Wednesday, August 19, 2015

நல்ல தம்பி..!

என் தம்பி R Muthu Kumar, இவன் என் முகநூல் நட்பு வட்டத்தில் தற்பொழுது இல்லை என்றாலும், என் தலைவர் கலைஞர் கரங்களால் சிறந்த எழுத்தாளர் என்று குறிப்பிடப்பட்டு அவன் எழுதிய கட்டுரையை இன்றைய அவரது வாதத்திற்கு ஆதரவான உதாரணமாக திமுகவின் கெஸட், முரசொலியில் பதிவு செய்திருப்பதைப் படித்த பொழுது, நிசமாலுமே என் கண்கள் குளமாகிவிட்டன.!
அவன் எம்.சி.ஏ படித்த காலங்களில் மயிலாடுதுறை நகர வீதிகளில் நானும் அவனும் நடந்தே அரசியல் பேசிக்கொண்டு சென்றதும், ஒரு தீபாவளியின் முன்மாலைப் பொழுதில் நடந்து நடந்து கால் வலிக்க மகாதானத்தெருவில் ஒரு வீட்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்து கொஞ்சம் கூட அலுக்காமல் மணிக்கணக்காய் அரசியல் பேசியதும், என் நினைவுகளில் நிழலாடுகிறது.
நானும், அண்ணன் அபியப்பாவும் அதி தீவிர கலைஞர் விசுவாசிகள். எது எப்படியிருந்தாலும் கலைஞரை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் அதி தீவிரமாக எழுதுவோம். அதற்குக் காரணம் எங்கள் சித்தப்பா தான். அதாவது முத்துவின் தந்தை!
 எங்கள் சித்தப்பாதான் சிறுவயதுகளில் எனக்கும் என் அண்ணனுக்கும் சினிமா, அரசியல் என்று வெளி உலகத்தை காட்டியது. நான் சிறு பிள்ளையாய் இருந்த பொழுது ஒரு நாள், மதியவேளையில் வீட்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்து ஏதோ செய்துகொண்டிருந்த போது சித்தப்பா மிக வேகமாக சைக்கிளில் வந்து அதை ஸ்டாண்ட் கூட போடாமல் கிழே போட்டுவிட்டு திடுதிவென வீட்டில் நுழைந்தது, நான் மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்த போதே....
எங்கள் வீட்டில் மாட்டியிருந்த (திமுக தலைவர்கள் வரிசையில்) எம்.ஜி.ஆர் படத்தை மட்டும் பிடித்து இழுத்து அறுத்து கொண்டு வந்து நடுரோட்டில் போட்டு உடைத்தது..!
இந்நிகழ்வு ஒரு கனவு போல் என் மனதில் இருக்கிறது. அதன்பிறகு எங்களுக்கு (எனக்கும் அபிஅப்பாவுக்கும்) எம்.ஜி.ஆர் என்றாலே நம்பியார் ரேஞ்சுக்கு ஆகிவிட்டார்! அரசியல் ரீதியாக எங்கள் சித்தப்பா எங்கள் மேல் தொடுத்த அந்த தாக்குதலில் இருந்து நானும் அபிஅப்பாவும் இன்னமும் மீளவில்லை.
ஆனால் எங்கள் தம்பி முத்துவோ, அனைத்தையும் உள்வாங்கி, ஒரு நடுநிலையான எழுத்தாளராக பரிமளித்ததன் விளைவே... இன்றைக்கு கலைஞர் வாயாலேயே அவனுக்குக் கிடைத்திருக்கும் இந்த புகழ்!
இப்பொழுதும் கூட என் மனம் என் தலைவனையே தூக்கிப் பிடிக்கிறது. தன்னை எப்பொழுதுமே புகழ்ந்து கொண்டிருப்பவனை விட, வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தன்னை இடித்துரைப்பவரைத் தான் அதிகம் நேசிக்கிறான். அவ்வாறு இடித்துரைக்கும் உண்மையான நடுநிலையாளர்களை, ஊக்குவித்து, தன்னையறியாமலேயே தான் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட அவர்கள் மூலம் அறித்து அதைக் களைந்து களைந்து.... தன்னை மேலும் மேலும் பட்டை தீட்டிக் கொண்டு இன்னமும் ஜொளித்துக்கொண்டிருக்கின்றான்...!!

அப்படிப்பட்ட தலைவன் வாயால் புகழ் பெற்ற தம்பி முத்து, நீ மேலும் பல சிறப்புக்கள் அடைய வாழ்த்துக்கள்

உன்னுடைய இந்த உயர்வுக்கு காரணம், உன்னுடைய உண்மையான, நேர்மையான நடுநிலை தவறாத எழுத்துத் தான். அந்த நடு நிலையை என்றும் வழுவாமல் கெட்டியாக பிடித்துக்கொள்.


No comments: