Wednesday, September 18, 2013

வைக்கோவுடன் ஒரு பேட்டி..! (கற்பனையே)

ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிலைப் படுத்தியே தன்னுடைய அரசியல் நகர்வுகளை எப்பவும் முன்னெடுப்பதாக கூறும் வைக்கோ அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு தெளிவுபெற வேண்டும் என்பது என் ஆசை. அவரிடம் நேரில் சென்று பேட்டி எடுக்கும் அளவிற்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லை. ஆனாலும் ஆசையை விட முடியவில்லை.

என்ன பண்ணலாம்?

ரொம்ப சிம்ப்பிள் கற்பனைக் குதிரையை தட்டி விட வேண்டியது தான்!! வைக்கோவின் செயல்பாடுகள், மேடைப்பேச்சுக்கள், பேட்டிகள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் கேட்கின்ற கேள்விகளுக்கு அவரது பதில் என்னவாக இருக்கும் என்பதை ஊகித்து ஒரு மினி கற்பனை பேட்டியை கீழே தந்திருக்கின்றேன்.

ஆனால் கடைசி கேள்வி அல்லது என்னுடைய சந்தேகங்களுக்கு அல்லது கருத்துக்களுக்கு அவர் என்ன பதில் சொல்லுவார் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை.  அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன்!!!

இது முழுக்க முழுக்க கற்பனை பேட்டி மட்டுமே. உண்மை அல்ல!!!

வைக்கோ சார், பேட்டியை ஆரம்பிக்கலாமா?

ம்... கேளுங்க...!

நீங்க ஏன் சார் காங்கிரஸை கருவறுக்கனும்ன்னு சொல்றீங்க?

இலங்கையில தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்‌ஷேவுக்கு ராணுவ உதவி செஞ்சது காங்கிரஸ் அரசு தானே?! அதான் அவங்கள வெறுக்கறோம்.

அப்பறம் ஏன் சார் கலைஞரை எதிர்க்கிறீங்க?

அவர் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுல இருந்தும், அந்த இன அழிப்பை தடுக்காமல் வேடிக்கை தானே பார்த்தார்? அதான் அவரையும் எதிர்க்கிறோம்...!

இப்போ பாஜகவை ஆதரிக்கிறீங்களே...  அவங்க காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்யக்கூடாதுன்னு பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வச்சாங்களா வைக்கோ சார்???

அது... அது வந்து வாஜ்பாயி புலிகளுக்கு உதவி செஞ்சார்.....!!

அதே மாதிரி இந்திராகாந்தி கூடத்தான் புலிகளுக்கு உதவி செஞ்சிருக்கார். அப்பறம் ஏன் காங்கிரஸை மட்டும் எதிர்க்கிறீங்க??

அது வந்து....  ஹம்.. இப்போ இருக்குற காங்கிரஸ் தலைமை தானே இன அழிப்பின் போது இலங்கைக்கு உதவி செஞ்சுது!!!

ஓக்கே சார், ஆனா இப்போ இருக்குற பாஜக தலைமையும் காங்கிரஸின் இந்த இலங்கை ஆதரவை எதிர்க்கலையே?! அதோட மட்டுமல்லாம ராஜபக்‌ஷேவோட இந்திய தூதர் மாதிரி செயல்படுற சுனா சாமி இப்போ மோடியின் நெருக்கமான நண்பராவும் இருந்துக்கிட்டு பாஜகவுலயும் சேர்ந்துருக்காறே?!

நாங்க ஒன்னும் பாஜகவோட கூட்டணி வைக்கப்போறோம்ன்னு தீர்மானம் போடலியே?!

நீங்க தீர்மானம் போட்டு சொல்லல தான். ஆனா உங்க பேச்சு முழுவதும் பாஜகவை புகழ்ந்ததோடு நிக்காம, காங்கிரஸை கருவறுக்க வேண்டும் அதுக்கு தகுந்த மாதிரி தான் நாம முடிவெடுக்கனும்ன்னு பேசியிருக்கீங்க. அதுக்கு என்ன அர்த்தம்? காங்கிரசுக்கு மாற்றுன்னா அது பிஜேபிக்கு ஆதரவுன்னு தான அர்த்தம்?!

நீங்க சொல்ற மாதிரியே வச்சிக்குங்க. அதுல என்ன தப்பு இருக்கு? காங்கிரஸை கருவறுக்க நாங்க பிஜேபியோட கூட்டு சேர்ந்தா என்ன தப்புங்கறீங்க?

தப்பு எதுவும் இல்லை சார். அது உங்க தனிப்பட்ட விருப்பம். ஆனா இலங்கைப் பிரச்சினையை முன்னிலப்படுத்தி, அதற்காக காங்கிரஸை கருவறுக்க வேண்டி பிஜேபியோடு கூட்டணி சேர்கிறோம்ன்னு நீங்க சொல்றது தான் இங்கே விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

எதவச்சு அப்படி சொல்றீங்க?

ரொம்ப சிம்ப்பிள். இலங்கைப் பிரச்சினையைப் பொருத்தவரை காங்கிரஸின் நிலைப்பாடு தான் எங்களுடையதும் என்று பிஜேபி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. சுஷ்மா சுவராஜ், மோடி உட்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரின் செயல்பாடுகளும் இவ்விஷயத்தைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு மிக வெளிப்படையான ஆதரவாகத்தான் இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், ராஜபக்‌ஷேவின் மனசாட்சியாக செயல்படும் சுனாசாமியை தன் நெருங்கிய நண்பர் பட்டியலில் இதுவரை வைத்திருந்த மோடி, தற்பொழுது அவரை பாஜகவின் உறுப்பினராகவே சேர்த்துக்கொண்டிருக்கின்றார். 

ஒரு வேளை அடுத்த ஆட்சியை பாஜக மத்தியில் அமைக்குமானால், தற்பொழுது இருக்கும் காங்கிரஸின் மறைமுகமான இலங்கை சிங்கள அரசின் ஆதரவை மிக வெளிப்படையாகவும், சட்ட ரீதியாகவும் தான் செய்வார்கள் என்பது இந்த செயல்பாடுகளிலிருந்தே வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. எனவே இலங்கைப் பிரச்சினையின் காரணமாக காங்கிரஸுக்கு மாற்று என்ற வகையில் பிஜேபியை தேர்ந்தெடுப்பது என்பது எலி வளைக்கு பயந்து பாம்பு புற்றுக்குள் புகுந்த கதையாகத்தானே மாறும்?!

இன்னும் கொஞ்சம் இதை தெளிவான உதாரணத்துடன் சொல்ல வேண்டுமானால், கடந்த திமுக ஆட்சியின் போது இலங்கைப் பிரச்சினைக்காக, கலைஞர் ஆட்சியையும், மத்திய காங்கிரஸ் அரசையும் எதிர்த்து இங்கே பொதுக்கூட்டம் போட்டு கண்டபடி அவர்களை திட்ட முடிந்தது, ஊர்வலம், மாநாடு எல்லாம் கூட போட முடிந்தது, பத்திரிகைகளில் எழுத, பேட்டிக்கொடுக்கவெல்லாம் கூட முடிந்தது, பிரபாகரன் படங்களை மேடைகளில் மட்டுமல்லாமல் ஊரெங்கும் வைத்து, டீ ஷர்ட்டுகளில் கூட படம் போட்டுக்கொண்டு, இலங்கை சிங்கள அரசுக்கு ஆதரவான மத்திய மாநில அரசுகளின் மறைமுக செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் வைத்து நியாயம் கேட்பதற்கான வாய்ப்பு கிட்டியது.

ஆனால் இன்றைக்கு பிஜேபியை ஆதரிப்பதற்காக நீங்கள் சொல்லும் காரணத்தைப் போன்று தான் அன்றைக்கும் சொல்லி ஆதரவு தந்து உங்களைப் போன்றவர்களால் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்கப்பட்ட ஜெயலலிதா அரசு இப்பொழுது என்ன சாதித்துக் கிழித்தது? சரி, இவர்களால் எதையும் சாதிக்க இயலாது என்பதை ஏற்றுக்கொள்வோம், ஆனால் அந்த பிரபாகரன் படத்தைப் போட்டு ஒரு பொதுக்கூட்டம் நடத்தக் கூட உங்களைப் போன்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றதே...  இதற்கு நீங்கள் என்ன சமாதானம் சொல்லப்போகின்றீர்கள்? 

ஜெயலலிதா, மோடி, சுனா சாமி, சோ, இந்து ராம் போன்ற அனைவருமே இலங்கைப் பிரச்சினையிலும், விடுதலைப்புலிகள் விஷயத்திலும், தமிழகத்தில் இவற்றுக்கெல்லாம் ஆதரவாக செயல்படுபவர்கள் மேல் எடுக்கின்ற நடவடிக்கைகளிலும் ஒரே எண்ண அலைவரிசையுடன் கூடிய ஒத்த கருத்து கொண்டவர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா வைக்கோ அவர்களே?! மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் இதை நீங்கள் மறுக்க இயலுமா?

ஒரு வேளை நாளை மத்தியில் ஜெயலலிதா ஆதரவுடன், மோடி தலைமையில், சோ ஆலோசனையுடன், சுனா சாமி லாபியுடன் கூடிய ஒரு அரசு அமையுமானால், அப்பொழுது இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை என்ன நடக்கும் என்பதை சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும். நிச்சயமாக தனி ஈழம் என்பது கனவில் கூட வரமுடியாத அளவிற்கு இங்கே சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்படும். உங்களைப் போன்றவர்கள் எல்லாம் ஈழப்பிரச்சினையை தூக்கிப்போட்டுவிட்டு வேறு வியாபாரங்களுக்குத் தான் செல்ல வேண்டியிருக்கும். 

இதையெல்லாம் இங்கே சொல்வதால் நீங்கள் காங்கிரஸை ஆதரியுங்கள், கலைஞரை ஆதரியுங்கள் என்று சொல்வதாக எண்ண வேண்டாம். ஆனால் இலங்கைப் பிரச்சினையை காரணம் காட்டி, நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அல்லது எடுக்கப்போகும் அரசியல் கூட்டணிகளுக்கும், எதிர்ப்பு அரசியலுக்கும் சப்பைக்கட்டு கட்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். 

கொஞ்சம் மனசாட்சியோடு சிந்தித்துப்பாருங்கள். ஜெயலலிதா, மோடி, சோ, சுனா சாமி, இந்து ராம்... இவர்கள் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து அமையும் ஆட்சி ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாவு மணி அடிக்கும் அரசாகத்தான் இருக்கும். ஆகவே மீண்டும் சொல்கிறேன் எலி வலைக்கு பயந்து, பாம்பு புற்றுக்குள் புக நினைக்காதீர்கள் வைக்கோ அவர்களே!!!

மேலே உள்ள பத்தி முழுமைக்கும் வைக்கோ அவர்களின் அல்லது வைக்கோ போன்ற ஈழப்பிரச்சினையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கும் அனைவரின் பதிலும் என்னவாக இருக்கும் என்பதை இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் தோழமைகளின் எண்ணத்திற்கே விட்டுவிடுகின்றேன்!!


2 comments:

Anonymous said...

பொதுவாக கூறி விட்டீர்கள். சீமான், நெடுமாறன் , தமிழருவி என்று வெட்டி பேச்சு கூட்டம் உண்டு

vijayan said...

சீமான், நெடுமாறன்,தமிழருவி எல்லாம் வெட்டி பேச்சு கூட்டம்தான்,கருணாநிதி மாதிரி அரசியலை வைத்து ஆசியாவின் no 1 பணக்காரனாகவில்லை பாருங்கள்.