Saturday, November 30, 2013

தமிழகம் அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கிறது...! இப்படிக்கு ஜெ.!

கிராமத்து வயல்வெளிகளில் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும் போர் செட்டுகள் மின்சாரம் இல்லாததால் அமைதியாகக் கிடக்கின்றன..!

லட்சக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் எல்லாம் மின்சாரம் இன்றி பல நாட்கள் மூடப்பட்டிருப்பதால் அந்த சத்தங்கள் இன்றி தமிழகம் அமைதியாகவே இருக்கின்றது!



மின்சாரம் இல்லாமையால் ஒவ்வொரு வீட்டிலும் கேட்கும் டீவி சீரியல் சத்தங்கள் கேட்காமல் ஊரே அமைதியாக இருக்கின்றது..!

காலையில் மிக்ஸி, கிரண்டர் ஓடாததால் அந்த கரகர கூச்சலும் இன்றி அமைதியாக இருக்கின்றது தமிழகம்!

கால்நடை மருத்துவர்களால் இதுவரையிலும் சரியான மருந்து கொடுக்க முடியாத மர்ம நோயினால் ஆங்காங்கே ஆடுகளும், மாடுகளும் செத்து விழுவதால் அவற்றின் குரல்கள் கூட கேட்காமல் அமைதியாகத்தான் இருக்கிறது தமிழகம்!

மணல், சிமெண்ட், கம்பி களின் அதீத விலையேற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கட்டுமானத்தொழிலில் ஆங்காங்கே கான்க்ரீட் போடும் சத்தம் கூட கேட்காமல் தமிழகம் அமைதிப் பூங்காவாகத்தான் திகழ்ந்து கொண்டிருக்கின்றது!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அடிக்கடி மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் எதிராக கேட்டுக் கொண்டிருக்கும் போராட்டக் குரல்கள் கூட அறவே ஓய்ந்து போய் தமிழகம் அமைதியாகத்தான் இருக்கின்றது!

தங்கள் சொந்தத் துறை சார்ந்த பிரச்சினைகளையும் தாண்டி தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தாங்கள் தான் அதாரிடி என்று மாதத்திற்கு ஒரு போராட்டம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் எல்லாம், சிவாஜி சிலையை அகற்றும் முடிவுக்கு கூட வாய் திறக்காமல் மௌன விரதம் இருந்து தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் வராமல் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள்..!

கம்யூனிஸ்டுகளின் உண்டியல் சத்தம் கூட வர வர த்மிழகத்தில் கேட்கவே இல்லாமல் அமைதி காத்துக்கொண்டிருக்கின்றது!!

வறுமையின் காரணமாக அடிக்கடி சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் கூட, செருப்பு போட்டு நடந்தால் சத்தம் கேட்குமே என்று அதைக் கூட கழட்டி வைத்து விட்டுத்தான் நடந்து சென்று தமிழகத்தின் அமைதியை காத்துக் கொண்டிருக்கின்றார்கள்...!

#####ஆகவே மக்களே! முதல்வர் அம்மாவை யாரும் குறை சொல்ல வேண்டாம், அவர்கள் சொன்னது உண்மை தான்...! “தமிழகம் அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கின்றது!!!”


மக்கள் அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்..... இன்னும் இரண்டே வருடங்கள் மட்டும் தானே என்று!!!!!



No comments: