Tuesday, August 18, 2015

என்.... தலைவன்.!!!!!

ஐயா, சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன் இருக்காருங்கள்லய்யா..... இப்படித்தான் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் சகோதரர் தங்கம் தென்னரசு ஆரம்பித்தார்....
சரேலென தலையை நிமிர்த்தி மலர்ச்சியான புன்னகையுடன்... கூடிய ஒரு எள்ளல், ஒரு நக்கல், ஒருவித நகைச்சுவையுடன் கூடிய கரகர குரலில்....
“அவர் எங்கய்யா இருக்காரு?... இருந்தாரு...!! இப்ப நான் தான் இருக்கேன்...!”

என்று அந்த மனிதர்... இல்லையில்ல, மாமனிதர்... ம்ஹூம், அதுவும் இல்லை.., மகான்... ம்ம்ம்... போதவில்லை, அந்த சித்தர், மகரிஷி..... ம்ஹூம் எதுவுமே திருப்திப்படவில்லை.....
...நம் கலைஞர்...! அப்பாடி அவரை இப்படி விளிக்கும் பொழுது தான் தொண்டை நனைய தண்ணீர் குடித்த சுகம் கிட்டுகிறது....!!
நம் கலைஞர் சொல்லவும் அங்கே அந்த சிறிய அறையில் அவரைத் தவிர்த்து நின்றிருந்த ஐந்தாறு நபர்களுக்குமே, ஒரு கணம் அவரவரது மூளை உறைந்து போய்த்தான் மீண்டும் இயங்க ஆரம்பித்தது...!!
92 வயது என்கிறார்கள், நடக்க முடியவில்லை என்கிறார்கள், இன்னும் என்னென்னவோ சொல்கின்றார்கள்.... ஆனால் ஒரு சின்ன விஷயத்தைக் கூட, அதை வெளிப்படுத்துவதில் உள்ள இலக்கண, இலக்கிய பிழைகளைக் கூட உன்னிப்பாக கவனித்து அந்த நொடியே, அதை சின்ன நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டி, அதைத் திருத்தி, அத்தோடு நான் தான் இருக்கேன் என்ற வாக்கியத்தைச் செறுகியதன் மூலம், இன்னும் பல்வேறு கோணங்களிலான தனது கருத்துக்களை அங்கிருப்பவர்களுக்கு உணர்த்திய அந்தப் பாங்கு....
...நிச்சயமாகச் சொல்கிறேன்... வேறு எவருக்கும் வாய்த்திருக்காத ஒரு அற்புதமான படைப்புத்தான் அவர் என்பதை எனக்கு உணர்த்திய தருணம் அது..!
நானும், பெருமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் அவர்களும், சரபோஜியும், கத்தார் திமுக நடத்திய முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு திரும்பிய வருங்கால பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வரவேற்று விட்டு, தலைவரை வேறொரு முக்கிய காரணத்திற்காக சந்திக்க இருந்தபோது, அமைச்சர் அவர்கள், தலைவருக்கு கேடயத்தையும், நிதியையும் நான் தர வேண்டும், நானே அழைத்துச் செல்கிறேன் வாருங்கள் என்று அழைக்க....
பழம் நழுவி பாலில் விழுந்தால் வேண்டாம் என்றா சொல்வோம்... அடுத்த பத்தாவது நிமிடத்தில் கோபாலபுரம் கோவில் வாசலில் பிரசன்னமானோம்..!
என்னுடைய தோழர்கள் பலர் பேச கேட்டிருக்கிறேன்..! இந்தக் கோவிலுக்குப் போனால் நல்ல வைப்ரேஷன் கிடைக்கும், அந்தக் கோவிலுக்குப் போனால் உச்சி மண்டையை பிய்த்துக்கொண்டு செல்வது போல தியானத்தில் மிதக்கலாம்... என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் நான் அங்கே போன போதெல்லாம்,... அது வேண்டாம் விடுங்கள்..!
அந்த நண்பர்கள் சொன்ன அத்தனை விதமான உணர்ச்சிகளுமே, நான் கோபாலபுர எங்கள் கோவில் வாசலை மிதித்த மாத்திரத்திலேயே ஏற்பட்டுவிட்டது..!! இதற்கு முன் இதே மாதிரி நிலை எனக்கு நான்கு முறை அதே இடத்தில் ஏற்பட்டதுண்டு...!
தியான நிலையில் ஒரு வித அரை மயக்கம் கலந்த, உடலெல்லாம் அந்த வைப்ரேஷன் எனப்படும் அத்தனை நாடி நரம்புகளும் மிஸ்ரசாப்பு தாளத்தில் அற்புதமான கோர்வை ஒன்றை வாசித்துக்கொண்டிருக்க....
வாங்க சௌம்யன் என்று சமச்சீர் நாயகன் அழைக்கும் ஒலியும்.. சென்று அவர் அருகில் அமர, அவர் ஏதேதோ கேட்க, நான் ஏதேதோ உளர, அந்தப்பக்கத்தில் அண்ணன் ஆ.ராசா, ஐயா சுப.வீ, இந்தப்பக்கம் அமைச்சர் பொன்முடி... இன்னும் பிற முக்கிய ஆளுமைகள் எல்லாம் அமர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்க...
...இதையெல்லாம் கடந்த ஏதோவொரு பேரின்பத்திற்காக மனது இன்னும், இன்னும் உள்ளே நுழைந்து, அந்த மகா சக்தியை ஒருநிலைப்படுத்த முயன்று கொண்டிருக்கும் போதே, அந்த மகா சக்தியின் உற்சவ மூர்த்தி மேலிருந்து கீழே இறங்கி வர... அணிச்சையாக எழுந்து வணக்கம் தெரிவிக்க, அதுவும் என்னைப் பார்த்து தலையசைத்தவாறே, சகோதரர் தங்கம் தென்னரசுவிடம் ஏதோ சொல்ல, அவர் மேலே சென்று விட்டு, ஒரு நிமிடம் கழித்து எங்களை மேலே அழைக்கின்றார்...!
அந்தப் படிக்கட்டுகளில் ஏறுகின்றேன்... ஒரு பழங்காலத்து சாதாரண வீட்டுப் படிக்கட்டுகள் தான் அவை. இந்திய அளவில்... ஏன்? உலக அளவில் பிரசித்தபெற்ற எத்தனையோ மேதைகள், தலைவர்கள் எல்லாம் கடந்து வந்த படிக்கட்டுகள் தான் அவை... அவற்றில் ஏறி...
..மகா சக்தியின் தரிசனம் கிட்டுமா என்று அந்த அறையை பார்த்தால், அங்கே அது இல்லை..!! அடுத்துள்ள படுக்கையறையில் இருப்பதாக வரச்சொன்னார்கள்...!
உள்ளே நுழைந்தால், அதுவும் ஒரு சின்ன அறை தான், அதில் சின்னதாக ஒரு கட்டில் அதில் மெத்தை...! அதன் அருகே ஒரு நாற்காலி, அதில் தான் அந்த சக்தி.... ஆம் இது வரை என் மனதில் நான் இறுக்கிப் பிடிக்க தியானித்து வந்த அந்த மகாசக்த்தி அமர்ந்திருந்தது...!!
முக்தி பெற்றவனின் குண்டலினி உச்சந்தலையை பிளந்து வெளியேறும் என்று சொல்வார்களே... அதெல்லாம் அந்தக் கணத்தில் அனுபவித்தேன், தலைக்கனம் குறைந்ததால், தலை குனிந்து உடல் வளைந்து அவ்விரு பாதங்களையும் நிதானமாக என் இரு கரங்களால் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள...
...ஒரு வித புத்துணர்ச்சி, புது வேகம், புல்லரிப்பு, உற்சாகம், மின்சாரம் எல்லாம் என் உடலில் பரவி, மூளை முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது...!!

