Tuesday, September 3, 2013

ரோட்டரி சங்க தலைவர் பொறுப்பு

ஒரு வருடம் எப்படிப் போச்சுன்னே தெரியல. 52 வாரங்களும் வியாழக்கிழமைகளில் வாராந்திர கூட்டம். ஒரு சில வாரங்கள் மட்டும் மாற்றி அமைத்துக்கொள்வோம்.  எண்ணற்ற சேவைத்திட்டங்கள்.

முக்கியமாக 32 குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து இருதய அறுவை சிக்கிச்சை. பத்து நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழா. சொந்தமாக நடத்திக்கொண்டிருக்கும் மேல் நிலைப்பள்ளிக்கு தேவைப்படும் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான நிதி வழங்குதல், இரத்ததானம், இரத்தவகை கண்டறிதல், கண் அறுவை சிகிச்சைகள், விழிப்புணர்வு முகாம்கள், சேவைத் திட்டங்கள், இவைத்தவிர, தகுதியான மாணவச்செல்வங்களுக்கு ரூபாய் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கல்வி உதவித் தொகைகள், இன்னும் எத்தனையோ......

நிறைவாக முடிந்தது கடந்த ஒரு வருட ரோட்டரி சங்க தலைவர் பொறுப்பு. கடந்த ஞாயிறு அன்று புதிய தலைவருக்கு அந்த தலைமை பொறுப்பை மாற்றித் தந்து விட்டு, வீட்டுக்கு வந்தவுடன், ஒரு இனம் காண முடியாத மன நிம்மதி.

நிச்சயமாக என்னைப் போன்ற தனி மனிதனால் இதையெல்லாம் சாதிக்க முடியாது. ஆனால் ஒரு குழுவாக, ஒரு இயக்கமாக, அதிலும் உலகம் தழுவிய ஒரு பேரியக்கத்தின் அங்கத்தினராக இணைந்து, அதில் நம்ம ஊர் கிளையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செய்யும் போது பல அசாத்தியமான விஷயங்கள் கூட இலகுவாக சாத்தியமாகியிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள்.....   சென்னை அப்பல்லோவில் இருதய அறுவை சிகிச்சை, அதிலும் இலவசமாக.... ஒன்றா? இரண்டா? மொத்தம் 32 குழந்தைகளுக்கு! எத்தனை லட்சங்கள் செலவாகும் என்று யோசித்துப் பாருங்கள். அதை சாதித்தது ரோட்டரி தான்.

எதுவாக இருந்தாலும் அந்த 52 வாரங்களுக்குள் முடித்தாக வேண்டும். அதானால் பின்னங்கால்கள் பிடரியில் அடிபடுவது போன்ற வேகத்துடன் ஓட வேண்டும். நமக்கு முன்னாள் இருந்தவர்களை விட அதிகம் சாதிக்க வேண்டும். நமக்கு அடுத்து வருபவர்களுக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும்...   என்ற லட்சியத்தோடு ஓட வேண்டும்!!!

இதில் சாதிப்பது என்பது நம்முடைய சுயநலன் கருதி இருக்க முடியாது. அனைத்துமே, முற்றிலும் தகுதி வாய்ந்த தேவையிருக்கும் நபர்களுக்குத் தான், சமுதாயத்திற்குத் தான். எவ்வளவு சாதிக்க வேண்டும் என்று ஓடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நம்முடைய நேரம், உடலுழைப்பு, பொருளாதாரம் என்று நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் இதில் இருக்கும் சிறப்பு என்னவென்றால், தனி நபராக இதைச் செய்ய முயன்றால் நாம் செலவழிப்பதில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே பயனாளிகளைச் சென்றடைய முடியும். ஆனால் ரோட்டரியில் இணைந்து அதைச் செய்யும் போது, நாம் செலவிடுவதைப் போன்று குறைந்த பட்சம் பத்திலிருந்து அதிக பட்சம் நூறு மடங்கு வரையிலும் தேவையுள்ளோருக்கு பலன்களை பெற்றுத் தர இயலும்.

எது எப்படியோ? ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிட்டியது. அதை என் மனதிற்கு நிறைவை தரும் அளவில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்தியிருக்கிறேன். அந்த அளவில் எனக்கு பெரிய சந்தோஷம்.

அந்த வகையில் ரோட்டரிக்கும் அதன் நிறுவனர் திரு பால் ஹாரிஸ் அவர்களுக்கும் எங்கள் மாயூரம் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

2 comments:

Yaathoramani.blogspot.com said...

எது எப்படியோ? ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிட்டியது. அதை என் மனதிற்கு நிறைவை தரும் அளவில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்தியிருக்கிறேன். அந்த அளவில் எனக்கு பெரிய சந்தோஷம்.//

எங்களுக்குள்ளும்...

தங்கள் சேவைப்பணிகுறித்த பகிர்வுக்கும்
அது குறித்த அனுபவப் பதிவுகள் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


Yaathoramani.blogspot.com said...

tha.ma 1