Monday, September 16, 2013

தி இந்து - ஒரு பார்வை

இந்திய அளவில் ஒப்பிட்டால், தமிழகத்தில் தான் தினசரிகளை படிப்பவர்களின் சதவிகிதம் அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு தினசரிகளை தவறாமல் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களிடம் அவர்கள் படிக்கும் பத்திரிகைகள் பற்றிய மதிப்பீட்டைக் கேட்டால்....

பெரும்பாலும் உதட்டைப் பிதுக்குவது தான் நாம் காணும் காட்சியாக இருக்கும். மொத்தமாக அத்தனை தினசரிகளையும் ஒரேயடியாக குறை சொல்லிவிட முடியாது என்றாலும், இருப்பதில் சிறந்தது என்று தேர்ந்தெடுத்து ஒருவர் படித்துக்கொண்டிருக்கும் ஒரு தினப் பத்திரிக்கை, நிச்சயமாக அந்த வாசகருக்கு தொண்டை நனைய தண்ணீர் குடித்தது போன்ற முழு திருப்தியை தரவில்லை என்பது தான் தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய நிதர்சனம்.
பெரும்பாலானவர்கள் ஒரு சில சமாதானங்களுடன் தான் ஒவ்வொரு குறிப்பிட்ட தமிழ் தினசரிகளுக்கும் வாசகர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே ஒவ்வொரு தமிழ் வாசகரிடமும் நல்லதொரு முழுமையான தமிழ் தினசரியைப் பற்றிய தேடல் அல்லது எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் தான் நூற்றாண்டைக் கடந்து தமிழகத்திலிருந்து வெளியாகும் ஆங்கில தினசரியான THE HINDU  பத்திரிக்கை தங்கள் நிறுவனத்திலிருந்து இன்னுமொரு புதிய வெளியீடாக “தி இந்து” என்ற பெயரோடு தமிழில் வெளி வருவதை தமிழ் தினசரிகளின் வாசகர்கள் அனைவருமே ஒருவித ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

இன்றைக்கு அதாவது செப்டம்பர் 16, 2013 அந்த தினசரியும் சொன்னபடி வந்து விட்டது. நாலே ருபாய்க்கு நாற்பது பக்கங்கள். கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் ஒதுக்கி படித்து முடித்த போது......

.....இதை இதை..  இதைத்தான் இத்தனை நாளும் எதிர்பார்த்து காத்திருந்தேன் என்று என் மனம் சொல்ல முடியாமல் போனது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. மீண்டும் எனது காத்திருப்பு தனது வேலையை தொடர ஆரம்பித்து விட்டது. 

ஏன்? என்னாச்சு?

வேறொன்றுமில்லை....   இதுவும் இன்னுமொரு தமிழ் தினசரி! அவ்வளவே!!

இருக்கின்ற மற்றெதையும் விட இது குறைவானது / தரம் தாழ்ந்தது என்று நிச்சயமாக சொல்ல மாட்டேன். ஆனால் நான் ஏற்கனவே படிக்கும் இன்னொரு தமிழ் தினசரியை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக இந்துவைப் படிக்க வேண்டிய நிர்ப்பந்ததம் எதையும் இந்த பத்திரிக்கை என் மனதிற்குள் ஏற்படுத்திவிடவில்லை.

ஹிண்டு ஆங்கில தினசரியை தமிழகத்தின் 90 சதவிகிதத்திற்கும் சற்று கூடுதலானவர்கள் படிப்பதில்லை. ஆனாலும் ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிக்கின்ற அந்த பத்து சதவிகிதத்தினருக்கான போட்டியில் ஹிண்டு முன்னனியில் இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் இந்து தமிழ் தினசரி என்பது தமிழகத்தின் பெரும்பான்மையான 90 சதவிகித வாசகர்களுக்கான சந்தைப் போட்டியில் களமிறங்கியிருக்கிறது. அப்படியிருக்கும் போது அந்த சந்தைப் போட்டியில் தற்பொழுது மிகப் பலவான்களாக இருக்கும் தினத்தந்தி, தினமலர் மற்றும் தினகரன் போன்ற தினசரிகளுக்கு இணையான ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்துவது போன்றதான வடிவமைப்புடனும் செய்திகளுடனும் தான் தி இந்து வந்திருக வேண்டும்.

ஆனால் செய்திகளே கட்டுரைகள் மாதிரி வளவளவென்று சிறிய எழுத்துக்களில் இருப்பது தினமணி படிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. எண்ணிலடங்கா கட்டுரைகளும், இலகுவாக இல்லாத எழுத்து நடையும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வாசக வட்டங்களிலிருந்து வெகுதூரம் இந்த தினசரியை தள்ளி வைத்துவிடும் அபாயமும் இருக்கிறது! 

தமிழக மக்கள், குறிப்பாக தினசரிகளை தினமும் படிக்கின்ற வாசகர்கள் எப்பவுமே தமிழக அரசியலோடும் அதன் தலைவர்களோடும் நெருக்கமான உறவோடு இருப்பது போன்ற எண்ணத்துடனேயே வாழ்பவர்கள். அவர்களால் கலைஞரையோ, ஜெயலலிதாவையோ தவிர்த்துவிட்டு அரசியலை அணுக முடியாது.

குறிப்பாக கலைஞரை தவிர்த்து விட்டு படிக்கின்ற எந்த பத்திரிக்கையுமே அவர்களை கொஞ்சம் கூட திருப்திப்படுத்திவிட முடியாது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக, மூன்று தலைமுறைகளாக கலைஞர் பற்றிய செய்திகளை படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படிச் சொல்வதால், தமிழக வாசகர்கள் அனைவரும் கலைஞர் ஆதரவாளர்கள் என்ற பொருள் கிடையாது. குறைந்தபட்சம் கலைஞர் பற்றிய எதிர்மறை விமர்சனம் கூட செய்யாமல் இங்கே எந்த பத்திரிக்கையும் தாக்குப்பிடிக்க முடியாது.

ஆனால் ஒரு வரலாற்று சிறப்புமிக்கதான வெளியீடாக சொல்லிக் கொண்டு, முதல் நாளிலேயே, நாற்பது பக்கத்தில்  ஒரு சின்ன கார்னரில் கூட கலைஞர் படம் போடாமல் தமிழகத்தின் பெரும்பான்மையான 90 சதவிகித வாசகர்களுக்கான சந்தையில் ஒரு புதிய பத்திரிக்கை வெளிவந்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான். இது நிச்சயமாக அந்த பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு எதிரான ஒரு விஷயம் தான்.

இதனால் கலைஞருக்கு எந்த சிறு பாதிப்பும் கிடையாது. ஆனால் இதுவரையிலும் ஹிந்து ஆங்கில தினசரியைப் படித்திராத தமிழகத்தின் 90 சதவிகித மக்களிடம் அந்த நிறுவனம் பற்றி இருந்த மதிப்பானது, இன்றைக்கு இந்த தமிழ் பதிப்பை படித்தவுடன், ....ஓஹோ இது ஒரு அதி தீவிர அதிமுக ஆதரவு பத்திரிக்கை, என்ற எண்ணம் மிகப் பலமாக பதிய வைக்கப்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

இதைச் செய்வதற்குத் தான் ஏற்கனவே தினமலர், தினமணி எல்லாம் இருக்கின்றதே என்ற எண்ணம் அனைவருக்கும் வந்திருக்கின்றது. மேலும் நமது எம் ஜி ஆர் அல்லது ஜெயா தொலைக்காட்சிகளிலோ அல்லது அதிமுக அரசின் பத்திரிக்கை விளம்பரங்களிலோ எழுதுவது போன்றோ, சொல்வது போன்றோ, பதினாறு பக்கத்திற்கு அரசு பொருட்காட்சிகளில் வைக்கப்படும் விளம்பரம் மாதிரி ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டுரைகள் வெளியிட்டு, தமிழகம் அமெரிக்கா அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கின்றது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது.....   பாஜக ஆட்சி கொடுத்திருந்த “இந்தியா ஒளிர்கிறது” விளம்பரம் மாதிரியான தாக்கத்தை இந்த அதிமுக ஆட்சிக்கு மட்டுமல்லாமல், இந்த பத்திரிக்கைக்கும் ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது!

ஒரு புதிய பத்திரிக்கையின் வெளியீட்டு தினத்தில் இப்படியொரு எதிர்மறை விமர்சனம் வைக்கலாமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் அந்தப் பத்திரிக்கை தனது முதல் வெளியீட்டிலேயே தன்னுடைய நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்து வைத்துவிட்ட பிறகு, இந்தக் கேள்வியே அவசியம் இல்லாதது பொதுவானவர்களுக்குப் புரியும்!

தமிழக வாசகர்களிடம் தாங்கள் படிக்கும் தினசரிகளில் ஒருவித திருப்தியின்மை இருப்பதை மேலே சொல்லியிருந்தேன். அது என்ன என்று ஆழ்ந்து நோக்கினால் ஒரு தெளிவான உண்மை விளங்கும்.

அதாவது ஒரு தினசரி என்பது காலையில் ஒரு வாசகர் கைகளில் கிடைக்கும் போது, அது அதற்கு முந்தைய நாள் அந்த வாசகரின் பகுதி / மாவட்டத்தில், மாநிலத்தில், நாட்டில் அதற்கு அடுத்தபடியாக உலக அளவில் நடைபெற்றிருக்கின்ற முக்கிய நிகழ்வுகளை இந்த வரிசைப்படி முக்கியத்துவம் தந்து, நடந்தது நடந்தபடியே, ஒரு பிரமாணப் பத்திரம் அளிப்பது மாதிரியாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். 

மாறாக அந்த செய்திகளில் ஒரு வித சாயமோ அல்லது ஆசிரியரின் கருத்துக்களோ ஏற்றப்பட்டு சொல்வதைத் தான் தினசரிகளைப் படிக்கும் வாசகர்கள் ஒரு குறைபாடாக கருதுகின்றார்கள். தமிழ் தினசரிகளில் இருக்கின்ற பெரிய குறைபாடே இந்த விடயம் தான்.

நடப்புகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிரத்தான் ஆசிரியருக்கு தலையங்கம், கட்டுரை மற்றும் வாசகர் கடிதம் போன்ற பகுதிகள் இருக்கின்றனவே?! அங்கே தங்கள் கருத்துக்களையோ அல்லது தாங்கள் விரும்பும் கருத்துக்களை எழுதும் கட்டுரையாளர்களின் கட்டுரைகளையோ, கடிதங்களையோ பிரசுரித்தால் போயிற்று! அதை விடுத்து ஏன் செய்திகளில் சாயம் பூச வேண்டும்? ஏற்கனவே மற்ற பத்திரிகைகள் செய்துகொண்டிருக்கும் இதே தவறைத்தான் இன்றைக்கு வெளிவந்திருக்கும் தி இந்துவும் செய்திருக்கின்றது.

அதனால் தான் இதை இன்னுமொரு தமிழ் தினசரி என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது!

பாராட்டுக்குறிய விடயங்களே இந்துவில் இல்லையா என்று கேட்டால், நிறைய இருக்கின்றது. ஆனால் அவை அனைத்தும் தமிழில் வரும் மற்ற தினசரிகளிலும் இருக்கின்றது!! இந்து தன் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இன்னும் எக்கச்சக்க விளம்பர யுக்திகளை மேற்கொள்ளும், மிகக் கடுமையான விலைக்குறைப்பு எல்லாம் செய்யும். மக்கள் இதை தொடர்ந்து வாங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

ஆனால் தன் வாசகனுக்காக தான் சிந்திப்பதை தவிர்த்து விட்டு, செய்திகளை மட்டும் அவன் கைகளில் கொடுத்து, நீயே சிந்தனை செய்துகொள் என்று விட்டு விட வேண்டும்! இதைத்தான் ஒவ்வொரு தமிழ் தினசரிகளின் வாசகனும் எதிர்பார்க்கிறான். அவனுக்கும் மூளை இருப்பதை நீங்கள் மூடி மறைக்கக் கூடாது என்று விரும்புகிறான். அதை அவனுக்கான அங்கீகாரமாக நினைக்கிறான்!!!

அப்படி ஒரு தினசரிக்காக மீண்டும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றான்.....!!!






 

4 comments:

Anonymous said...

Oru DMK anuthaabiyin pulambalagathan karutha vendi irukkirathu ungal vimarsanaththai.

காமக்கிழத்தன் said...

நடுநிலை உணர்வுடன் விரிவாக ஆராய்ந்திருக்கிறீர்கள்.

நன்று.

காமக்கிழத்தன் said...

நடுநிலை உணர்வுடன் விரிவாக ஆராய்ந்திருக்கிறீர்கள்.

நன்று.

Unknown said...

நன்று. எனினும் பின்னூட்டங்களின் அடிப்படையில் போக போக மாற்றம் செய்யப்படுகிறதா என்று பொறுத்திருக்கலாம். அல்லது நீங்கள் சொல்வதுபோல் இதன் பொருளடக்கம் முன்னரே முடிவு செய்யப்பட்டுள்ளது என்றால் மறுபடியும் காத்திருக்கவேண்டியதுதான். பலன் ஒன்றும் இருக்கப்போவதில்லை. ஏனெனில் நடுநிலையான ஊடகம் என்று ஒன்று எப்போதும் சாத்தியமில்லை.