Saturday, June 23, 2012

இண்டர்வ்யூ

வீடே பரபரன்னு இருந்திச்சி. நிச்சயம் இந்த வேலை கிடைச்சிடும்னு ஊர்ல இருந்து வந்திருந்த என் சின்னக்கா சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பா தான் நான் போட்டுச் செல்லப்போகும் ஷூவுக்கு. கிழிந்த வேஷ்ட்டியில் ஆள்காட்டி விரலை விட்டு நுனியில், விபூதி பொட்டலம் மாதிரி பேப்பரில் மடித்து வைத்திருந்த ஷூபாலிஷை தொட்டு, ஷூவின் மேல் பொட்டு பொட்டாக வைத்து.... பிறகு கரகரவென்று வேகமாக தேய்த்துக் கொண்டிருந்தார்.

தோ பார்டா தம்பி, காம்படீஷன் சக்ஸஸ்ல போட்ருக்கான், நல்லா தலைய சீவி முடி பறக்காத மாதிரி இருக்கனுமாம். தேங்காண்ணைய தடவினா வெயில் ஏற ஏற மூஞ்சில வழிய ஆரம்பிச்சிடும். அத்தான் யூஸ் பண்ணிட்டிருக்குற ப்ரில் க்ரீம் ட்யூப் முடியறா மாதிரி இருந்திச்சி. அத நான் எடுத்துட்டு வந்திருக்கேன்.

காலைல குளிச்சோடுன எண்ணைய தடவிடாத. வெளில நின்னு தலைய காய வச்சிட்டு அப்படியே இந்த ஜெல்ல போட்டு சீவிட்டு போயிடு...

சரிக்கா அதெல்லாம் நான் பாத்துக்கறேன். ஆன இண்டர்வ்யூல எல்லாம் பொதுவா ஆரம்பிக்கறச்சே, அவங்க கம்பெனிய பத்தி நமக்கு எந்த அளவுக்கு தெரியும்னு கேப்பாங்களாம். அப்ப அவங்க கம்பெனிய பத்தி அக்குவேற ஆணி வேறா சொல்லிட்டோம்னா, அதுலயே இம்ப்ரஸ் ஆகி, மத்த கேள்வில்லாம் நமக்கு ஃபேவராவே இருக்குமாம்க்கா......,  நம்ம சுவாமியோட மாமா தான் இதெல்லாம் சொன்னார்.

அப்டீன்னா, நீ போறது பெயிண்ட் கம்பெனி தான? நம்ம அய்யர் கடை தான் அதுக்கு ஹோல் சேல் எல்லாம். நான் போயி அந்த பெயிண்ட் விலை பட்டியில் மத்த சமாச்சாரம்லாம் வாங்கிட்டு வந்துடறேன். நீ மத்த வேலைய பாருன்னு அப்பா சொல்லிட்டு எழுந்து சட்டைய மாட்ட ஆரம்பிச்சிட்டார்.

மத்தியானம் சாப்பாடு லைட்டா இருந்தா போதும்னுட்டேன். அதுனால எல்லாருக்குமே ஒரே ரசம் வைத்து கூழ்வடாம் வருத்து வைத்துவிட்டார் அம்மா. பாவம் அக்கா வீட்டுல நான்வெஜ் சமைக்க மாட்டாங்க, இங்க வந்தா தான் தினம் செஞ்சி சாப்ட்டு போவாங்க. இன்னிக்கு அது கட்.

சாப்பிடும் போது, நாளைக்கு அக்காவுக்கு மீன் எடுத்து சமச்சிடும்மான்னு சொன்ன்னேன். அதுக்கென்னடா, இதெல்லாம் பெரிய விஷயமா, நீ நல்லபடியா இண்டர்வியூவ முடிச்சிட்டு வா, அதுக்காக நாளைக்கு நம்ம காளியம்மன் கோவில்ல 108 சுத்து சுத்தி விரதம் இருக்கப் போறேன். நீ தான் நாலாண்ணக்கி வந்துடுவேல்ல, அப்ப மீன் எடுத்து எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம்... அக்கா சொன்னுச்சி.

அக்காவின் ஒரு வயது மகனிடம் அரை மணி நேரம் விளையாடிவிட்டு,  சேகரித்து வைத்திருந்த பெயிண்ட் டெக்னாலஜி பற்றிய புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். ரெண்டு மூனு பெயிண்ட் ஷேட் கார்டும், குறிப்பு எழுதப்பட்ட ஒரு ரோக்கா பேப்பருமாக அப்பா உள்ளே வந்தார்.

இது மூனும் தான் அந்த கம்பெனியோட கலர் அட்டையாம். இதுல அவங்க தயார் பண்ற அத்தனை பெயிண்ட் லிஸ்ட்டும் இருகாம். இந்த பேப்பர்ல, அவங்க கம்பெனி ஆரம்பிச்ச வருஷம், எங்கெங்க தயாரிக்கிறாங்க, எத்தனை டீலர்கள் இருக்காங்க....  அப்டீங்கற விவரம்லாம், ஐயர் சொல்லச் சொல்ல எழுதிட்டு வந்துட்டேன்.

ச்சே... என்ன மாதிரியான மனுஷன் இவர்? தன்னால் இயலுகின்ற உச்சம் வரை சென்று, அங்கிருக்கும் எனக்கானதை தருவித்து விடுகிறாரே?! அதுவும் ஆசை ஆசையாய்!

நான் யாரும் அடைய முடியாத உச்சத்தை அடையக்கூடாது என்று ஆண்டவன் நினைத்து விட்டான், அதனால் தான் உனக்கு எந்த வசதி வாய்ப்பையுமே தராமல் அவன் தட்டி விட்டான் போலிருக்கிறது என் தந்தையே! ஆனாலும் நீ சந்தோஷிக்கும் அளவிற்கான ஒரு உயரத்தை நான் அடைவேன். அதுவும் உனக்காகவே அதை அடைவேன்......!!!

இரவு அப்பாவே வந்து ரயிலேற்றி விட்டார்......

சுஜாதா கதைகளையும், கட்டுரைகளையும் படித்துப் படித்து, பெங்களூருவை வெளிநாட்டிலிருக்கும் நகரம் ஒன்றினைப்போல் இருக்கும் என்று பெரிய அளவில் கற்பனை செய்து வைத்திருந்தேன். குளிர் மட்டும் நம்ம ஊரை விட அதிகமாக இருந்தாலும், ஜன நெருக்கடி, பரபரப்பு அது இதுன்னு பார்த்தா, சென்னையை விட உசத்தியாக மனத்து எதுவுமே படவில்லை.

அந்த எண்ணம் வந்துவிட்டதாலோ என்னவோ? புது ஊர், வெளி மாநிலம என்ற பயம், படபடப்பு எல்லாம் எதுவுமில்லாம், அரை மணி நேரத்தில் சகஜமாகிவிட்டேன்.  நானே விசாரித்துக் கொண்டு சென்று நண்பனின் அண்ணன் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினேன்.

சரியாக ஒன்பது நாற்பதுக்கெல்லாம், பஸ்ஸிலிருந்தபடியே இண்டர்வ்யூ நடக்கவிருக்கும் கட்டிடத்தைச் சுட்டிக் காட்டிவிட்டு, பஸ் அடுத்த ஸ்டாப்பில் நின்றதும், பெஸ்ட் ஆஃப் லக் சொல்லி கைகொடுத்து இறங்கச் சொல்லிவிட்டு அந்த பஸ்ஸிலேயே அந்த அண்ணன், தன்னுடைய கம்பெனிக்குப் போய்விட்டார்.

ஒரு நிமிட நடையிலேயே கட்டிடம் பிரம்மாண்டமாக கண்முன்னே விரிந்தது. ஆச்சர்யமாக பார்க்க முற்படும் போதே, 50 க்கும் அதிகமானோர் ஷூ, டை எல்லாம் அணிந்து கையில் ஃபைலோடு நின்று கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டு காதுகளுக்கு பின்புறம் கொஞ்சம் கீழாக இறங்கினாற் போன்ற இடத்தில் சிவ்வென் வெப்பநிலை அதிகமானது....

மனது ஏனோ தானாக அப்பாவை நினைத்துக் கொண்டது....  "தம்பி இதுல ஜெயிக்கணும்கறது எல்லாம் முக்கியமில்லடா, ஆனா இது உனக்கு ஒரு நல்ல அனுபவமா இருக்கணும். அதுக்கு மட்டும் உன்னை தயாரா வச்சுக்க.. சரியா?"  என்று கிளம்பறச்சே ஆசீர்வாதம் பண்ணும் போது சொன்னது ஒரு முறை மனதுக்குள் வந்து போனது.

பின் மண்டையில் ஏறிய வெப்பம் தானாக இறங்கத் தொடங்கியது. ஃபைலுக்கு அடியில் உள்ளங்கையை மடித்து இடுப்புக்கு கீழான பக்கவாட்டில் அனைத்துச் சென்றவன், அனிச்சையாக அதன் மேல் பக்க அடிமுனையை இரு விரல்களால் மட்டும் பிடித்துத் தொங்கவிட்டபடியே, நேர்காணலுக்கு வந்திருக்கும் சக தோழர்களிடம் என்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.!!

கடைசியில் மொத்தமாக 112 பேர் தேறினார்கள். எல்லோருக்கும் ஒரு படிவம் கொடுத்து பூர்த்தி செய்து வாங்கப்பட்டது. எல்லோரும் ஒருவருக்கொருவர் சந்தேகங்களைக் கேட்டு சரி செய்து பூர்த்தி செய்ய,. நான் மட்டும் வேண்டுமென்றே, என் புத்திக்கு சரி என்று படுவதை பூர்த்தி செய்து முதல் ஆளாக நீட்டினேன். எல்லோருக்கும் என்னைப் பார்த்து பின் காதில் வெப்பம் ஏறியிருக்கும் போல் தோன்றியது!.

சரியாக பத்து பத்துக்கெல்லாம் ஒரு காப்பியும் இரண்டு மேரி பிஸ்க்கெட்டும் கொடுத்தார்கள். வழுவழுவென்ற தரை. பொதுவாக எங்க ஊர்ல அதை சலவைக் கல் என்போம். 15 அடிக்கும் அதிகம் உயரமான மேல் தளம். ஃபேன் கண்ணில் படவில்லை.  ஆனாலும் கொஞ்சம் குளிராகத்தான் இருந்தது. ரம்மியமான வாசம் வீசிக் கொண்டிருந்தது. இலேசாக ஏதோ வயலின் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. இரண்டு நிமிடம் கூர்ந்து கவனித்த பின்பு அது லால்குடி என்று தெரிந்தது.

கசமுசவென இருந்த பேச்சு சத்தம், கால் மணி நேரத்தில் தானாகவே அடங்கிவிட்டிருந்தது. ஒரு இருபது பேர் வரை பெரிய அப்பாடக்கர்களாகத் தெரிந்தார்கள். அதில் கிட்டத்தட்ட எல்லோருமே வெள்ளையாக இருந்தார்கள். பலர் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார்கள். கூடுமானவரை ஆங்கிலத்திலேயே பேச முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

பல ஊர்களிலிருந்தும், மாநிலத்திலிருந்தும் வந்திருந்தாலும் அந்த ஒரு சிறிய கூட்டம் மட்டும், மோப்பம் பிடித்து ஒரு அணியாக கூடிக் கொண்டார்கள். மற்றவர்கள் அவர்களிடமிருந்து இயல்பாகவே பிரிந்து விட்டிருந்தார்கள்.

ஆனாலும் ஏதோ ஒரு வேற்று உலகத்தில் இருப்பது போலவும், எங்க ஊரு பசங்கள விட நான் சற்று உயர்ந்த நிலைக்கு வந்து விட்டது போன்ற மன உயர்வு நிலை ஏற்பட்டிருந்ததை என்னால் மறைக்க முடியவில்லை. உடனே நண்பன் சாமிநாதனிடம் பேசி இதையெல்லாம் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

சரியாக பத்தரை மணிக்கெல்லாம் அனைவரும் ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நான்கு விடைகளில் ஒன்றை தெரிவு செய்யும் படியான முப்பது கேள்விகளைக் கொண்ட ஒரு படிவம் கொடுக்கப்பட்டது. 11 மணிக்குள் திருப்பித் தந்துவிட வேண்டும் என்ற கட்டளையுடன் எழுத பணிக்கப்பட்டோம்.

இன்னும் ஒரு 50 பேர் கூடுதலாக அமரும் அளவிற்கான ஹால் அது. நல்ல குளிரடித்தது, ஏதோ ஒரு துவாரத்திலிருந்து குளிர் காற்று வருவது மட்டும் உறுதியானது! வெளிச்சத்திற்கு குண்டு பல்பு, ட்யூப் லைட் என்றில்லாமல் வேறு மாதிரி இருந்தது. மிகவும் அழகாய் தெரிந்தது.....

அமர்வதற்கு இலேசாக குஷன் செய்யப்பட்ட இருக்கை, எழுது பலகையும் இணைக்கப்பட்டிருந்தது புது மாதிரியாக இருந்தது. எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தார்கள். டிக் தானே செய்யச் சொல்லியிருக்கின்றார்கள், இவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்றே புரியவில்லை.

என் வேலையை ஆரம்பித்தேன். ஒரு கேள்வி கூட பெயிண்ட்டுக்கு தொடர்புடையதாக இல்லை.. பொதுவான வினாக்கள் தான். ஒரு வினா போஃபோர்ஸ் பற்றிக் கூட கேட்டிருந்தார்கள். கேள்விகளை படித்தவுடன் முதலில் மனதுக்கு தோன்றிய பதிலை டிக் செய்து கொண்டே வந்தேன். பத்து நிமிடத்தில் முடிந்து விட்டது. இதையும் முதல் ஆளாக நானே கொடுத்தேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பது புரிந்தது.

சரியாக 11.30 க்கெல்லாம் ஒரு பேப்பர் கொண்டுவந்து அங்கிருந்த நோட்டீஸ் போர்டில் ஒட்டி, இதிலிருக்கும் 50 பேர் மட்டும் மீண்டும் ஹாலுக்கு உள்ளே வரவும், மற்றவர், அடுத்த அறையில் உங்களுக்கான போக்குவரத்து தொகையை பெற்றுக் கொண்டு கிளம்பவும் என்று ஸ்கர்ட் போட்ட ஒரு பெண்  சொல்லிவிட்டுச் சென்றது.

அனைவரும் அரக்கப்பரக்க அந்த போர்டை நோக்கி ஓடினார்கள். சிலர் துள்ளிக் குதித்தார்கள். நான் உட்கார்ந்தே இருந்தேன். மறுபடி காதுக்குப் பின்னால் வெப்பம். மூன்று நிமிடமாகியும் அந்த இடத்தில் கூட்டம் குறைந்தபாடில்லை. கண்ணாடி போட்ட ஒருவன் என்னிடம் வந்து கை கொடுத்து விட்டு உள்ள போங்கன்னு சொல்லிட்டு, காசு வாங்க அடுத்த அறைக்குச் சென்றான்.

உள்ளே 50 பேர் கொஞ்சம் சந்தோஷத்துடன் அமர்ந்திருந்தோம். 45, 50 மற்றும் 60 வயது கொண்ட மூவர் அணி ஒன்று கோட் சூட்டுடன் வந்து மேடையில் அமர்ந்தது. தங்கள் கம்பெனியைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார்கள்.  சரியாக 12 மணிக்கு அனைவரிடமும் 10 கேள்விகள் அடங்கிய வினாத்தாளும், பதில் எழுத பத்து வெள்ளைத் தாள்களும் தரப்பட்டு, தனித்தனியே முன்பு போல அமர வைக்கப்பட்டோம். ஒரு மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்று கட்டளை.

முழுக்க முழுக்க பெயிண்ட் சம்பந்தப்பட்ட கேள்விகள் தான், சிலது அவர்கள் கம்பெனி பற்றியும் இருந்தது. எல்லாமே எனக்குத் தெரிந்தது போலத்தான் இருந்தது. சிலர் அரை மணி நேரத்திலேயே எழுந்து  விட்டனர். பலர் யோசித்து யோசித்து எழுதினர். எனக்கு சரியாக 40 நிமிடங்கள் தேவைப் பட்டது. மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு கொடுத்தேன். இன்னும் ஒரு பத்து பேர் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

எல்லோருக்கும் அருமையான மதிய உணவு அளிக்கப்பட்டது. இவ்வளவு அதிக மெனுவுடனும், சுவையுடனும், நாகரீகத்துடனும், ஒருவித நளினத்துடனும், கண்டு கேட்டிராத பல பதார்த்தங்களுமாக பரிமாறப்பட்ட ஒரு விருந்தை, அதுவரையிலும் நான் சென்றிருந்த எந்தவொரு பெரிய பணக்கார வீட்டு கல்யாணத்திலும் கூட சாப்பிட்டதில்லை!.

சாப்பிடும் போது வீட்டிலிருக்கும் அப்பா, அம்மா, அக்கா நினைவெல்லாம் தானாகவே வந்து சென்றது. இன்னிக்கு என்ன சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்....? நாளைக்கு ஊருக்குச் சென்றவுடன், சொர்கலோகம் மாதிரியான இந்த இடம், சாப்பாடு பற்றியெல்லாம் அவர்களிடம் சொல்ல வேண்டும். ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் அவர்களுக்கெல்லாம்.

இரண்டு மணிக்கெல்லாம், மீண்டும் ஒரு லிஸ்ட் ஒட்டப்பட்டது. என்னையும் சேர்த்து பத்துப் பேர் அதில் இடம்பிடித்திருந்தனர். இவ்வளவு பெரிய சந்தோஷத்தை ஏற்கும் அளவிற்கான பக்குவம் அப்பொழுது என் மனதிற்கு வந்திருக்கவில்லை.  விம்மி வெடித்துவிடும் போலிருந்தது. அப்பா, அம்மாவை என் ஊரை, ஊரில் உள்ள அனைவரையும் பார்த்துக் கத்திச் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

பிடித்த மாதிரி செருப்பு, ஆல்ட்டர் பண்ணாத பேண்ட், சட்டை, கைக்கு சொந்தமாக வாட்ச், சொந்தமாக ஒரு செகண்ட் ஹேண்ட் சைக்கிள், லைப்ரரியில் நுழைந்தவுடன் கைக்குக் கிடைக்கும் பிடித்த பத்திரிகை, சஞ்சிகை.....  இப்படி நிறைய சொல்லலாம், இதுவரையிலும் என் வாழ்வில் அதிக சந்தோஷங்களை எப்பவாவது கொடுத்திருந்த சந்தர்ப்பங்கள்.

ஆனால் எனது கற்பனை அல்லது கனவில் கூட தோன்றியிராத ஒரு இடத்தில் கிடைக்கப் போகும் வேலையும், அதனால் எங்கள் தலைமுறையே அடையப்போகும் உச்சமும், எனக்கு புது அனுபவம் தான்.

ஒவ்வொருவராக உள்ளே அழைத்தனர். பத்திலிருந்து இருபது நிமிடங்களுக்குள் ஒவ்வொருவரும் வெளியேறினர். மற்றவர்களைப் போல நான் யாரிடமும் சென்று என்ன கேட்டார்கள் என்று கேட்கவில்லை. எட்டாவது ஆளாக அழைக்கப்பட்டு உள்ளே  நுழைந்தேன்.

ஐந்து பேர் கோட் சூட்டுடன் அமர்ந்திருந்தார்கள். ஒரே ஒருவர் மட்டும் நம்ம பாஷை பேசுபவர் போல தெரிந்தார். சர்டிஃபிகேட்ஸ் கேட்டார்கள் கொடுத்தேன். பார்த்தார்கள். குடும்பம், வருமானம் பற்றியெல்லாம் கேட்டார்கள். பெரிதாக ஈடுபாடு காட்டி கேள்வி கேட்பதாகப் படவில்லை. ஹைதராபாத் அல்லது பம்பாயில் வேலை கொடுத்தால் செல்வாயா? என்றார்கள். சரி என்றேன். வீட்டிற்கு கடிதம் வரும் என்றார்கள். வெளியேறினேன்.

போக்குவரத்து செலவுக்கான தொகையைப் பெற்றுக்கொண்டு கிளம்பினேன். மறுநாள் வீட்டில் அக்காவுடன் சேர்ந்து அனைத்து கதையையும் ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டே  மீன் குழம்பு சாப்பிட்டேன்.

நிச்சயம் கிடைச்சுடும்டா...ன்னு அக்கா நம்பிக்கையுடன் சொல்லியது. ஆனால் அப்பா மட்டும் அடுத்த இண்டர்வ்யூவுக்கு தயார் செய்து கொள். இந்த வேலை வரும்வரை காத்திருக்க வேண்டாம். நம் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்....  இது உனக்கு நல்ல அனுபவமாக அமையும். என்றது ஏனோ கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.

........................இருபது வருடங்களுக்கும் மேல் ஓடி விட்டது. இன்னும் அந்தக் கம்பெனி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்து சேர்ந்திருக்கவில்லை!

புது வீடு கட்டுவதற்காக அய்யர் கடையில் சென்ற வாரம் வாங்கிய சாமான்களின் பில்லை அப்பா எடுத்து வந்தார்கள்....

என்னப்பா? ஐயர் கடைல வாங்கல? வேற ஏதோ கடை பேர்ல பில்லுல போட்டிருக்கு?

இல்லப்பா... கடை அது தான்..... ஆனா ஓனர் மாறிட்டாரு!  ...ஏம்ப்பா அவங்களுக்கு என்ன ஆச்சு?

காலம் மாறிடிச்சிடா தம்பி. எவ்ளோ படிச்சிருந்தாலும், திறமை இருந்தாலும் உங்களை எல்லாம் வேலைக்கு எடுக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க.......


ஆனா இன்னிக்கு நீ நூறு பேருக்கு சம்பளம் கொடுக்கற முதலாளியா மாறிட்ட, ஆனா அவங்க எல்லாத்தையும் வித்து சுட்டுட்டு, கெட்டும் பட்டணம் போன்னு கிளம்பிட்டாங்க....


வாழ்க்கைச் சக்கரம்கறது தனி மனித வாழ்க்கைக்கு மட்டுமில்ல, ஒரு கூட்டம், ஒரு இனத்துக்கே கூட பொருந்தும்னு சொல்லிக்கிடே வெளிய போயிட்டார்.

எதுக்கோ விடை கிடைத்த மாதிரி இருந்தது......!!!




14 comments:

Arunvetrivel said...

மிகவும் அருமையான , தன்னம்பிக்கை வளர்க்ககூடிய கதை.

வாழ்த்துக்கள் நண்பரே.

Arunvetrivel said...

மிகவும் அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள் நண்பரே.

Arunvetrivel said...

கதை மிகவும் அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள் நண்பரே.

Arunvetrivel said...

கதை மிகவும் அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள் நண்பரே.

Unknown said...

அருமை வார்த்தைகள்

dheva said...

அட....இப்டி எல்லாம் அசத்துவீங்களா என்ன நீங்க....!

பாரட்டுக்கள் செளம்யன்..!

அரசியல் செய்திகளுக்கு இடை இடையே இது போன்ற படைப்புகளையும் பகிருங்கள்....! ரசித்து வாசித்தேன்...!

எல் கே said...

நச்சு தோய்த்து எழுதப்பட்டிருக்கு சௌம்யன்.

கொக்கரக்கோ..!!! said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அருன் வெற்றிவேல் ))

கொக்கரக்கோ..!!! said...

பாராட்டுகளுக்கு நன்றி தேவா ))

நன்றிகள் விஜயகுமார் ராம்தாஸ் ))

கொக்கரக்கோ..!!! said...

@எல்.கே,

நீங்களே அப்படி எண்ணினால் நான் என்னவென்று சொல்வது?

இப்பொழுது கொஞ்சம் மாற்றம் வந்திருக்கலாம். ஆனால் கால் நூற்றாண்டுக்கு முன்பு இதெல்லாம் சகஜம் தானே? அதைப் பற்றிய ஒரு பதிவு தான் இந்தக் கதை!

எல் கே said...

sowmyan, ovvoruvarukkum ovvoru karuthu. ennudaiya vimarsanam. antha kanathil enaku thondriya ennam. ithu intha idugai kurithe.

matrapadi ungalai kurithalla (just for your understanding)

Unknown said...

CTS

கொக்கரக்கோ..!!! said...

@முகிலன்,

புரியலியே?

ராஜா said...

வணக்கம் சௌமியன், இன்று முதல் முறையாத உங்கள் வலைதளம் வருகிறேன். இதுதான் நான் படிக்கும் உங்கள் முதல் பதிவு. அருமை. எனக்கு இது சிறுகதையாக தெரியவில்லை. நானும் அந்த கடையில் பெயிண்ட் வாங்கினேன், ரசீதில் ஏ.டி.எஸ் பெயர், நண்பர்களிடம் விசாரித்தேன் - கெட்டும் பட்டணம் போ என்ற செய்தி அறிந்தேன்.