Friday, June 24, 2016

சுதேசி, விதேசி மாய்மாலமும், பாஜகவின் தில்லாலங்கடி வேலையும்..!


நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்.... ஜனசங்கம் என்ற கட்சி உருமாறி பாரதீய ஜனதா கட்சி என்ற பெயருடன் வாஜ்பாய் அவர்களை முன்னிருத்தி கால் பதித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவர்கள் சார்பாக அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டீஸ்... பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், கோவில்களிலும் விநியோகிக்கப்படும். அதில் ஆங்கிலேயரிடமிருந்து மீட்ட பாரத தாயை மீண்டும் அவர்களுக்கே அடிமையாக்க வேண்டுமா? சுதேசியை மீட்ட நாம் மீண்டும் விதேசிக்கு அடிமையாக வேண்டுமா? இப்படியாகவெல்லாம் இந்திய தேசிய உணர்வை  ஊட்டி....

சுதேசிப் பொருட்கள் எவையெவை? விதேசிப் பொருட்கள் எவையெவை என்றெல்லாம் ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டு....

உதாரணத்திற்கு கோல்கேட் விதேசிப் பொருளை புறம்தள்ளிவிட்டு... டாபரோ வேறு எதுவோ ஒரு பற்பசையான சுதேசிப் பொருளை பயன்படுத்துவோம் என்றெல்லாம் இருக்கும். இதில் தூண்டப்பட்ட பல இளைஞர்கள் அதைப் பின்பற்றும் வழக்கமும் ஏற்படலாயிற்று.

அப்பொழுது எல்லாம் கோகோ கோலா இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடை இருந்த காலம்.

பாரதிய ஜனதா கட்சி தங்களது அடித்தளத்தை பலப்படுத்திக்கொள்வதற்காக, சுதேசி, விதேசி என்ற தளத்தில் மிகப் பலமாக நின்று அடித்து ஆடிக்கொண்டு, மத்திய அரசினை விமர்சித்து மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கி வந்த நேரம் அது...

அது அப்படியே தொடர்ந்து, அதன் பரிணாம வளர்ச்சியாக மதங்கள், கடவுள்கள் என்று அதே சுதேசி, விதேசி பாகுபாடுகள் முன்னெடுக்கப்பட்டு.... சுதேசி மதமான இந்து மதத்தை ஆதரித்து விதேசி மதங்களான இஸ்லாமிய, கிருத்துவ மதங்களை புறக்கணிப்போம் என்பது மாதிரியான பிரச்சாரமாக வலுப்பெற்று... அதன் ஒரு களப்போராட்ட அடையாளமாக பாபர் மசூதி இடிப்பு வரை சென்று...

அவற்றின் பலன்களாக ஓரிலக்கத்திலிருந்து ஈரிலக்கத்திலான பாராளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் பாஜக கூலியாகப் பெற்ற வரலாறெல்லாம் நாம் அறிந்ததே...!

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் பிரதமராக நரசிம்மராவ் அவர்கள் பொறுப்பேற்றவுடன், 
அவருக்கான நிதி சம்பந்தப்பட்ட அனைத்துக்குமாக மன்மோகன் சிங் அடையாளங்காணப்பட்ட நிலையில்.... 
இந்தியா என்றாலே வறுமையின் சின்னமாக உலக நாடுகளால் அடையாளம் காணப்பட்ட நிலையில்... 
இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களில் 99.5 சதவிகிதம் பேர் அடித்தட்டு கூலி வேலைகளுக்கு மட்டுமே செல்லக் கூடியவர்களாக இருந்த நிலையில்...
அப்பொழுது இந்தியாவில் இருந்த ஆயிரத்தில் ஒரு குடும்பத்தில் மட்டுமே டீவி, வாஷிங் மெஷின், டூ வீலர்.. இத்தியாதிகள் இருந்த நிலையில்....
நூற்றில் ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே, சைக்கிள், ரேடியோ, வாட்ச் போன்றவை இருந்த நிலையில்...
வேலை வாய்ப்பு உள்ளிட்ட எதுவுமே அனைவருக்கும் சாத்தியமாகாத நிலையில்.., கிட்டத்தட்ட சரிபாதி குடும்பங்கள் மூன்றில் ஒருவேளை சாப்பாட்டை தவிர்த்து வந்திருந்த நிலையில்....
இதற்குமேல் இந்தியாவை ஒரு இஞ்ச் முன்னேற்ற வேண்டுமானாலும், வெளி உதவி தேவை என்ற நிலையில்...

உலக பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட நரசிம்மராவ் அரசு முடிவெடுத்து அதில் கையெழுத்திட்டு, உலகலாவிய வர்த்தக வாய்ப்பிற்கு அனுமதியளித்ததன் காரணமாக பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிக்க காரணமாக அமைந்தார்...!!

ஆனால் அதை அவர் செய்வதற்கு அவர் என்ன மாதிரியான எதிர்ப்பை பாஜக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்டோரிடம் எதிர்கொண்டார் என்றால்... அவர் இந்திய அரசியலின் கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்பட்டு.... கிட்டத்தட்ட அவரது அரசியல் மற்றும் தனி நபர் வாழ்க்கையே அத்தோடு அஸ்தமனமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு.....

அப்படி சுதேசி பொருட்களுக்காக, இந்தியாவின் சுயசார்பு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஆதரவான ஒட்டுமொத்த அதாரிடியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு பலப்படுத்தியதன் காரணமாக பாஜக பாராளுமன்றத்தில் கணிசமான இடங்களை வென்றதும் நடந்தேறியது..!

பாஜகவை நம்பி உடனடியாக மக்கள் வந்துவிடத்தயாரில்லாத நிலையில்... 96க்குப் பிறகு முதல் கட்டமாக காங்கிரஸ் அல்லாத... ஒரு கூட்டணிக்கு ஒரு முறையும், அவர்களே தம்மைத் தாமே கவிழ்த்துக்கொண்ட நிலையில், பாஜக தலைமையில் ஒரு பலவீனமான கூட்டணிக்கு ஒரு முறையும் மக்கள் வாக்களித்து... அதையும் ஜெயலலிதாவின் அகங்காரத்தில் கவிழ்த்த நிலையில்....

சரி... பாஜகவுக்கு ஒரு முறை ஓரளவிற்கு பலமான கூட்டணி அரசு அமைக்க வாய்ப்பளிப்போமே என்று மக்கள் கடிவாளத்துடன்.... 
அதிலும் பாஜகவுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட திமுகவுக்கு அந்த கடிவாளத்தைக் கொடுத்து ஆட்சியில் அமர்த்தி ஐந்து ஆண்டுகள் ஆள மக்கள் அனுமதி கொடுத்தார்கள்..!

அதாவது இதுவரை நடந்ததை சுறுக்கமாகச் சொல்ல வேண்டுமானால்...

ஜனசங்க இமேஜை மாற்ற பாஜக என்ற புதுப் பெயரோடு... இந்தியா, இந்தியர்கள், இந்திய பொருட்கள், இந்திய மதங்கள், இந்திய கடவுளர்கள் என்று படிப்படியாக தங்கள் வாக்கு வங்கியை மிக மெதுவாக உயர்த்தியபடியே முன்னேறி...
ஒரு கட்டத்தில் இந்திய வளர்ச்சிக்கு காங்கிரஸ் எடுத்த முன்னேற்ற பொருளாதார நடவடிக்கையை மக்களிடம் திசை திருப்பி, குழப்பி பிரச்சாரம் செய்து..,
ஆனாலும் மக்கள் தன்னை முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்ளாத நிலையில்... இடைக்காலமான மூன்று வருடங்களில் இரண்டு ஆட்சி மற்றும் நான்கு பிரதமர்கள் மூலம்... தங்கள் கட்சி மட்டுமே ஒரு மாற்று என்ற எண்ணத்தை மக்கள் மனத்தில் விதைத்து.... அப்படியும் மக்கள் நம்பாமல் போனதால், தனக்கான கடிவாளமாக தங்கள் கொள்கைகளுக்கு நேரெதிரியான திமுகவை தங்கள் கடிவாளமாக மக்கள் முன்னால் நிறுத்தி நம்பிக்கையைப் பெற்று...

முதல் முறையாக பாஜக கூட்டணி அரசை ஐந்து ஆண்டுகளுக்கு வாஜ்பாய் நடத்தினார்...!!

ஆனால் எந்த ஒரு கொள்கையை எதிர்த்து (உலக வர்த்தகமயக்கலுக்கு எதிரான சுதேசிக்கு ஆதரவான) அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ... அதற்கு நேரெதிராக, இவர்கள் விமர்சித்து வெளியேற்றிய நரசிம்மராவ் இந்தியாவுக்கு அளித்த உலக பொருளாதார தடை நீக்கம் என்ற தாராளமயமாக்கலை.... தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்தி.... சிறந்த பொருளாதார நிபுணரான முரசொலி மாறனை காமர்ஸ் மினிஸ்டராக அறிவித்து அவரை உலகம் முழுக்க பயணிக்க வைத்து பன்னாட்டு முதலீடுகளை இந்தியாவில் குவித்து, முதல் முறையாக இந்தியாவின்... இந்தியர்களின் தனிநபர் வருமானத்தையும், வாழ்க்கை வசதிகளையும் உயர்த்தி, ஜன்னலைத் திறந்து விட்டதன் மூலம் உலகின் விஸ்தாரத்தையும், அழகியலையும், வளர்ச்சியையும், இன்பத்தையும் காட்டிக் கொடுத்தது...!!

அதற்கு அடுத்தடுத்து வந்த மன்மோகன் சிங் ஆட்சியில் அந்தப் பாதை அற்புதமாக சீர் செய்யப்பட்டு கட்டுக்கோப்புடன் செயல்பட்டு, 2008இல் உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும் இந்தியாவும், இந்தியர்களும், சிறு அதிர்வைக் கூட உணராமல் காப்பற்றப்பட்ட நிலையில் தான்...

மோடியின் அரசு பதவி ஏற்றது..!

அன்றைக்கு சுதேசி விதேசி என்று சொல்லி மக்களை நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்த வாஜ்பாய்..., தான் எதைக் கொண்டுவந்ததால் பலியாக்கப்பட்டாரோ அதே நரசிம்மராவ் கொண்டு வந்த அன்னிய முதலீட்டு வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் ஆட்சியை பலப்படுத்திக் கொண்டு விட்டு....

அதற்கடுத்து வந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தத்தை மிகக் கடுமையாக விமர்சித்து மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடித்த நிலையில்....

மீண்டும் அதே பாஜகவின் மோடி அவர்கள்...

மன்மோகன் சிங் தனது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையை, நிறுத்தி வைத்திருந்த பாதுகாப்பு எல்லையில் இருந்து டேஞ்சரஸ் ஸோன் என்ற நிலைக்கு உயர்த்தி....

அதாவது.... அம்பானி, அதானி, மல்லையா போன்றோருக்கும், வெளிநாட்டினருக்கும் மட்டுமே பயனளிக்கும் நிலைக்கு....

பெருவாரியான துறைகளில் முழுமையான அன்னிய முதலீட்டுக்கு அனுமதியளிப்பதன் மூலம்.... அதிலும் குறிப்பாக பாதுகாப்புத் துறையில் முழுமையான அன்னிய முதலீட்டுக்கு கதவைத் திறப்பதன் மூலம்... இந்திய பொருளாதார சிற்பியான ரகுராம் ராஜனை சற்றே தள்ளியிரும் பிள்ளாய் என்று நகர்த்துவதன் மூலம்...

கிட்டத்தட்ட இந்தியா என்பது ஒரு அபாயத்தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சத்தையே ஏற்படுத்திவிட்டார்..!

ஒரு கட்சி தான் ஆட்சி அமைக்க யாருடன் வேண்டுமானாலும் மாறி மாறி கூட்டணி அமைக்கலாம். ஆனால் அக் கட்சியே தான் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணத்தை கட்டியம் கூறும் கொள்கைகளை மாற்றிக்கொள்ளலாமா?!

திமுக என்ற கட்சி எந்தக் காலத்திலும் தன்னுடைய சமூகநீதி கொள்கையை எப்படி கை விடாமல் நிற்கிறதோ... அதேப் போன்று தானே பாஜகவும் தனது சுதேசிக் கொள்கையில் நின்றிருக்க வேண்டும்?!

சரி... ஆரம்பத்தில் தாங்கள் எதிர்த்த விதேசி பொருட்களை ஏற்றுக்கொண்ட பாஜகவும் மோடியும், விதேசி நிறுவனங்களை ஏற்றுக்கொண்ட பாஜகவும், மோடியும்....
அதேப் போன்று விதேசி மதங்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுமா?! ஏற்றுக்கொள்வார்களா?!

டாட்..!


2 comments:

Jayakumar said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க. எல்லோருக்கும் ஒரே குறிக்கோள். ஆட்சியைப் பிடிப்பது அதன் மூலம் பிழைப்பது.

--
Jayakumar

Jayakumar Chandrasekaran said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க. எல்லோருக்கும் ஒரே குறிக்கோள். ஆட்சியைப் பிடிப்பது அதன் மூலம் பிழைப்பது.

--
Jayakumar