Tuesday, June 28, 2016

கல்விக் கடனும்.. விஜய் மல்லையாவும் - சிறுகதை

இது வெறும் கற்பனைக் கதை மட்டுமல்ல. அன்றாடம் நம்மைச் சுற்றி நாம் அறியாமலேயே நடந்து கொண்டிருக்கும் எண்ணற்ற நிஜங்களின் ஒரு சாம்ப்பிள் தான்..!
@@@@@@@@@

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் அந்தப் பெண்மணியை பார்த்து...

நன்றாக நினைவில் இருக்கிறது வங்கியில் ஒரு வேலை நிமித்தமாக மேலாளரை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது தான், அந்தப் பெண்மணியைப் பார்த்தேன். கொஞ்சம் நெடிசலான தேகம். சராசரிக்கும் சற்று உயரம்.. பாதிக்கு மேல் நரைத்த கேசம்.., வயது 60ஐ தொட்டுக் கொண்டிருக்கலாம், அல்லது சமீபத்தில் கடந்து கூட இருக்கலாம். அன்றைக்கும், இதோ இன்று அழைத்து வந்திருக்கும் அதே மகளோடு தான் வந்திருந்தார்.

ரொம்ப நன்றிங்கய்யா.. என்று தாயும், மகளும் மேலாளரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அந்தப் பெண் படக்கென்று அவர் காலில் விழுந்து வணங்கியது. மேலாளர் இளம் வயதினர் தான். அதனாலோ என்னவோ படபடத்தவாறு... அதெல்லாம் வேண்டாம்மா..! அரசாங்கம் கொடுக்க சொல்லியிருக்கு.... நாங்க கொடுத்திருக்கோம். அவ்ளோ தான், நல்லா படிச்சி முடிச்சி, இந்த லோனை கரக்ட்டா கட்டி முடிச்சா போதும், அது தான் நீ எனக்கும், இந்த வங்கிக்கும் செய்கிற நன்றியாக இருக்கும் என்று சொன்ன போது எனக்கும் கொஞ்சம் நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

அவர்கள் சென்றவுடன் தான், மேலாளர் விவரங்கள் சொன்னார். ஏழ்மையான குடும்பம் சார். பக்கத்துல தான் அவங்க கிராமத்தின் பெயரைச் சொன்னார். இங்கிருந்து 18 கிலோ மீட்டர் இருக்கும். அது ஒத்த பொம்பள... கணவர் இறந்த பிறகு, கொஞ்சூண்டு நிலம், ஆடு, மாடு, கோழி எல்லாம் வச்சிக்கிட்டு, மூனு பொம்பள புள்ளைங்களையும் கொஞ்சம் கொஞ்சமா கறையேத்திக்கிட்டு வருது.

மொதோ ரெண்டு பொண்ணுங்களும் செவிலியர் பயிற்சி படித்து, வேலைக்குச் சேர்ந்து... காதல் திருமணம் செய்து செட்டிலாகிட்டாங்க. இது தான் கடைக்குட்டி... இப்போ இது ஒரு பாரம் மட்டும் தாங்கிறதுனால, இதையாச்சும் நல்லா படிக்க வைக்கலாம்ன்னு ஆசை. +2 ல ஓரளவு நல்ல மார்க்கு வாங்கினதுனால, பக்கத்து டவுன்ல இருக்குற தனியார் இஞ்சினியரிங் காலேஜ்ல சீட்டு கிடைச்சிடிச்சி. காலேஜுக்கு தினமும் பஸ்ஸுல போய்ட்டு வந்துடலாம். ஆனா அதுக்கும், மத்த மத்த படிப்பு செலவையும் இவங்களே எப்படியாவது வர்ற வருமானத்தை வச்சி மேனேஜ் பண்ணிடுவாங்க. ஆனா வருஷா வருஷம் ஃபீஸ் தான் மலைப்பா இருக்குன்னு வந்து நின்னாங்க.

நாலு வருஷத்துக்கும் சேர்த்து கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் வருது. வெளில கடன் கேட்டு பழக்கம் இல்ல. ஒத்த பொம்பளையா நின்னு, புள்ளைங்கள உழைச்ச காசுலயே கொஞ்சம் கொஞ்சமா கரையேத்திக்கிட்டு இருக்கேன். சொந்த பந்தமா இருந்தாலும், பக்கத்து வீடு, எதுத்த வீட்டு மனுஷங்களா இருந்தாலும் யாருட்டயும் ஒத்த காசு கடனாவோ, உதவியாவோ போயி நின்னு கேட்டு எம் புள்ளைங்கள வளர்த்துடக் கூடாதுன்னு, என் புருஷன் செத்தப்பவே உறுதி எடுத்துக்கிட்டேன்.

இந்த பன்னெண்டு வருஷத்துல, என்ன வருதோ அதுக்குள்ளாற தான் செஞ்சிக்கணும்ன்னு, நெலப்பாடா இருந்து ஓட்டிட்டேன். அதுல இந்து பொண்ணுங்களுக்கு எல்லாம் பல நேரம் ஆசப்பட்ட துணி மணிங்கள கூட வாங்காம, நினைச்ச மாதிரி படிக்க வைக்காம கூட, என்னால என்ன முடியுமோ அத மட்டும் செஞ்சி, ஆனா... அவங்க பின்னாள்ல தன் சொத்த கால்ல நின்னு சம்பாதிச்சி வாழற மாதிரியான படிப்பை கொடுத்து ஆளாக்கி விட்டுட்டேன்.

இந்த கடைக்குட்டிக்கும், துணி மணியெல்லாம் ஆசப்பட்ட மாதிரி வாங்கி கொடுக்காட்டியும், படிப்பையாவது நல்லபடியா குடுக்கலாமேன்னு ஆசை... பேங்க்ல கல்விக் கடன் கொடுக்குறதா சொல்றாங்க... அதான் வந்தேங்க சார். கிடைச்சுதுன்னா பி ஈ படிக்க வப்பேன்... இல்லாட்டி நர்ஸிங் தான்னு சொல்லி கூட்டியாந்துருக்கேன் சார். அவளுக்கு நர்சிங் பிடிக்கலையாம், அதனால பி எஸ் ஸி சேர்க்கலாம்ன்னு இருக்கேன்.

அந்த அம்மா சொன்னத கேட்டோடுன, அந்த பேச்சுல ஒரு உண்மையும், தெளிவும் தெரிஞ்சிது சார். அதான் பேப்பர்ஸ் எல்லாம் கொண்டுட்டு வரச் சொல்லி ஒரே வாரத்துல சேங்க்‌ஷன் பண்ணி கொடுத்துட்டேன். அதுக்கு தான் நன்றி சொல்லிட்டு போறாங்கன்னு அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... அவ்விருவரும் மீண்டும் உள்ளே நுழைந்தார்கள்.

காலேஜ்ல ஏதோ ஃபார்ம் கொடுத்து மேனேஜர் கிட்ட சீல் வச்சி கையெழுத்து வாங்கியாறச் சொன்னாங்க... அதை லோன் கிடைச்ச சந்தோஷத்துல மறந்துட்டு போயிட்டேன் சார்ன்னு இழுக்கவும்.. அதைக் கேட்டு வாங்கி கையெழுத்து போட்டு திருப்பிக் கொடுத்தவாறே... உங்களை பத்தித்தான் இவங்க கிட்ட பெருமையா சொல்லிக்கிட்டிருந்தேன்... என்று என்னைக் காட்டி அறிமுகப்படுத்தவே....

இருவரும் என்னை வணங்கினர். நானும் அவர்களை வணங்கி, ‘அம்மா’ன்ற வார்த்தைக்கு நீங்க தாம்மா உண்மையான தகுதியுள்ள பெண்மணின்னு சொல்லி, அந்தப் பெண்ணிடம், உங்க அம்மாவுக்கு சந்தோஷம் கொடுப்பது எப்படி உன்னுடைய முதல் கடமையோ... அதை விட முக்கியமானது, இதுவரை அவர்கள் கட்டிக் காப்பாற்றிய நாணயத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றுவது. அதுக்கு நீ செய்ய வேண்டியது, படிப்பைத் தவிர வேற எதுலயும் எண்ணத்தை வீணடிக்காமல், நன்கு படித்து உயர்ந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது தான்.. என்றவுடன், அந்தப் பெண்ணும் உற்சாகமாக தலை ஆட்டியவாறே... நிச்சயம் செய்வேன் சார் என்றது..!

நடுவில் ஓரிரு முறை அவர்களை வங்கியில் பார்த்திருக்கிறேன். அந்த அம்மாவும், புன்முறுவலோடு என்னை நலம் விசாரித்து ஓரிரு வார்த்தைகள் பேசுவார். அந்தப் பெண்ணின் படிப்பு பற்றி நானும் கேட்டு தெரிந்துகொள்வேன்.

வங்கியிலும் மேலாளர் இடமாற்றத்தில் வேறொரு ஊருக்குச் செல்ல, இன்னொருவர் பொறுப்பேற்றுக் கொண்டார்..

கடந்த ஆண்டு எங்கள் திருமண நாளை முன்னிட்டு, ரிங் எடுப்பதற்காக ஊரில் புதிதாக துவங்கியுள்ள நகைக் கடைக்கு மனைவியுடன் சென்ற போது தான் அதிர்ந்து போனேன்.
அந்தப் பெண்... அதே பெண் தான்...! கவுண்ட்டரில் நின்று விற்பனைப் பெண்ணாக நகைகளை வாடிக்கையாளருக்கு காட்டிக் கொண்டிருந்தார். என்னைப் பார்க்காமல் தவிர்த்து விட துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவாறே... அதை... அந்த தவிப்பிலேயே தொடர அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், நேரடியாகச் சென்று... என்னம்மா சௌக்கியமா?! என்று கேட்டவாறே அவள் எதிரில் நின்றேன்.

என் மனைவியிடமும், இவர்களைப் பற்றி ஏற்கனவே சொல்லி வைத்திருந்த காரணத்தால், அந்தப் பெண்ணை அறிமுகம் செய்ய அதிக நேரம் தேவைப்படவில்லை. என் மனைவியும் சற்று அதிர்ந்தவளாய், நீ ஏம்மா இங்க வேலை பார்க்கறே?! என்று கேட்டவுடன், அந்தப் பெண்ணின் விழியோரத்தில் சட்டென நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு தன் பிரச்சினைகளில் இருந்து வெளியேற ஒரு ஐஸ் பிரேக்கிங் மொமண்ட் தேவை. அது என் மனைவியால் இலகுவாக கிடைத்து விட்டது. என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் அந்தப் பெண்ணை அந்த இடத்தில் பார்த்த கணத்திலேயே இலகுவாக உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் அது அவளுடைய தவறு அல்ல, இந்த அரசாங்கத்தின் குற்றம் என்ற உண்மையை அவளுக்கு உணர்த்தி விட்டால், இனி யாரைப் பார்த்தும் வெட்கப்பட்டு பயந்து ஒழிந்து கொள்ளாமல், தான் எந்த வேலை பார்த்தாலும் அதை சந்தோஷத்துடன் முழு அர்ப்பணிப்புடன் செய்து, அந்தத் துறையில் அந்தப் பெண்ணால் முன்னுக்கு வர முடியும் என்று நம்பினேன்.

உண்மையில் ஒரு இஞ்சினியரிங் படித்த பெண்ணை நகைக்கடையில் வேலை பார்க்க வைத்திருப்பதற்கு, அரசாங்கமே வெட்கப்பட வேண்டும்... அவளுக்கான வேலை வாய்ப்பை அரசாங்கம் தான் உருவாக்கித் தந்திருக்க வேண்டும், மாறாக அவள் இதில் வெட்கப்பட ஏதுமில்லை என்று உணர்த்தி விட்டு வந்தேன். திரும்பி வரும் போது அந்தப் பெண்ணிடம் ஒரு தைரியம் குடிகொள்வதை புரிந்துகொள்ள முடிந்தது.

அதன் பிறகு இன்று தான் அந்தப் பெண்ணையும் தாயாரையும், வங்கியில் வைத்து பார்க்க நேர்ந்தது. நானே பேச்சை ஆரம்பித்தேன். அந்த அம்மா மட மடவென்று கொட்டித் தீர்த்து விட்டார்.

வருடா வருடம், ஃபீஸ்க்கு செக் வாங்கிச் சென்று கல்லூரியில் கொடுத்து... ஓராண்டு கடந்த நிலையிலேயே மாதாமாதம் வட்டியையும் சரியாக கட்டி வந்த நிலையில்... நான்காண்டு முடிந்த பிறகு, வேலை கிடைக்காமல் தான் அந்தப் பெண் மிகவும் அல்லாடியிருக்கின்றார். நூற்றுக் கணக்கான வேலைகளுக்கு அப்ளை செய்வது, பல இண்டர்வியூக்களுக்கு சென்னை, பெங்களூர் என்று சென்று வருவதாக, ஆறு மாதங்கள் அலைந்ததிலேயே, வங்கிக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் வேலை கிடைத்தாலும் சம்பளமாக பத்தாயிரம் தான் கொடுப்பேன் என்கிறார்கள். தனியார் ஹாஸ்டல், சாப்பாடு, மத்த மத்த செலவுக்கெல்லாமே ஆறாயிரம் ஆயிடுது தம்பி. மாசத்துக்கு ஒரு தரம் வீட்டுக்கு வந்துட்டு போனாலே, பஸ் செலவு அது இதுன்னு ஆயிரம் ஆயிடுது. பாக்கி மூவாயிரத்தை வச்சிக்கிட்டு என்ன பண்றது?

அது தான் கொஞ்சம் கூட யோசிக்காம, இங்க நகைக்கடைல ஆளு எடுக்குறாங்க.... ஆறாயிரம் சம்பளம்ன்னு சொன்னாங்க, பஸ்ஸு செலவு ஆயிரம் போனா கூட, ஐயாயிரம் மிச்சமாகும்ன்னு சொல்லி தான் அந்த கடைல சேர்த்து விட்டேன். பாவம் புள்ளயும் நான் பி ஈ படிச்சிருக்கேன் திமிறு காட்டாம அந்த வேலைல போயி சேர்ந்துட்டா, அதுலயும் ஆயிரத்தி ஐநூறு வரைக்கும் பெரிய பெரிய கம்பெனிக்கெல்லாம் இண்டர்வியூ போறது, அப்ளிகேஷன் போடுறதுன்னே ஆயிடுது... மாசத்துக்கு மூவாயிரத்தை பேங்க்ல கட்டிக்கிட்டிருக்கேன்.

நேத்திக்கி தான் பேங்க்லேர்ந்து நோட்டீஸ் வந்திச்சி... அதான் அவள ஒரு ரெண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். மேனேஜர் என்னென்னவோ சொல்றார். வட்டியோட சேர்த்து, ரெண்டு லட்சத்தி நாற்பது இருக்காம். உங்களை என் கூடப் பொறந்த தம்பியா நெனச்சித்தாம்பா சொல்றேன். கொஞ்சம் மேனேஜர்கிட்ட பேசி இத எப்படி செய்யலாம்ன்னு ஒரு வழிவகை செஞ்சிவுடுப்பா. உடனே கட்டணும்ங்கறார். அதுக்கு நிலத்தை வித்தாத்தான் சரிப்படும், அப்புடியே வித்தாலும் இவ்ளோ பணம் எல்லாம் தேறாது.... அதுவும் உடனே நடக்கற கதையா?! நான் வாங்குன பணத்தை இல்லன்னு சொல்ல மாட்டேன். என் தலைய அடமானம் வச்சாவது கட்டிடுவேன். ஆனா கொஞ்சம் அவகாசம் மட்டும் வாங்கிக் குடுங்க தம்பி

மேலாளரிடம் பேசினேன், பழைய மேலாளரிடம் ஃபோன் போட்டு அவர்களைப் பற்றி இவரிடம் சொல்லச் சொன்னேன். நான் வேண்டுமானாலும் ஷ்யூரிடி கையெழுத்து போடுவதாகச் சொன்னேன். அந்தப் பெண்மணி அவசரமாக குறுக்கிட்டு, வேணாம் தம்பி.. வேணாம்... அது மட்டும் வேணாம்... என் நிலம், ஆடு, மாடு எல்லாத்தையும் கூட வித்து குடுத்திடுறேன்.... ஆனா கடேசி வரைக்கும் யார் பண உதவியும் இல்லாம வாழ்ந்துடனும்ங்கற நெஞ்சுறுதிலேர்ந்து மாறிடக் கூடாது என்று சொன்னது.... எனக்கு பெரியதாக அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை... ஆனால் இந்த புது மேலாளர் சற்று ஆடித்தான் போனார்..!

இல்ல சார். டி ஓ ஆஃபீஸ்லேர்ந்து ஹெவி பிரஷ்ஷர். அதான் எல்லாருக்கும் நோட்டீஸ் அனுப்பிட்டேன். எப்டி பண்ணலாம்ன்னு சொல்லுங்க. நாங்களும் மனுஷங்க தான்.

அவர்கள் நிலயை சுறுக்கமாகச் சொல்லி, மாதம் நாலாயிரம் கட்ட முடியும்ன்னு சொன்னேன்.

வட்டியே மூவாயிரத்தி சொச்சம் வருது சார். பிரின்சிபிள்ல ஒரு ஐயாரமாச்சும் சேர்த்து கட்டிட்டு வந்தா எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல சார்.

அவங்க மாசம் எட்டாயிரம் கட்டுவாங்க சார். அதுக்கு நான் பொறுப்பு. அதுக்கு ஷெட்யூல் போட்டு குடுங்க. அவங்க மாசம் தவறாம கட்டுவாங்க...

அந்த பெண்மணி இடைமறித்து ஏதோ சொல்ல முற்பட், எதுவும் பேச வேண்டாம் வெளில வாங்க பேசுவோம்ன்னு விடுவிடுவென வெளியேறினேன்.

தம்பி இவள வேற இண்டர்வியூ செலவெல்லாம் வச்சிக்க வேணாம்ன்னு சொல்லி அந்த ஐயாயிரத்தை அப்புடியே கட்டிடலாம். நான் பருத்தி போடும் போது வருஷத்துக்கு ஒரு இருவதாயிரம் கட்டிடறேன்... இதுக்கு நடுப்புற அவளுக்கு சம்பளம் கூட கிடைச்சுதுன்னா, அதையும் சேர்த்து கட்டிடறோம் தம்பி.

நீங்க சொல்றத தாம்மா நானும் சொல்றேன்... அந்தப் பொண்ணு ஐயாயிரம், நிங்க சொல்றது மாசத்துக்கு கணக்குப் பண்ணினா ஆயிரத்தி ஐநூறு... பாக்கி மாசம் ஆயிரத்தி ஐநூறு தான் துண்டு விழுது...!

அதுக்கு எங்க தம்பி நான் போவேன்?! சொன்னா சொன்ன படி கட்டுனா தானா நாளை மறுநாள், இங்க மானம் மரியாதையோட வந்து போவ முடியும்?!

எனக்கு வேண்டிய நண்பரோட சின்ன கம்பெனி பக்கத்துல இருக்கு. பெண்கள் தான் அதிகம் வேலை செய்யறதால, உற்பத்தி மேலாளருக்கு நல்லா படிச்ச பொண்ணு இருந்தா நல்லாயிருக்கும்ன்னு போன வாரம் தான் சொன்னார். ஆம்பளைங்கள வச்சா நிறைய ப்ராப்ளம் வருது அதான் பெண்ணாக இருந்தால் நல்லது என்றார். அவர் எட்டாயிரம் சம்பளம்ன்னு சொல்லியிருந்தார். ஆனா பி ஈ படிச்ச பொண்ணு, பத்தாயிரம் குடுத்தாதான் வரும்ன்னு சொல்றேன். அதோட உழைப்புக்கு நான் கேரண்டின்னு சொல்வேன்... ஆனா நகைக்கடை மாதிரி அங்க ஏசி இருக்காது அதை விட வேலை கொஞ்சம் கடினமாத்தான் இருக்கும்... பட்.. சாயந்திரம் 6 மணிக்கெல்லாம் வேலை முடிஞ்சிடும். அதுக்கு மேல இருந்துச்சின்னா ஓவர் டைம் போட்டு குடுப்பாங்க... என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே...

எனக்கு ஓக்கே சார்...! ஹார்ட் ஒர்க் ஒரு ப்ராப்ளமே இல்ல சார் எனக்கு. இதை விட நல்ல சம்பளம், நான் படிச்ச படிப்புக்கு கொஞ்சமாச்சும் சம்பந்தம் இருக்குறா மாதிரி வேலை... அதோட கம்பெனின்னாலே நல்லா வேலை செஞ்சா, எக்ஸ்பீரியன்ஸ் அதிகரிக்க அதிகரிக்க சம்பள உயர்வும் கிடைக்கும்... இங்க நம்ம ஊரு பக்கத்துலயே... டெய்லி இப்ப மாதிரியே வீட்டுக்கு போயிட்டு வந்திரலாம்.... வாங்குற சம்பளத்துல எட்டாயிரம் பேங்க்ல கட்டிட்டு... ஆயிரம் பஸ்ஸுக்கு போக, ஆயிரம் அம்மாக்கு குடுத்திடுவேன் சார்...!

எப்படியாச்சும் அந்த வேலைய வாங்கிக் குடுத்திடுங்க சார்..!

அந்த அம்மா கண்கள் பனிக்க என்னைப் பார்த்தார்...

நான் ஃபோனை எடுத்து நம்பரைப் போட்டேன்... ஹல்லோ... பரந்தாமன் நல்லாருக்கீங்களா?! நீங்க புரொடக்‌ஷன் மேனேஜருக்கு ஒரு கேண்டிடேட் கேட்டிருந்தீங்கள்ல?... பி ஈ படிச்ச பொண்ணு ஒன்னு இருக்கு. இருபதாயிரம் சம்பளத்துல் சென்னைல ஒரு வருஷமா ஒரு கார்ட்டன் பாக்ஸ் கம்பெனில புரொடக்‌ஷன்ல ஒர்க் பண்ணியிருக்கு..! அவங்க அம்மா இங்க பக்கத்துல கிராமத்துல தனியா இருக்கறதால, இங்கயே ஒரு நல்ல ஜாப் கிடைச்சா வந்துடலாம்ன்னு சொன்னுச்சி. எனக்கு ரொம்ப வேண்டியப்பட்டவங்க தான்.

அட்லீஸ்ட் 12 ஆயிரமாவது சேலரி இருந்தா இங்கயே இருந்துடுவேங்குது. ஆனா அருமையான டெடிகேடிவ் ஒர்க்கர். நல்ல ஷார்ப்.... உங்க ஞபகம் தான் வந்தது... என்ன சொல்றீங்க?!

நீங்க கேரண்டி கொடுத்தா ஓக்கே தான் ப்ரோ... பட்... இப்பத்திக்கு பத்தாயிரம் வேணா மாசம் தர்றேன்..! ஒரு ஆறு மாசம் வேலை செய்யட்டும். புரொபேஷனரி பீரியட் முடிஞ்சோடுன அவங்க கேக்குற மாதிரியே 12 ஆயிரம் பண்ணி கொடுத்திடுறேன். ஓகேவா? பேசிப் பாருங்க..!

சரி கேட்டுப் பார்த்துட்டு சொல்றேன்...!

@@@@@@@@@@


டெடிகேட்டட் டு : விஜய் மல்லையா...

காப்பி டு: மோடி மற்றும் ஜெட்லி..!

காப்பி டு: எஜுகேஷன் லோன் வாங்கிட்டு, கல்விக்கடனை ரத்து செய்வேன்னு வாக்குறுதி தந்த திமுகவுக்கு ஓட்டுப்போடாத குடும்பத்தினர்..!

ஓவர் டு:  கல்விக்கடனை வசூலிக்க ஆர்டர் பெற்றிருக்கும் ரிலையன்ஸ்..!No comments: