Tuesday, June 7, 2016

டாஸ்மாக் கனவு..


ஏம்மா... வேலை அதிகமா இருக்குற நேரத்துல இப்புடி சொல்லாம கொள்ளாம அஞ்சு நாள் லீவு போட்டின்னா என்ன அர்த்தம்?! புள்ளைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், பள்ளிக்கூட செலவு எல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு தான அடுத்த மாச சம்பளத்துல முன்கூட்டியே அட்வான்ஸா நாலாயிரம் வாங்கிட்டுப் போன...?!

லீவுக்கு போயிருந்த புள்ளைங்கள கூட்டிட்டு வரேன்னு அம்மா வீட்டுக்குப் போயி நீயும் ஜாலியா அஞ்சு நாள் டேரா போட்டுட்டியா?

நேற்று, எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு மாதிரியான மாற்றம் ஏற்பட, நான் சற்று சுதாரிக்கும் முன்பாக கடகடகடன்னு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டது. நானும், என் மனைவியும் சமாதானப் படுத்தவே... சற்று அழுகையை குறைத்தவாறே... காரணத்தைக் கொட்டித் தீர்த்து விட்டது அந்தப் பெண்..!

நீங்க குடுத்த பணத்தையும், தோடு, கம்மல் அடமானம் வச்ச பணத்தையும் சேர்த்து ஏழாயிரத்தை வீட்டுல வச்சிட்டு புள்ளைங்கள போயி கூட்டிட்டு மறுநாள் வரதுக்குள்ள, அந்த பாழாப் போனவன் (புருஷனைத் தான்) வீணா போன பயலுவோ... ஃப்ரண்ட்சாம் அஞ்சாரு பேர கூட்டி வச்சி தண்ணி... தொட்டுக்க மீனு, கறின்னு ஓட்டல்ல வாங்கியாந்து, ஒரு நாளு முச்சூடும் வீட்டுலயே கும்மாளம் போட்டுருக்கானுவோ சார்...!

தெருக்குள்ள புள்ளைங்களோட வரும் போதே பக்கத்து வூட்டு ஆயா சொல்லிட்டாங்க. பதறிப்போயி வீட்டுல போயி பார்த்தா, போதை தெளியாம படுத்திருக்கான். கேட்டதுக்கு... அந்த படுபாவிங்க இவனுக்கு நெறையா தடவ ஓசில தண்ணி வாங்கி குடுத்திருக்காங்களாம்... நான் இவனுக்கு ஒழுங்கா பணம் குடுக்குறது இல்லியாம்... நேத்திக்கி தான் செம்மையா மாட்டுனிச்சி... அவனுங்கள கூட்டி விருந்து வச்சிட்டேங்கறான்.

என்ன பண்றதுன்னே புரியல சார்... புள்ளைங்க ரெண்டும் விக்கிச்சுப் போயி நின்னுடிச்சிங்க. கை, கால்லாம் வெளவெளத்துப் போயிடிச்சி.., இந்தப் பசங்கள எப்புடி ஸ்கோலுக்கு அனுப்புறது? யாருட்ட போயி திரும்ப பணம் கேக்குறது? இப்புடி எதுவுமே புரியாம அவன வாயில வந்ததை எல்லாம் நாக்க புடுங்கற மாதிரி கேட்டுட்டு எட்டி நாலு மிதி மிதிச்சிட்டு, கையும் ஓடாம, காலும் ஓடாம அம்மா வீட்டுக்கே புள்ளைங்கள கூட்டிட்டு போயி, அங்க இங்கன்னு அவங்க மூவாயிரத்தை புரட்டி கொடுத்து அத எடுத்துக்கிட்டு இன்னிக்கி தான் சார் வந்தேன்னு சொல்லும் போது எனக்கே நெஞ்சு வெடிச்சிடும் போல இருந்திச்சி.

நல்லா இருந்த மனுஷன் சார். கம்பி கட்டுற வேலை. நெதம் நானூறு , ஐநூறுன்னு வரும். எல்லாரு கண்ணும் படுற மாதிரி தான் வாழ்ந்தோம். என் தங்கச்சி கல்யாணத்துக்கு கூட அவரு தான் அஞ்சு பவுனு செஞ்சி போட்டு கறையேத்துனாரு. இந்த பாழாப்போன குடிப்பழக்கம் தான் எல்லாத்தையும் கெடுத்துடிச்சி...! நெதத்துக்கு நூறு, இருநூறு மட்டும் வந்தது, ஒரு கட்டத்துல அதுவும் நின்னுடிச்சி...! வேலைக்கும் ஒழுங்கா போறது கிடையாது.

அப்பறம் தான் நான் வேலைக்கு வர ஆரம்பிச்சேன்...! இப்ப எங்கிட்ட காசு வாங்கி வாங்கி குடிக்கிற நிலமைக்கு வந்துட்டாரு. கடேசில இப்புடி புள்ளைங்க படிப்புக்கு வச்சிருக்குற பணத்தை திருடி குடிக்கிற அளவுக்கு மோசமாயிட்டாறே...ன்னு சொல்லி அந்தப் பெண் ஓஓன்னு மீண்டும் அழ ஆரம்பிச்சிடிச்சி.

அதுக்கு சமாதானம் சொல்லி... மீதி தேவைக்கு நான் பொறுப்புன்னு ஏத்துக்கிட்டு...

அந்த நினைவுகளே நேற்று முழுவதும் மனதில் சோக அலையாய் ஓடிக்கொண்டிருக்க... இரவு உறங்கிப் போனேன்... தூக்கத்தில் அற்புதமான கனவு....

கனவில் வள்ளுவர் கோட்டம்.. நெறுதுளிப்படும் கூட்டம் அலை மோதுகிறது. நான் மேடையை உற்றுக் கவனிக்கின்றேன். என் கண்களில் கவர்னர் ரோசையா தெறிகிறார்... திடுமென ஒரே ஆரவாரம்... சக்கர நாற்காலியில் சூரியன் வருகிறது. நானும் எம்பிக் குதித்து வாழ்த்துக்கோஷம் போடுகிறேன்... அருகில் தகத்தாய சூரியனாக தளபதி நிற்கிறார்...

ரோசையா ஏதோ படிக்கிறார்...

கர கர குரலில்... மு. கருணாநிதியாகிய நான்....


அடுத்ததாக...

மு.க. ஸ்டாலின் எனும் நான்... அடுத்தடுத்து ஏதேதோ நிகழ்வுகள்... பிறகு முதல் கையெழுத்துக்கான கோப்பு முதல்வர் கலைஞர் முன்னால் வைக்கப்படுகின்றது. தளபதி குனிந்து தலைவரிடம் அதை சுட்டிக்காட்டி ஏதோ சொல்கிறார்.... தலைவர் கையெழுத்திடுகிறார்.... நாளை முதல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..! இனி தமிழகத்தில் தேர்தலுக்காக மூடீய டாஸ்மாக் கடைகள் மூடிய படியே தான் இருக்கும் என்று தலைவர் குரலாக தளபதி மேடையில் அறிவிக்கிறார்....!!!!

கனவிலேயே அடுத்த காட்சி..

தன் பிள்ளைகளோடு எங்கள் நிறுவனப் பெண் தன் வீட்டிற்குள் செல்கிறாள்..கணவன் வேலைக்கு செல்ல ஆயத்தமாக நிற்கிறான். எப்பொழுதும் காலையில் மயக்கத்தில் இருப்பவன் இன்றைக்கு தெளிவாக வேலைக்கு கிளம்புகிறானே என்ற சந்தேகத்தில்...
ஏன்? நேத்திக்கு தண்ணி அடிக்கிலியா? அதிசயமா இன்னிக்கு காலைல எட்டு மணிக்கெல்லாம் பழைய மாதிரி தெளிவா கெளம்பி நிக்கிற?

அட போடி... சரக்கு தட்டுப்பாடு. எங்கியும் கிடைக்கல. ஒரே போரு... அதான் நைட்டு வெள்ளன படுத்துட்டேன்... சீக்கிரம் முழிப்பு வந்துடிச்சி... வேலைக்கு போலாம்ன்னு நிக்கிறேன்...

அடுத்த காட்சி விரிகிறது....

மாலை ஆறரை மணியிருக்கும்.... மேஸ்த்திரிகிட்டயிருந்து 500 ரூவா கையில வாங்குறான். வழக்கம் போல ஜமா கூடுது... டாஸ்மாக் கடையை அத்தனை கண்களும் ஆவலாக தேடுகின்றன. எந்த கடைக்கு போனாலும் மூடப்பட்டே கிடக்கிறது. அலைந்து திரிந்து பார்த்து சொட்டு சரக்கு கூட கிடைக்காத நிலையில்... கலைஞரையும், தளபதியையும் நாலு நல்ல கெட்ட வார்த்தையில் திட்டுகிறான். பிறகு வீட்டுக்குப் போகணும்ன்னு நினைப்பு வரவே...

விடுமுறை முடிந்து காலையில் வீடு திரும்பிய மகளும், மகனும் அன் கண் முன்னே வந்து போகிறார்கள். அப்புடியே கடைத்தெருவில் இனிப்பு சேவும்... முந்திரி பக்கோடாவும் வாங்குகிறான்... வீட்டுக்கு போற வழியில கோழி கடையை கடக்கும் போது, சைக்கிளை நிறுத்தி ஒரு கிலோ கோழி கறி வாங்குகிறான்...

ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்குள் நுழையும் இவனை மனைவியும், பிள்ளைகளும் ஆச்சரியமாக பார்க்கின்றார்கள்...! பிள்ளைகளிடம் திண்பண்டங்களை நீட்டியவுடன் ஆசையாய் ஓடி வந்து இவன் கன்னங்களில் முத்தமிடுகின்றார்கள்...! குவாட்டரை ஓப்பன் பண்ணி முதல் பெக்கை வயிற்றுக்குள் செலுத்தியவுடன் ஏற்படும் அந்த கிக்கை... குழந்தைகளின் முத்தங்களில் உணர்கிறான்...!

அப்படியே திரும்பி மனைவியைப் பார்த்து, ஏய் இந்தா கோழி வாங்கியாந்துருக்கேன்... மூன்னூறு ரூவா இருக்கு வச்சிக்க, சாமான் வாங்கி புள்ளைங்களுக்கு கோழி குழம்பு வச்சிப் போடு... உங்க அப்பனாத்தா வூட்டுல வக்கத்தவனுங்க.. இருவது நாளா புள்ளைங்களுக்கு நல்ல சோறு கிடைச்சிருக்காது... வாய்க்கு ருசியா கோழி கறி வச்சிக்குடு...!

குளிச்சி முடிச்சி... குடும்பமே ஒம்போது மணிக்கு ஒன்னா உட்கார்ந்து கறி விருந்து சாப்பிடுது...!

குழந்தைகள் படுத்த பின்பாக அவன் மனைவி பார்த்த பார்வையில் ஆஃப் அடித்து முடித்த பிறகு இவன் நடையில் வரும் தடுமாற்றத்தை உணர்கிறான்...
டாட்....


No comments: