Saturday, June 25, 2016

நிர்மலா பெரியசாமியின் வேட்டி உருவும் பேச்சும், புதியதலைமுறையின் ஊடக தர்மமும்..!


நிர்மலா பெரியசாமி என்ற அதிமுக பெண் பேச்சாளர், புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் அரசியல் விவாத நிகழ்ச்சியில், கருணாநிதி ஏன் சட்டமன்றத்திற்கு வர மறுக்கின்றார்? வந்தால் அவர் வேட்டியை உருவிவிடுவோம் என்ற பயமா?...

என்று பேசி விட்டு... பேசிய பின்பு, தான் பேசியது தவறு என்ற உரைத்த காரணத்தினாலோ அல்லது தனது தவறான பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்ட வேண்டும் என்ற காரணத்தினாலோ, தான் வாய்தவறி வேகத்தில் கூறிவிட்டேன் என்று வருத்தம் தெரிவிக்காமல், எங்க அம்மா புடவையை உறுவியது போல நாங்கள் செய்ய மாட்டோம் என்று திரும்பத்திரும்பச் சொல்லி தனது வாதத்தை நியாயம் செய்ய முற்பட்டிருக்கின்றார்...!!

பல லட்சம் பேர் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவரும், உலக அளவில் மிக அதிக கால அனுபவமுள்ள சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரரும், உலக அளவில் 13 முறை தோல்வியே காணாத தொடர் வெற்றியாளருமாகிய... அனைத்திற்கும் மேலாக தொண்ணூற்றி மூன்று வயது முதியவரை...

வேட்டியை உறுவிவிடுவார்கள் என்று பேசுவது அதிலும் ஒரு பெண் பேசுவது என்பது என்ன மாதிரியான நாகரீகம் என்றே எனக்குப் புரியவில்லை! அதிலும் ஒரு பெண்ணை தனது கட்சித் தலைவராகக் கொண்டவர் பேசுவது தான் ஆச்சர்யம்..!

திமுகவையோ, அதன் தலைவரையோ எந்த அளவிற்கு ஒருவர் தரம் தாழ்ந்து பேசுகின்றார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கான பதவிகள் பதில் மொய்யாக வைக்கப்படும் என்ற அறிவிக்கப்படாத சட்டம் அதிமுகவில் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக, பல்வேறு உதாரணங்களால் புரிந்துகொள்ள முடிகின்ற நிலையில்...

ஒரு பெரிய பதவியினை எதிர்பார்த்தே, நிர்மலாவும் இப்படி கலைஞரை ஒரு ஆண் மகன் கூட பேசக் கூசிடும் வார்த்தைகளைக் கொண்டு பொதுவெளியில் விமர்சிக்க முனைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகின்றது..!

ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், அதன் தலைமையான ஜெயலலிதாவும், அதன் தொண்டர்களும் இப்படி தரம் தாழ்ந்து பேசுவதையோ, அதனை ஆதரிப்பதையோ அவர்கள் அப்படித்தான், நாகரீகம் தெரியாதவர்கள் என்று கடந்து சென்றாலும், அந்த தொலைக்காட்சி அப்படிப்பட்ட பேச்சாளரை எப்படி அதன் பிறகும் தொடர்ந்து வாதம் செய்ய அனுமதித்து என்பதைத்தான் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

தமிழகத்தில் ஊடகங்களின் நிலை இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து செல்வது என்பது ஏதோ திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் பிரச்சினை அல்ல. அது ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை.

உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீடு என்று சட்டம் போட்டு, பெண்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த பிறகு அது சும்மா ல்லுல்லூல்லாயிக்கு சொன்னேன் என்று திரும்பப் பெருவதாகட்டும், சத்துணவோடு மாம்பழ ஜுஸ் தருவேன் என்று சொல்லி ஓட்டு வாங்கி வென்ற பிறகு, அது முடியாது என்று பின் வாங்குவதாகட்டும், தனது மேயரையோ, சேர்மேனையோ தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களிடமிருந்து பிடுங்கியதாகட்டும்....

இப்படி எடுத்த எடுப்பிலேயே வாக்களித்த மக்களுக்கு அல்வா கொடுக்கும் ஜெயலலிதாவை கண்டிக்கக் கூட வேண்டாம்... அவரது அடிப்பொடிகளாக விவாதத்திற்கு வரும் இப்படி நாலாந்தரமாக பேசும் பேச்சாளர்களைக் கூட கண்டித்து விவாதத்திலிருந்து அவர்களை வெளியேற்றி தனது நேர்மையை, நடுநிலையை காப்பாறிக்கொள்ள துப்பில்லாத தமிழக ஊடகங்கள்...

ஒட்டுமொத்த தமிழகத்திற்கே நாளை தலைகுனிவை உண்டாக்காமல் ஓயாது...!
ஆகவே நிர்மலாக்களை கண்டிக்காத, அல்லது ஊக்கப்படுத்துகின்ற ஊடகங்கள் தமிழகத்திற்கே சாபக்கேடுகள் என்பதை உண்மையான உணர்வுள்ள தமிழர்கள் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.

நிர்மலாக்கள் ஒட்டுமொத்த தமிழக அரசியலுக்கே சாபக்கேடுகள் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்..!

அரசியல் நாகரீகத்தின் வேர்களில் ஆசிட் வீசும் நிர்மலாக்களையும், அவர்களை ஊக்குவிக்கும் அதன் தலைமையான ஜெயலலிதாவையும், அவர்களுக்கு வாய்ப்பளித்து பல்ளிளிக்கும் ஊடகங்களையும், மக்கள் இனிமேலாவது புரிந்து உள்ளாட்சித் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மக்கள் கைகளில் தான் இந்த அராஜகவாதிகள், அநாகரீகவாதிகளை அடக்கும் வாக்குரிமை என்னும் ஆயுதம் இருக்கிறது. இந்த முறையும் அந்த ஆயுதத்தை சில நூறுகளுக்கு அடமானம் வைத்தால், வாழ்நாள் முழுவதும் அடிமையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கும்.

இன்னும் இரண்டொரு மாதத்தில் இவர்களை அடக்குவதற்கான ஆயுதத்தை இந்த முறையாவது தங்களுக்காக தமிழக மக்கள் பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையாவது அவர்கள் உணர வேண்டும்..!
உணர்வார்கள் என்றே நம்புகிறேன்...!


1 comment:

வேகநரி said...

நிர்மலா பெரியசாமி வேட்டிய உருவி விடுவதிலேயே குறியா இருக்காரே அம்மா ரெயினிங் கொடுத்திருப்பாங்களோ!