Tuesday, August 25, 2015

பாமகவின் நிலைப்பாடு நல்ல பலனைத் தரும்..!!!


ஜனநாயகத்தின் முக்கியமான இரண்டு தூண்களான எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் முக்கியமான பணி என்ன?
ஒரு ஆளும்கட்சி செய்கின்ற தவறுகளை, மக்கள் விரோத செயல்களை, ஊழல்களை தோண்டித் துறுவி எடுத்து அதை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு சென்று பரப்புரை செய்து (ஏனெனில் ஆட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இறுதித் தீர்ப்பை அடுத்த தேர்தலில் எழுதப் போகின்றவர்கள் மக்கள் தானே?).....
அதற்கு மேலும் ஆளுங்கட்சி தன்னை திருத்திக்கொள்ளாத நிலையில், அடுத்த தேர்தல் வரை மக்கள் தீர்ப்புக்காக காத்திருந்தால் நாடு தாங்காது என்ற நிலை வந்தால், அக் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் ஜனநாயகத்தின் மிக முக்கிய இன்னொரு தூணாக விளங்கும் நிதி மன்றத்துக்கும் கொண்டு சென்று...
...ஆளுங்கட்சியை தண்டிக்கச் செய்வது தானே எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் முக்கிய பணி?!
அப்படியிருக்க, அதிமுகவின் கடந்த நான்காண்டுகால கேவலமான ஆட்சியின் ஊழல்களையும், அதன் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊழல் செய்து நீதிமன்றத்தால் தண்டனை பெற்றிருக்கும் நிலையில்..., வேறொரு முதல்வர் டம்மியாக நியமிக்கப்பட்டு, ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகவும் முடங்கிப் போய், தமிழகம் கோமா நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில்... உயர் நீதிமன்றத்தில் விடுதலை பெற்று, வழக்கு உச்சநீதி மன்றம் சென்றுள்ள நிலையில்..  மீண்டும் இடைத்தேர்தல்..  மீண்டும் முதல்வர்...  என்றிருக்கும் நிலையில்...  அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் கோமாளிக் காட்சிகள் அரசு இயந்திரத்தை முடக்கிப் போட்டிருக்கும் நிலையில்...
இவற்றை எல்லாம் மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும், மத்திய அரசிடமும் (கவர்னர் வாயிலாக) கொண்டு சென்று சேர்க்கின்ற பணியினை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் செவ்வனே செய்து வருவதில் என்ன தவறு இருக்கின்றது???
எதிர்க்கட்சிகள் தானே மக்களின் உண்மையான பிரதிநிதிகள்?! எதிர்க்கட்சிகள் தானே மக்களின் மனசாட்சி?!
ஆனால் நாளை நாங்கள் தனித்து நின்று முதல்வராகப் போகிறோம் என்று.... மார்தட்டிக் கொண்டிருக்கும் பாமகவின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி... ஆளுங்கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு நடப்பு முதல்வருக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டிருக்கும் தமிழகத்தின் பலம் மிக்க முக்கிய எதிர்க்கட்சியின் பொருளாளருக்கு எதிராக.....
அதாவது.... நன்றாக கவனியுங்கள் மக்களே....
ஆளுங்கட்சிக்கு.... அதாவது அதிமுகவுக்கு எதிராக போராடும், மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு முக்கிய எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக.....
பொங்கித் தீர்த்து கடிதங்கள் எழுதுவதும், மேடை தோறும் சவால் விடுவதும்,.... அவற்றை எல்லாம் ஆளுங்கட்சியின் ஆதரவு ஊடகங்கள், பரபரப்பாக முன்னெடுப்பதும் எதைக் காட்டுகிறது???

ரொம்ப சிம்ப்பிள்...!

நடப்பு ஆளும் கட்சி... அதாவது ஊழல் மலிந்த அதிமுகவை ... எதிர்க்கட்சிகளின் கணைகளுக்கு எதிராக பாய்ந்து சென்று காப்பாற்றும் முயற்சியாகவே... வெகுவான அரசியல் ஞானம் இல்லாதவர்கள் கூட ஊகித்துவிட முடியும்...!!!
ஆகவே ஊழல் மலிந்து சீண்டுவார் இன்றி தனித்திருக்கும் அதிமுகவின் வலையில் விரும்பிப் போய் பாமக தன்னை அடைக்கலப்படுத்திக் கொண்டுவிட்டதைத்தான் இது அப்பட்டமாக உணர்த்துகிறது.
தமிழகத்தை சீரழித்ததிலேயே திமுகவுக்கு தான் முதலிடம் என்று பிதற்றியிருக்கும் அன்புமணி.... கடந்த திமுக ஆட்சிக்காலம் முழுவதும் திமுகவோடு இணைந்து இருந்த பொழுதே இக் குற்றச்சாட்டினை திமுகவின் மீது சுமத்தி அதன் பிறகு வந்த 2011 தேர்தலில் தனித்து களம் கண்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும்...!!
ஆனால் ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த ஒரு கட்சியோடு 2011 தேர்தலில் பாமக மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது என்றால் என்ன அர்த்தம்? அந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சி சிறப்பாக இருந்ததாக பாமக ஏற்றுக்கொண்டதாகத்தானே அர்த்தம்?!
சரி இதை எல்லாம் விட்டுவிடுவோம்....
இன்றைக்கு நடப்பது அதிமுக ஆட்சி. நான்காண்டுகளாக இந்த ஆட்சியால் தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள்ளாக தேர்தல் வரவிருக்கின்றது. இந் நிலையில், அடுத்து ஆட்சி அமைக்க விரும்பும் எந்தவொரு எதிர்க்கட்சியும் நடப்பு ஆளுங்கட்சிக்கு எதிரான புகார்களோடு தானே மக்களை சந்திக்கும்?!
அதை விடுத்து ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை நீர்த்துப் போக வைக்கும் பாமக அன்புமணியின் செயலுக்கு என்ன அர்த்தம்???
இதில் தான் ஜெயலலிதாவின் தந்திரம் இருக்கின்றது. கடந்த தேர்தல்களில் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளையோ, ஈழப்பிரச்சினையையோ, மீனவர் பிரச்சினையையோ வைத்து குற்றம் சாட்டி வாக்குகளை பெரும் தகுதி தனக்கில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த ஜெயலலிதா, பல்வேறு லெட்டர் பேடுகளை அடித்து சீமான், நெடுமாறன், தமிழருவி மணியன், சரத்குமார், தனியரசு போன்றோருக்கு கொடுத்து.... அவர்களை பொதுவானவர்களாக மக்களிடம் தனது ஆதரவு ஊடகங்கள் மூலம் நம்ப வைத்து... அதன்பிறகு அவர்களது பிரச்சாரங்களுக்கு தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்து தந்து, அவர்களை விட்டு திமுகவை சரமாறியாக வசைபாட வைத்து, திமுகவுக்கு எதிரான வாக்கு சதவிகிதத்தை உயர்த்தி அதை அவர்களை விட்டே கடைசியாக அதிமுக பக்கம் மடை மாற்ற வைத்தார்...!
அந்த லெட்டர் பேடு கட்சிகளின் சாயம் மக்களிடம் கரைந்து போன நிலையில், அதிமுகவும் மிக மோசமான ஊழல் குற்றச்சாட்டுகளில் சிகியிருக்கின்ற நிலையில்...., அதை எல்லாம் மறந்து விட்டு மக்கள் மீண்டும் திமுகவையே விமர்சிக்க வைக்க வேண்டும் என்ற பணி ஆணையைப் பெற்றே பாமக.... அதிமுக மீது  குற்றம்சாட்டுபவர்களுக்கு.... எதிராக புழுதிவாரி இறைக்கும் பணியினை கச்சிதமாக செய்து வருவதாக எண்ணத் தோன்றுகிறது!!!
திமுகவுக்கு ஆதரவாக விழும் வன்னிய மக்களின் வாக்குகளை... முதல்வர் வேட்பாளர் என்ற அஸ்திரத்தை வீசி... அவர்களை குழப்பி... அந்த வாக்கு வங்கியில் சிறு சேதாரத்தை ஏற்படுத்தும் முயற்சியையே பாமக தற்பொழுது கையில் எடுத்திருக்கின்றது.
தெளிவான அரசியல் பாதையை விடுத்து, சீமான், சரத்குமார், தமிழருவி மணியன் போன்ற அரசியல் புரோக்கரேஜ் வேலையை தற்பொழுது பாமக கையில் எடுத்திருக்கின்றது.
சீமான் வகையறாக்களின் கதை வேறு.... அவர்களை நம்பி பெரியதாக தொண்டர்கள் யாரும் இல்லை. ஆனால் பாமக அப்படியில்லை. ராமதாஸ் ஜாதி வெறியை தூண்டி வன்னிய இன மக்களின் ஒரு பகுதியினரை இக் கட்சி சார்பாக முழு நேரம் களமிறக்கிவிட்டிருக்கின்றார். தனித்து நின்று தோற்றால் அவர்கள் அத்தனை பேரின் குடும்பமும் தத்தளிக்கும்...!!
பாமக தனித்து நின்ற போதெல்லாம் படுதோல்வியைச் சந்தித்திருப்பது தான் வரலாறு.
தானோ தன் குடும்பத்தினரோ எந்த பதவிக்கும் வரமாட்டோம்.. அப்படி வந்தால் நடுரோட்டில் வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று கொக்கரித்த ராமதாஸ்....

...நியாயமாக முதன் முதலாக பாமகவுக்கு ஒரு மத்திய கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் போது.... அதுவும் நோகாமல் கொல்லைப்புரம் வழியாக எம்பி ஆகி கிடைக்கும் வாய்ப்பு வரும் போது....
அந்த வாய்ப்பை... தன்னை புகழேணியின் உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்துவதற்காக... வன்னிய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக, குண்டடி பட்டு உயிரிழந்த அந்த 21 பேர் குடும்பத்தைச் சேர்ந்த நபர் யாராவது ஒருவருக்கு தந்திருந்தால்.....
....தமிழ்நாடே அவருக்கு தலை வணங்கியிருக்கும். ஆனால் அதை தன் மகனுக்கே தாரை வார்த்து விட்டு, இன்றைக்கு முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து விட்டு, ஊழல் மலிந்த அதிமுக ஆட்சிக்கு பாதுகாவலர்களாக அப்பாவி பாமகவினரை நிறுத்தியிருப்பதற்கு.... அவர்களிடமே அவர் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்...!

பாமகவின் தற்போதைய நிலைப்பாடு, நிச்சயம் நல்ல பலனைத் தரும்....   ராமதாஸ் குடும்பத்தினருக்கு மட்டும்..!!


1 comment:

Anonymous said...

நிச்சயம்!
தமிழ் நாட்டில் அதிகமான சாதி கட்சிகள், சாதி சங்கங்கள் வளர்ந்ததுக்கும், வந்ததுக்கும் ராமதாஸ் தான் காரணம். தன்னுடைய குறுக்குப்புத்தியால் பல காலம் ஓட்டியவர்.
நிச்சயம் பலனை அனுவிப்பார்.