Friday, November 22, 2013

ஏ டி எம் கொலை வெறி தாக்குதலும்... மக்களின் எதிர்பார்ப்பும்..!

சமீபத்தில் பெங்களூரில் ஒரு பெண்ணின் மீது நடந்த ஏ டி எம் கொலை முயற்சி கொடூரத் தாக்குதல், அதைப் பற்றி படித்தவர்கள் அனைவரையும் ஒரு வித கலவரத்தில் தான் ஆழ்த்தியிருக்கின்றது. குறிப்பாக நம் தமிழகத்தைப் பொறுத்தவரை 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் நடுத்தர வர்க்க பட்டியலின் கீழ் வருபவர்கள் தான். அவர்கள் அனைவருமே மாதத்தில் குறைந்தபட்சம் ஒன்றிலிருந்து அதிக பட்சமாக பத்து தடவை வரைக்கும் சிறியதோ பெரியதோ அளவிலான தொகையை எடுப்பதற்கு ஏ டி எம் பூத்துகளுக்கு செல்பவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

அப்படியிருக்கும் போது பொது மக்கள் அனைவருமே மற்ற நித்தியப்படி கொலை, கொள்ளை, விபத்துச் சம்பவங்களைப் போன்று இல்லாமல், இது தங்களுக்கான பிரச்சினை, தாங்களும் இது மாதிரி எந்த நேரத்திலும் தாக்கப்படலாம்  என்ற அளவிலேயே இந்த சம்பவத்தை கவனித்து கவலைப் படுகின்றார்கள்.

இது வங்கிகளுக்கான தனிப்பட்ட பிரச்சினை என்று மட்டும் பார்த்து அரசுகள் ஒதுங்கிக் கொள்ளாமல், ரிசர்வ் வங்கி மத்திய அரசின் சார்பாக இதில் உடனடியாக தலையிட்டு வங்கிகளின் ஏடிஎம் பூத்துகளில் சென்று பணம் எடுப்பவர்களுக்கான உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் பார்த்த வகையில் இப்பொழுது இருக்கும் காவலாளிகள் 50 வயதிற்கு மேற்பட்ட, சுறுசுறுப்புடனும், சமயோசிதத்துடனும் செயல்பட முடியாதவர்கள் தான் பெரும்பாலான ஏடிஎம் பூத்துகளில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை மிகக் குறைந்த சம்பளத்திற்கு அழைத்து அமர்த்திவிடுகின்றனர். உள்ளேயே ஏசி இருப்பதால், சாப்பிடுவது உட்பட தூங்குவது வரை அனைத்தையும் அவர்கள் ஏடிஎம் பூத்துகளுக்கு உள்ளேயே செய்கின்றனர். போர் அடித்தால் அடுத்தடுத்த கடைகளுக்குச் சென்று உட்கார்ந்து கதையடிக்கின்றார்கள். இவற்றையெல்லாம் நான் அனுபவபூர்வமாக பார்த்து எழுதுகின்றேன். 

ஆகையால் இந்த மாதிரி ஏடிஎம் செண்டர்களுக்கு இந்திய அளவிலோ அல்லது உலத் தரத்திலோ தரச்சான்றிதழும் அனுபவமும் கொண்ட செக்யூரிடி நிறுவனங்களுக்கு மட்டுமே காவலர்களை நியமிக்க அனுமதியளிக்கும் உத்தரவை உடனடியாக ரிசர்வ் வங்கி அமல்படுத்த வேண்டும். 

வங்கிகள் கம்பெனிகளுக்கு லோன் வழங்கும் போது அவர்களே அந்த லோன் அமௌண்ட்டில் கம்பெனிக்கான பொதுக்காப்பீடும் எடுத்து அதை வருடாவருடம் கம்பெனி செலவிலேயே புதுப்பித்துக் கொள்வதையும் போல, இந்த செக்யூரிடி நிறுவனங்களுக்கும் எடுத்துவிட வேண்டும். இந்த மாதிரியான எந்த அசம்பாவிதம் என்றாலும் அந்த காப்பீட்டுப் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதோடு, அந்த செக்யூரிடி நிறுவனமும் வங்கியும் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தனியாகவும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்படி ஒரு சட்டம் வந்தால் எல்லாரும் உஷாராக இருப்பார்கள். நிச்சயமாக ஒரு முழு 24 மணி நேரத்திற்கு மூன்று ஷிப்ட்டுகளுக்கும் தனித்தனியாக காவலர்கள் வர வேண்டும். அந்த காவலர்களுக்கு வங்கி ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கி அவர்கள் எதிரிகளை தடுத்துத் தாக்கும் உடல் தகுதியும் அதற்குத் தேவையான பயிற்சிகளும் ஒரு முறையான பயிற்சி நிலையத்தில் பெற்றவராக இருக்கும் தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும். 

ஒவ்வொரு வங்கியும் தனித்தனியாக தங்களுக்கான செக்யூரிடிகளை நியமித்துக் கொள்ளாமல், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் அல்லது இதற்கென தனியான ஒரு துறையின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அனைத்து வங்கிகளின் ஏடிஎம் களுக்கும் ஒரே நிறுவனமே இந்த சேவையை வழங்குவதற்கு வழி செய்ய வேண்டும். 

இது ஒரு முக்கிய பிரச்சினை...  ஆகையால் இதற்கென ஒரு தர நிர்ணயம் செய்து ஏடிஎம் களை அரசு அல்லது ரிசர்வ் வங்கி பாதுகாத்து மக்களுக்கான அச்ச உணர்வை அகற்றும் தன் கடமையை சிறப்பாகச் செய்ய வேண்டும். அதையும் உடனடியாகச் செய்ய வேண்டும்.

நாம் பார்த்து உணர்ந்த வரையில் மேற் கூறிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம் என்றாலும், இதற்கு மேலும் எத்தனையோ டெக்னிகல் விடயங்களை வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் செக்யூரிடி நிறுவனங்களோடு இணைந்து ஒரு நிபுணர் குழு அமைத்து ஏடிஎம் களில் ஒரு உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதி செய்து மக்களை பாதுகாக்க வேண்டும்....!!

இதுக்கெல்லாம் எதச்ச்சும் செய்யனும் பாஸ்...!



3 comments:

saidaiazeez.blogspot.in said...

நம் நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்பதே புரியவில்லை.
மாதக்கடைசியில் ஒரு பெண் எவ்வளவு பணம் எடுப்பாங்க? அவரை பின் தொடர்ந்து, கொன்று...
இவர்கள் அந்த பணத்தை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் வாழ்ந்துவிடுவார்கள்?

இராய செல்லப்பா said...

"அந்த காவலர்களுக்கு வங்கி ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கி .." என்கிறீர்களே, சத்துணவு ஊழியர்களுக்கு அரசாங்க கிளார்க்குகளுக்கு வழங்கப்படும் சம்பளம் கொடுக்க நீங்கள் தயாரா?

வேகநரி said...

பயனுள்ள பணம் எடுப்பவங்களுக்கான பாதுகாப்பு ஆலோசனை.