Saturday, June 11, 2016

திமுக உண்மையிலேயே தோற்றுத்தான் போனதா?!


திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பூரண உடனடி மது விலக்கு மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கான சலுகைகள் தான்...
குடி வெறியர்கள் மற்றும் சாதி வெறியர்களின் வாக்குகளை திமுகவுக்கு எதிராக திருப்பி தோல்விக்கு வழி வகுத்ததாக சில பல திமுக தோழர்களே தங்கள் கருத்தாக பதிவு செய்கின்றார்கள்.

ஆனால் எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லை. ஏனெனில் நான் சென்று பிரச்சாரம் செய்த இடங்களில் பெண்களிடையே பூரண மது விலக்கிற்கு நல்ல ஆதரவும்.. அது இதுன்னு காரணம் சொல்லி செய்யாமல் விட்டுடக் கூடாது என்ற கண்டிப்பையும் நான் கண் கூடாகக் கண்டேன். அதேப் போன்று சாதி மறுப்பு திருமண ஆதரவு பற்றியெல்லாம் எங்கும் எந்த எதிர்ப்பையுமே நான் காணவில்லை. அது பற்றியெல்லாம் யாரும் சிந்தித்தாகவும் கூட தெரியவில்லை.

திமுக தோற்றது என்பதை விட, கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாங்கியதை விட 20 சதவித வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளது என்பதும், அதிமுக இவ்வளவு பெரிய பண பலம், அதிகார பலம் மற்றும் ஊடக பலம் ஆகியவற்றையெல்லாம் மீறியும் 6 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது என்பதும் தான் யதார்த்தம்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய இன்னொன்று... இப்படியாக சமநிலை பதிவாக தமிழக வாக்காளர்கள் இதுவரை தங்கள் முடிவைச் சொன்னதே இல்லை. இந்த முறையும் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை என்பது தான் என் கருத்து. திமுகவுக்கு ஆதரவாகத்தான் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். திமுக அதிமுக இரண்டும் நேரெதிராக மோதிக்கொண்ட தொகுதிகளிலும்... ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே வாங்கியுள்ள வாக்கு சதவிகிதத்தையும் பார்த்தாலே இதை நாம் புரிந்துகொள்ள முடியும்..!

ஆனால் ஒட்டு மொத்தத்தில் பார்க்கும் பொழுது... போரின் உச்சக்கட்டத்தில் களத்தில் நிற்கும் எதிரி...  தன்னுடைய அனைத்து ஆயுதங்களும் தோல்வியுற்ற நிலையில் கடைசியாக எடுக்கும் ஆயுதத்தை திமுகவும் எடுத்திருந்தால் மட்டுமே முழுவெற்றி கிட்டியிருக்கும். புராணங்களில் கூட ராமன் வாலியிடமும், கண்ணன் கௌரவர்களிடமும் எதிரிகளின் சூழ்ச்சிக்கு பதில் சூழ்ச்சி செய்தே வெற்றியை ஈட்டியிருப்பதும் அனைவரும் அறிந்ததே.

எதிரி பலத்தை கொண்டு வந்திருந்தால் பலத்தையும், கடைசியாக பணத்தைக் கொண்டு வந்திருந்தால் பணத்தையும் ஆயுதமாக்கியிருந்தால், திமுக இந்நேரம் தனித்தே அறுதிப்பெருமான்மை இடங்களைக் கைப்பற்றியிருக்கும். மக்கள் திமுகவுக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள், அதனால் தான் இன்று தேர்தல் முடிவுகளுக்காக திமுகவினரை விட அதிகம் அவர்கள் வருந்துகின்றார்கள்.

பணம் என்பது ஒவ்வொரு தனி நபரையும் சிற்றின்பம் போல அந்த நேர மயக்கத்திற்கு ஆளாக்கி விட்டுவிடுவதால், பணம் வாங்கியவர்களில் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் பேர் அதற்காக வாக்களித்திருந்தாலே போதும்... அது தான் திமுக கைகளில் இருந்த வெற்றியை அதிமுகவின் காலடியில் கடைசி நிமிடங்களில் கொண்டு போய் சேர்த்து விட்டது.


No comments: