Sunday, November 24, 2013

இரண்டாம் உலகமும், முன்னோ பின்னோ (எதோவொரு) நவீனத்துவமும்...!

நேத்திக்கு பையன் கூப்பிடும் போதே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவனில் கிடைத்த அனுபவம் அப்படி! இருந்தாலும் ஒரு மனிதன் தொடர்ந்து தவறு செய்வானா? அதுவும் வேறு யார் யாரோ போட்ட முதலீடு, பலரின் உழைப்பு இதெல்லாமே வீணாகும்படியாக மீண்டும் மீண்டும் தொடர்ந்து தவறு செய்வானா? என்றெல்லாம் மனதுக்குள் தர்க்க வாதம் செய்து கொண்டு....

அதுவும் ஒரு சில காமெடி மொக்கைப் படங்களால் தமிழ்ச் சினிமாவின் தரம் சீரழிந்து கொண்டிருக்கின்றது என்ற அறச்சீற்றம் கொப்பளிக்கப் பேசும் ஒரு இயக்குனர், மேலும் பத்திரிகைகளில் வந்தது போன்று ஆறு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு மனசாட்சியைத் தொட்டு தமிழ்ச் சினிமாவை அடுத்ததொரு உச்ச நிலைக்கு கொண்டு செல்லாமலா இவ்ளோ நம்பிக்கை கொப்பளிக்க கொப்பளிக்க பேசிக் கொண்டிருப்பார்......

என்ற நம்பிக்கையில் மனைவி மற்றும் மகனுடன், இரண்டாம ஆட்டத்திற்கு படத்தை முழுமையாக அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு ரிலாக்ஸாக கிளம்பிவிட்டேன்....!

ரொம்ப ரிலாக்ஸ்டா இருந்துட்டேன் போலருக்கு அதனால சீட்டில் போய் உட்காரும் போது ஐந்து நிமிட படம் ஓடி விட்டிருந்ததாக பக்கத்து சீட் காரர் சொன்னார்! மகன் முறைக்க, போகட்டும்டா இதெல்லாம் சூப்பர் படமா இருக்கும் ஒரு முறை பார்த்தா பத்தாது, இன்னும் ரெண்டு மூனு தடவை பார்க்க வேண்டியிருக்கும் அப்போ நியூஸ் ரீல் போடும் போதே வந்து உட்கார்ந்து விடுவோம் என்று சமாதானம் சொன்னேன்..!

ஒரு இருபது நிமிடம் கடந்திருக்கும். தியேட்டர்ல கிச்சு கிமார்ன்னு ஒரு சத்தத்தையும் காணோம். திரும்பி பார்த்தால் மனைவி கூட வாயை லேசாக திறந்தபடி திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். சுற்றும் முற்றும் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லோருமே அப்படித்தான் ரியாக்‌ஷன் காட்டிக் கொண்டிருந்தார்கள். முன் சீட்டில் ஒருவர் சீட்டு நுனியில் உட்கார்ந்து கொண்டு தலையை திரையில் நுழைத்து விடுவது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார். 

என்னை நானே நொந்து கொண்டே. ச்சே, இந்த மாதிரியான ஒரு பின் நவீனத்துவ இயக்குனர்களின் படங்களில் ஒரு வினாடி காட்சியைக் கூட நாம் தவற விடக் கூடாது. அந்தக் காட்சியில் கூட ஏதாவது ஒரு முக்கிய குறியீட்டை அவர் பதிவு செய்திருப்பார்.....,   அப்படித்தான் இந்தப் படத்திலும் முதல் நான்கைந்து நிமிடங்களுக்குள் இந்தக் கதைக் களம் பற்றிய முக்கிய குறியீட்டை இயக்குனர் பதிவு செய்திருக்கின்றார். அதனால் தான் எல்லோரும் இப்படி ஒரு ஆவலுடன் படத்தைப் பார்க்கின்றார்கள்....

நான் அந்தக் குறியீட்டை பார்க்கத் தவறி விட்டதால் இன்னும் படம் மற்றும் அதன் கதை பற்றி எனக்கொரு சரியான புரிதல் இல்லாமல் விட்டேர்த்தியாகவே இருக்கின்றது. படத்துடன் ஒன்றவே முடியவில்லை, அழுகை கூட வருகின்றது....!  என்று நினைத்துக் கொண்டேன்.

இப்புடிக்கா ஓடி இடைவெளியும் விட்டுவிட்டார்கள். மனதில் ஒரு நம்பிக்கை துளிர்க்க, முதல் ஐந்து நிமிட கதையை தெரிந்து கொண்டால், இதுவரை பார்த்த மற்ற காட்சிகளின் அர்த்தம் கட கடவென மனசிலாகிவிடும் என்ற ஆவலில் பக்கத்து சீட்காரரை திரும்பிப் பார்த்தேன். அவர் கண்களை மூடி தியானத்தில் இருப்பது போல காட்சி தந்தார்...!

அவரை லேசாக அசைத்து விவரத்தைச் சொன்னேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர், நீங்க சொல்ற அந்தக் குறியீட்டை இயக்குனர் க்ளைமாக்ஸில் தான் வைத்திருப்பார் போலருக்கு..... அதுக்காகத்தான் நானும் வெய்ட் பண்ணி பார்த்துட்டிருக்கேன்..., என்று சொன்ன போது, அவர் சீரியஸாத்தான் சொல்கிறாரா? இல்லன்னா என்னைக் கலாய்க்கிறாரா என்றே புரியாமல் போனது...!

முன் சீட்டு திரை துளைத்த தலையரை, அழைத்துக் கேட்க அவர் என்னைக் கோபமாக முறைத்து, போங்க சார் ஆரம்பத்துலேர்ந்து பார்க்குற எனக்கே ஒன்னும் புரியலையாம், அஞ்சு நிமிஷம் லேட்டா வந்துட்டு கதை கேக்குறாரு! என்று பக்கத்து சீட்டுக் காரரிடம் சொல்லிக் கொண்டே இளக்காரமாகத் திரும்பிக் கொண்டார்!

சரி மனைவியிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்வோம், அவர் தான் ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தாரே என்று நினைத்து அவரை திரும்பிப் பார்த்த போது ரொம்ப டீப்பாக தூங்கிக் கொண்டிருந்தார். விடாமல் எழுப்பிய போது, அரைத் தூக்கத்துலயே, ஏங்க, படம் முடிஞ்சோடுன எழுப்பி விடுங்க. நடுப்புற டிஸ்டர்ப் பண்ணிடாதீங்க. நீங்க ரொம்ப இண்ட்ரஸ்ட்டா பார்க்குறதுனால தான் நான் இருக்கேன், இல்லன்னா நாம வீட்டுக்கே போயி தூங்கிடலாம்ன்னு சொன்ன போது தான் இந்த மர மண்டைக்கு ஏதோ ஒன்று உரைத்தது போல இருந்தது!

யோவ்... உங்க படத்தையெல்லாம் பார்த்து புரிஞ்சிக்கவும், ரசிக்கவும் எனக்கு இப்ப இருக்குறதுக்கு மேல மூளையும், புத்திசாலித்தனமும், முன், பின் நவீனத்துவ சிந்தனை...  இந்த மாதிரி புண்ணாக்கு, எழவு கந்தாயமெல்லாம் இருந்தாத்தான்  முடியும் என்றால், அந்த மண்ணாங்கட்டி மூளை எனக்கு தேவையே இல்லைய்யா!. 

இப்ப என்னால பேச முடியுது, நடக்க முடியுது, பார்க்க முடியுது, கேட்க முடியுது, உணர முடியுது, நல்ல நகைச்சுவைன்னா சிரிக்க முடியுது, சோகம்ன்னா அழ முடியுது, அழகான காட்சின்னா ஆனந்தமா ரசிக்க முடியுது....!

இது எல்லாத்தையும் தமிழ்ல வர்ற எத்தனையோ படங்கள் எனக்கு தந்திருக்கு, அந்த மாதிரி படங்களை இனிமே நான் பார்த்துக்குறேன்.... !  போங்கடா நீங்களும் உங்க படைப்பும். தியேட்டர விட்டு வெளில வர்ற நூத்துக்கு தொண்ணூறு பேத்துக்கு இந்தப் படம் புடிக்கல, புரியல, போர் அடிச்சிருக்கு..... போடாங்.....க!  நீயெல்லாம் இனிமே இயக்குனர் படைப்பாளி, பெரிய புடுங்கின்னு சொல்லிக்கிட்டு திறியாத.....

அதோட குடும்பத்தோட தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வைத்து ரசித்து சிரித்து, அழ வைத்து, கோபப்பட வைத்து, வெளியில் அனுப்பும் போது திருப்தியா சிரிச்ச மூஞ்சோட பார்வையாளர்களை வெளில அனுப்பற படங்களையும் அதன் இயக்குனர்களையும் குறை சொல்ற வேலைய வச்சிக்கிட்டு திரிஞ்சீங்க.....!  மவனே கொண்டே புடுவேன் ஆமா!!!

பின்ன என்னாங்க? அம்பது கோடிங்கறான், அறுபது கோடிங்கறான்.... ரெண்டாம் நாளே தியேட்டர்ல பாதி தான் ரொம்புது. பணம் போட்டு வட்டிக்கட்டிப் படம் எடுத்தவன், வாங்கி ரிலீஸ் செஞ்சவன், விநியோகம் செய்யறவன், திரையிடுறவன், தியேட்டர்ல சைக்கிள் ஸ்டாண்டு மொதக் கொண்டு கேண்டீன் போட்ருக்குறவன் வரை, இது எல்லாத்துக்கும் மேல வந்து படம் பார்க்குறவன் எவனுக்குமே பிரயோஜனம் இல்லாம் இப்படி ஒரு படம் எடுத்து, இதே மாதிரியே தொடர்ந்து எடுக்குற இந்த மாதிரி ஆளுங்களுக்கு இனிமே தமிழ் படமெல்லாம் எடுக்கக் கூடாதுன்னு ரெட் கார்ட் போடனும்.....!  அப்பத்தான் தமிழ் சினிமாவ கரையேத்த முடியும். 

யோவ்... ஃபேண்டஸி படம்ன்னா எத வேணாலும் எடுக்கலாம்ன்னு நினைச்சிட்டிருக்கீங்களா? ஜுராஸிக் பார்க், அவதார் எல்லாம் போய் பாருங்கய்யா, மொழி தெரியாம பார்க்குறவனுக்கே எவ்ளோ புடிச்சிருக்குன்னு?!  உடனே அவங்க பட்ஜெட் ஜாஸ்தி, அதுனால கிராஃபிக்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும்ன்னு எல்லாம் கதை விடாதீங்க....

நம்ம மக்களுக்கு எல்லாம் புரியும். நம்ம லெவல் என்னான்னு நல்லாவே தெரியும். இந்த பட்ஜெட்டுக்கு இவ்ளோ தான் கிரஃபிக்ஸ்ல செய்ய முடியும்ன்னும் புரியும். அதை அப்படியே ஏத்துப்பாங்க. ஆனா படத்துல கதை, களம், அழகியல்ன்னு ஒரு புண்ணாக்கும் இல்லாம, பார்க்குறவனுக்கு புரியலன்னா தான் நம்ம புத்திசாலின்னு நினைப்பாங்கன்னு இங்க சில பேரு கட்டமைச்சு வச்சிருக்குற மாதிரி எடுத்தீங்கன்னா, உங்கள மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ரெட் கார்டு போட்டேத்தான்யா ஆகனும்!!

பாஸ்...   யாராச்சும் இந்த மாதிரி ஆளுங்க கிட்டேயிருந்தெல்லாம் தமிழ் சினிமாவ காப்பாத்துங்க பாஸ்....!


1 comment:

Anonymous said...

ஆமாங்க படம் பார்த்து நொந்ததுதான் மிச்சம். சில அறிவு ஜீவிகளுக்கு மட்டும் எடுத்திருபார்கள் போல என் சிற்றறிவிற்கு எதுவும் எட்டவில்லை