்ற பலம் மிக்க ராணி கூட பலி கொடுக்கப்படுவார்.... ராஜாவைக் காப்பாற்ற. ஏனெனில் ராஜாக்கள் முக்கியம்..! எத்தனை முறை வேண்டுமானாலும் ராஜாக்களுக்கு செக் வைக்கலாம்.
ஆனால் அவற்றையெல்லாம் அனாயாசமாக கடந்து சென்று எதிர் ராஜாவுக்கு தன் சிப்பாயைக் கொண்டே செக் மேட் வைக்கும் லாவகம் இறுதி வெற்றியை அடையப்போகும் ராஜாவுக்கு மட்டுமே உண்டு..!

அந்த ராஜா யார்?

அவர் இந்த ஒரு மண்டலமும் ஒர் டேக்ஸ் ஃப்ரீ ஸோன் என்ற புரிதலோடு செயல்படுபவராக இருப்பவர் தான் அந்த ராஜா..!
இந்த ஒரு மண்டலமும் கொள்கைக்கோ, கோட்பாடுகளுக்கோ, நியாய தர்மங்களுக்கோ, மனிதாபிமானங்களுக்கோ இடமே கிடையாது என்று புரிந்து வைத்திருப்பவர் அந்த ராஜா..!
ராஜா என்றால் வெல்ல வேண்டும், இல்லை என்றால் வெட்டப்படுவார் என்ற புரிதோடு இந்த ஒரு மண்டலமும் செயல்படுவார் அந்த ராஜா..!

உதாரணத்திற்கு திமுக யாரை எதிர்த்து கொள்கையாடியதோ, அந்த குலத்தலைவனோடு ஒப்பந்தம் போட்டு முதல் வெற்றியை ஈட்டித் தந்து, அந்த வெற்றியை தன் குலத் தலைவனிடம் காணிக்கையாக வைத்தாரே பேரறிஞர் அண்ணா... அந்தவொரு மகா யுக்தியோடு இந்த ஒரு மண்டலமும் செயல்படுவார் அந்த வெற்றியாளர் ராஜா..!
இந்த ஒரு மண்டலமும் விதிவிலக்குகள் மட்டுமே வெற்றியாளருக்கான ஆகப் பெரிய ஆயுதம்..!
இதைத்தான் அரசியல் மாணக்கர்கள் உன்னிப்பாக கவனித்து பதிவு செய்ய வேண்டும்..! ஒரு டென்னிஸ் மேட்ச் பார்ப்பதை விட, வேர்ல்ட் கப் ஃபுட் பால் ஃபைனல் மேட்ச் பார்ப்பதை விட, டி 20 கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதை விட, ஸ்பீட் திரைப்படம் பார்ப்பதை விட...

இந்த ஒரு மண்டலமும் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே, பிரேக்கிங் நியூஸ்களையும், பிக் பிரேக்கிங் நியூஸ்களையும், மாற்றங்களையும், ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்..!
கெட் ரெடி.... எல்லோரும் இந்த அற்புதமான அனுபவத்திற்கு தயாராவோம்..!


No comments: