Tuesday, July 16, 2013

பிறப்பொக்கும்...! இப்படிக்கு வள்ளுவர்.

அங்கே பெரிய கூட்டம். பரபரப்பும் ஆவேசமும் நிறைந்த மனிதர்கள்!... இங்கே இருந்து பார்க்கும் போது இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாதிரி தோனுது. இரண்டு தரப்புமே ஒருத்தரை ஒருத்தர் வெட்டிச் சாய்க்க வெறி கொண்டு துடித்துக்கொண்டிருப்பது புரிகிறது. காவலர்கள் சிலர் கடமையேன்னு கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.....
 
ஜி ஹெச்சின் கட்டக் கடேசில தான் அந்த பிணவறையும் இருந்தது. அதன் வெளிப்பக்க சுவற்றில் சாய்ந்து கொண்டு தான் இவன் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். அரைக்கால் டவுசர், தொளதொளவென்றிருக்கும் பழைய காக்கிச் சட்டை. வேட்டியை தலையில் முண்டாசாக கட்டிக்கொண்டிருந்தான்.
 
குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவன், இரு கைகளாலும் முழங்கால்களை கட்டிக்கொண்டிருந்தான். தொலைவில், மருத்தவமனையில் வாயில் அருகே நடந்து கொண்டிருந்ததை ஒருவாராக ஊகித்துக்கொண்டவன், அலட்சியமா அல்லது விரக்தியா என்று சொல்லத்தெரியாத ஒரு வித புன் முறுவலுடன் கைகளைப் பிரித்தவாறு பக்கவாட்டு தரையில் ஒரு கையை ஊன்றி
காலை நீட்டி உட்கார எத்தனித்தபோது தான், அந்த ஆளைப் பார்த்தான்.....
 
....பிணவறையின் வாயிலில், படிக்கட்டுக்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இவனையும் அந்த கலவரத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் அந்த முதியவர்!
 
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அந்த இரண்டு குழுவும் மருத்துவமனை எதிரில் நடு ரோட்டில் அமர்ந்து விட்டனர். இரண்டு பெரிய வேன்களில் எக்கச்சக்கமாக போலீஸ் வந்து குவிக்கப்பட்டிருந்தது.
 
அந்த ரெண்டு பொணத்தையும் வச்சிக்கிட்டு காலைலேர்ந்து இதே மாதிரி தான் பிரச்சினை பண்ணிட்டிருக்காங்க. நேத்திக்கி வரைக்குமாவுது ரெண்டு பொணமும் அரைக்குள்ள சேப்டியா இருந்திச்சி.....  இப்போ காலைலேர்ந்து வெய்யில்ல கெடத்து அழுவிட்டிருக்கு....
 
அந்த பெரியவர் கேட்பதாக நினைத்துக்கொண்டு இவன் பேசிக்கொண்டிருந்தான். இந்த ரெண்டு பேரோட கவனமுமே மண் தரையில் கிடந்த அந்த ரெண்டு பொணத்து மேலயும் தான் இருந்திச்சி. கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கெல்லாம் பொட்டலம், டீ, கட்டு சாப்பாட்டுன்னு அப்பப்ப வந்திட்டிருந்திச்சி. அதில் தலைவர்கள் மாதிரி தெரிந்த சிலர் போலீஸாருக்கும் வாங்கித் தந்தார்கள்.
 
இவன் போயி ரெண்டு பக்கமும் கேட்டும் ஒன்னும் கிடைக்கல. சில போலீஸார் சாப்பிடாமல் வைத்திருந்ததை இவனை அழைத்துக் கொடுத்தார்கள். இவன் சாப்பிட்டுக்கொண்டே ஒரு பொட்டலத்தை எடுத்து முதியவரிடம் நீட்ட, “ஆச்சு”ன்னு ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார்.
 
நேரம் மாலையைக் கடந்து இரவையும் தொட்டது. யார் யாரோ வந்தார்கள். வெள்ளை வெளேர், சலவை சட்டை வேட்டியில். கிட்டத்தட்ட இரவு பதினோறு மணிக்கு கூட்டம் கலைவது போல் இருந்தது. அதற்குள் இவன் ரெண்டு ரவுண்டு தூங்கி விழித்திருந்தான்.
 
கூட்டத்திலிருந்து கம்பௌண்டர் வேகமாக இவனை நோக்கி வந்தார். எலேய் மகராசா, உனக்கு வேலை வந்துடுச்சிடா. இங்க வா. வந்து இது ரெண்டுத்தையும் எடுத்துட்டு போயி எரிச்சிட்டு வந்துடுடா.....
 
கடகடன்னு கட்டிடத்தின் பக்கவாட்டுப்பக்கம் ஓடியவன் நான்கு சக்கர பிணம் சுமக்கும் வண்டியை தள்ளிக்கொண்டு வந்தான். பெருவாரியான கூட்டம் கலைந்து விட, ஓரிருவர் மட்டும் இரண்டு பிணங்களையும் சற்று எட்ட நின்று வாயையும் மூக்கையும் சேர்த்து மூடியவாறு அழுது கொண்டிருந்தார்கள்.
 
ஐயா, யாராவது வந்து கொஞ்சம் பிடிங்கய்யா, ரொம்ப கனக்குது. நாளு முழுக்க வெய்யில்லயும், பனியிலயும் கிடந்தா இப்புடித்தான். யாருக்காவது புரியுதா? என்று இவன் சத்தமாக முனுமுனுக்க....
 
கம்பௌண்டர் தான் அதட்டினார்! எலேய், நாறுதுல்ல? எப்புடிடா கிட்ட வரமுடியும்? தோ..... காயத்துல எல்லாம் புழு வக்க ஆரம்பிச்சிருச்சி....   ஒரு ஆஃப்பு எக்ஸ்ட்ராவா வாங்கித்தரச் சொல்றேண்டா....
 
தூக்கிப் போடுற வரைக்கும் தாண்டா கஷ்டம். அப்பறம் வண்டிய தள்ளிட்டிப்போயி சுடுகாட்டுல ரெண்டையும் தள்ளிட்டின்னா போதும், எரிக்கிறதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாங்க.
 
யாரோ ஒருத்தார், எதெதோ பேப்பரில் அங்கிருக்கும் பத்துப்பதினைந்து பேரிடம் கையெழுத்தெல்லாம் வாங்கினார்கள். அங்கேயே சீல் எல்லாம் வைத்தார்கள். இவனிடமும் ரெண்டு பேப்பரில் கையெழுத்து கேட்டார்கள். பெருமையாக கைநாட்டு பதித்தான்!
 
ஒன்னு முடிஞ்சிது.... இது தான் ரொம்ப கனபாடியா இருக்குன்னு சொல்லிக்கிட்டே, அதிகமாக தரையில் இழுபடாதவாறு ரொம்ப கஷ்டப்பட்டு தோளில் தூக்கி, இதையும் வண்டியில் போட்டான்.
 
இவனிடம் ஒன்றிரண்டு பேர் வந்து தனித்தனியாக நூறு ரூபாய் தாளை கைகளில் திணித்தார்கள். ஒருவன் வந்து இரத்தக்கலர் திரவம் நிறப்பிய பட்டை பாட்டிலை தந்தான். சந்தோஷமாக வாங்கி டவுசர் பையில் வைத்து, ஒருமுறை தொட்டுப்பார்த்துக்கொண்டான்.
 
விடியற்காலை நாலு மணிக்குத்தான் பிணவரை பக்கம் வந்தான் நம்ம மகாராசா. அப்பவும் அந்த முதியவர் அதே இடத்தில் அமர்ந்திருந்தார். கொஞ்சம் தள்ளாட்டமாக இருந்தவன் சாப்ட்டியா பெருசு?ன்னு கேட்டுக்கிட்டே அவர் அருகில் அமர்ந்தான்.
 
ஒருத்தன் தாழ்த்தப்பட்டவனாம்... இன்னொருத்தன் பெரிய ஜாதியாம்....!  ரெண்டு பேத்தோட மவனும் மவளும் ஓடிப் போய்ட்டாங்க. இவிங்க ரெண்டு பேரும் நாண்டுக்கிட்டு செத்துட்டாய்ங்க. இது உள்ள தான் நாலு நாள் இருந்திச்சி. இன்னிக்கு அது ரெண்டுத்தையும் எடுத்துட்டுப் போவ வரச்சொல்ல தான், அடிதடி தகராறு எல்லாமும்!
 
பொணத்த வெயில்ல போட்டுக்கிட்டு, ஒரு நாளு முக்க வேலை வெட்டிய விட்டுட்டு கூத்துக்கட்டிட்டு போய்ட்டானுவோ. ஊதிப்போன பொணத்தை நீ தூக்கிப்பாரு தெரியும்!
 
தரையில இழுத்துட்டுப்போவ மனசு வருதா?....   நம்மளமாதிரி ரத்தமும் சதையுமா, ஆவிய உள்ள புடிச்சி வச்சிக்கிட்டு நாலு நாளு முன்னாடி வரைக்கும் சுத்திக்கிட்டு திரிஞ்சவய்ங்க தான? அந்த உசிருங்க இத்தன நாளு இருந்த கட்டைய அசிங்கப்படுத்தலாமா சாமீ?
 
அதான் முடிஞ்ச வரைக்கும் காட்டுலயும் அம்மாசிக்கு கூட மாட ஒத்தாசையா இருந்து எரிச்சு போட்டுட்டு வந்தேன்!!! என்னைய விட அவிங்க ரெண்டு பேத்தோட கூட்டமுமே உசந்த ஜாதி காரவுக. நாத்தம் வந்துடிச்சி, புழுவும் வச்சிடிச்சி...  எப்புடி சாமி அவிங்க தொட முடியும் அத?
 
படிக்கட்டில் தலை வைத்து அவன் தூங்க முற்பட்ட போது தான், அந்த முதியவர் ஒரு காகிதத்தில் தான் எழுதிக் கொண்டிருந்ததை சத்தமாக வாசித்தார்.....   திடுக்கிட்டு எழுந்தவன் என்ன சாமீ உளர்ற? என்று கேட்கவும்...  மீண்டும் ஒரு முறை இப்படி வாசித்தார்....!

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

 
எனக்கு புரியிற மாதிரி பேசு சாமீ!!

அவன் இல்லடா ஒசந்த ஜாதி. உன் வேலையை, கடமையை, சிரிச்சிக்கிட்டே, நேசிச்சிக்கிட்டே, தெளிவா, சிறப்பா செஞ்ச பாரு.....  நீ தாண்டா உசந்த ஜாதி.



10 comments:

cheena (சீனா) said...

அன்பின் கொக்கரக்கோ - குறுகத் தறித்த ஒண்ணே முக்கா அடி - ஏழே ஏழு சீர் குறளுக்கு ஒரு அருமையான கதை - நாட்டு நடப்புகளில் ஒன்றினை அடிப்படையாக வைத்து புனைந்த கதை அருமை அருமை - நன்றி நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

மறூமொழிகள் பிந்தொடர்வதற்காக இம்மறுமொழி

saidaiazeez.blogspot.in said...

Avan uyarndha jaathi alla, UYARNDHA MANIDHAN

சேலம் தேவா said...

திருக்குறளைப் போலவே எளிமையாகவும்,மனதில் தைக்கும்படியாகவும் தற்போதைய சூழ்நிலைக்கேற்ற கதை அண்ணா...

சேலம் தேவா said...

திருக்குறளைப் போலவே எளிமையாகவும்,மனதில் தைக்கும்படியாகவும் தற்போதைய சூழ்நிலைக்கேற்ற கதை அண்ணா...

நாய் நக்ஸ் said...

டச்சிங்....

இந்தமாதிரி ஆட்கள் எல்லாம் இனி கிடைப்பது அரிது....நிஜ வாழ்வில்....

ராஜி said...

அவன் இல்லடா ஒசந்த ஜாதி. உன் வேலையை, கடமையை, சிரிச்சிக்கிட்டே, நேசிச்சிக்கிட்டே, தெளிவா, சிறப்பா செஞ்ச பாரு..... நீ தாண்டா உசந்த ஜாதி
>>
நிஜம்தான்

கௌதமன் ராஜகோபால் said...

இது புரியாமல்தான் நான் பெருசு நீ பெருசுன்னு அழையிறாங்க கொள்ள பயபுள்ளைக.. என்னத்த சொல்லி இவங்கள திருத்திட முடியும்னு யோசிச்சுபாத்தா, நமக்கு முன்னாடி இருந்தவங்க எத சொல்லாம போயிருக்காங்க, அத புரிஞ்சு நடந்துக்க ஆள் இல்லைங்கும்போதுதான் எல்லாமே வீனா என சந்தேகம்.. திருவள்ளுவர் ஒன்னே முக்கால் அடில ஆறடி மனுஷனுக்கு சொன்னது இங்க எந்த மனுசனுக்கும் புரிய மாட்டேங்குதா??/

ஓலை said...

Nice one Sowmiyan.

ஜோதிஜி said...

இந்த உங்களின் எழுத்து திறமை பல சமயம் அரசியல் எழுத்துகளில் அடிப்பட்டு போவதை பல முறை கவனித்துக் கொண்டே வருகின்றேன்.