அதன் பிறகு கத்தார் திமுகவினர் கொடுத்த கேடயத்தையும், நிதியையும் மகாசக்தியிடம் அமைச்சர் அவர்கள் கொடுக்க, அதை உன்னிப்பாக படித்துப் பார்த்து, அது பற்றிய விவரங்களை கேட்க, அமைச்சர் அவர்கள், தெளிவாக அது பற்றி விளக்கினார்... பிறகு அந்த கேடயத்தை கேமெரா பக்கம் திருப்பி வைக்கச் சொல்லி, எங்களையும் நிறுத்தி புகைப்படம் எடுக்க கட்டளையிட்டார்...!


பிறகு நாங்கள் மூவரும் தேர்தல் நிதி கொடுத்து,.. வந்த விவரங்களைச் சொல்ல... அது பற்றி அவரும் சிரித்தவாறே சில கருத்துக்களைச் சொல்ல, அந்த அறையே கலகலப்பானது. அந்த நேரத்தில் தான் உறவுமுறை பற்றிய பேச்சு எழ... சிதம்பரம் ஜெயராமன் பற்றிய செய்தி வர.... அதை சற்று விளக்கமாக சொல்லுமாறு தலைவர் பணிக்க... அப்பொழுது தான் இந்தப் பதிவின் முதல் பாராவில் சொன்ன அந்த சம்பாஷணை நடந்து... அந்த இடத்தை ஒரு வித சந்தோஷ நிலைக்கு உயர்த்தியது...!!

தலைவர் கலைஞரை பார்த்து விட்டு வந்த பிறகு, கடந்த மூன்று நாட்களாக, அவரை கட்டுமரம் என்றும், இன்னும் பிறவாக மிகக் கேவலமாக விமர்சித்து பதிவிடுபவர்களையும், பெரும் ஊழல் செய்துவிட்டார் என்று புலம்புபவர்களையும் பார்த்தால் முன்பு மாதிரியெல்லாம் கோபமே வருவதில்லை...!!

காரணம், ஒருவரைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு தகவலை ஒருவன் பேசினால், ஒன்று அவனுக்கு அவரைப் பற்றிய முழு புரிதல் இல்லாமல் கேட்பார் பேச்சைக் கேட்டு விமர்சிக்கும் முட்டாளாக இருக்க வேண்டும், அல்லது அப்படிப் புரிந்திருந்தும் விமர்சித்தால் அந்த நபர் மீது ஏதோ ஒரு காரணத்தால், பொறாமை, பொச்செரிப்பு, காழ்ப்புணர்ச்சி... அல்லது ஏதோ ஒரு கந்தாயம் இருந்து தொலைத்திருக்க வேண்டும்.
பொதுவான கூற்று அல்லது நியதிப் படி முட்டாள்களும், பொறாமைக்காரர்களும் உருப்பட்டதே இல்லை என்பதால், வசவாளர்களைப் பார்த்து நாம் ஏன் கோபப்பட வேண்டும்?

2 comments:

Anonymous said...

Very good post...

Peppin said...

Good post! Enjoyed reading it!