Tuesday, September 3, 2013

வலையில் வைத்த கால்கள்.... விடுபடுவாரா ஜெயலலிதா..!!

2011 மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டு மாதத்தில் அதீதம் மின் இதழுக்காக நான் எழுதிய கட்டுரை:

கொக்கரக்கோ
Date: 
Wednesday, June 29th, 2011

அறுபது மாதங்களுக்கு கொடுக்கப்பட்ட குத்தகையில் இன்னும் 58 மாதங்களே மீதியிருக்கின்றன! உண்மை தானே?! சென்ற சீசனுக்கான குத்தகைதாரர், செய்த சில அத்துமீறல்கள், கடைசிகட்டத்தில் பெருமளவிற்கு பரப்புரை செய்யப்பட்டு, இவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக அரியணை ஏறி கிட்டத்தட்ட 40 நாட்கள் ஓடிவிட்டன. 100 நாட்களுக்கு யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என்று சிலர் சொல்கின்றார்கள்.

சாதாரண சூழ்நிலையில், இயற்கைக்கு மாறாக எதுவும் நடக்காத வரையிலும் இந்தக் கருத்தில் தவறு ஏதுமில்லை. ஆனால் பதவி ஏற்ற 40 நாட்களிலேயே, புதிய அரசு செயல்படுத்திய சில திட்டங்கள் நீதி மன்றம் முதல் மக்கள் மன்றம் வரையிலும் கண்டனங்களையும், முணுமுணுப்புகளையும் ஏற்படுத்தியிருக்கின்ற போது, 100 நாட்களுக்குப் பிறகு தான் விமர்சிக்க வேண்டும் என்ற பொது விதி செல்லுபடியாகாது என்றே தோன்றுகிறது.
புது அரசு ஒரேயடியாக தவறான பாதையில் செல்கிறதா? அல்லது ஒருசில விஷயங்களில் மட்டும் தடம் மாறுகிறதா? என்பதை பார்க்கும் முன்பாக, இந்தப் புதிய அரசின் தலைமைக்கு என்ன காரணத்திற்காக மக்களால் மகுடாபிஷேகம் செய்யப்பட்டிருக்கின்றது, என்பதை கொஞ்சம் தெளிவாகப் பார்த்துவிட்டாலே, தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியின் தரம் தானாக விளங்கிவிடும்.

1991 மற்றும் 2001 ஆகிய இரண்டுமுறைகளும் ஜெயலலிதா பதவியேற்று, பிறகு ஆட்சி பறிபோனதற்கு என்னென்ன காரணங்கள் மக்களிடம் இருந்ததோ, அதே காரணங்களின் அடிப்படையில் தான் கடந்த திமுக ஆட்சியும் பதவியிழந்திருக்கின்றது. இதை யாரும் மறுக்க இயலாது என்கின்ற பொழுது, வேறு மாற்று இல்லாத காரணத்திற்காகவே இந்த முறை அதிமுக ஆட்சியைப் பிடித்திருக்கின்றது என்பதையும் யாரும் மறுக்க இயலாது.
ஆனாலும் மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டு முறை தண்டனை பெற்றவர்கள், திருந்தியிருக்கக் கூடும் என்பதுதான் அது.அதில் தவறு கூட இல்லை. திமுக ஆட்சி ஏன் தரையிறக்கப்பட்டது? அது ஒரு சின்ன பட்டியல்! அதை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.

1. ஸ்பெக்ட்ரம், 2. மின் வெட்டு, 3. விலைவாசி உயர்வு, 4.கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம், 5. இலங்கைப் பிரச்சினையில் தவறான அணுகுமுறை அடுத்ததாக மாவட்ட வாரியாக குறுநில மன்னர்களின் ஆதிக்கங்கள். இவ்வளவு தான்.

இவ்வளவு தான் என்று சொல்வதற்காக யாரும் உடனடியாக கோபம் கொள்ள வேண்டாம். திமுக மேல் மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தை பட்டியலிட்டிருக்கிறோம். இதை அனைவரும் கடந்த ஒரு வருடமாகப் பேசிப்பேசித் தான், அதிமுக வந்திருக்கிறது. அதேசமயம் மக்களுக்கு திமுக மேல் இருந்த பிடிப்பு என்னென்ன என்பதையும் பட்டியலிட்டே ஆக வேண்டும். ஏனென்றால் செல்வி ஜெயலலிதா, மக்கள் மத்தியில் உண்மையான, நிரந்தரமான நற்பெயரெடுத்து தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இதைக் கொஞ்சம் கூர்ந்து ஆராய்ந்துப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

1. முதன் முதலாக 6 ரூபாய்க்கு வாங்கப்பட்ட அரிசியை ஒரு ரூபாய்க்கு மக்கள் வாங்க வழி செய்தது (மாதம் 100 ரூபாய் மிச்சம்), 2. ஸ்டாலின் தலைமையில் செம்மையாக முறைப்படுத்தப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக, கிராமப் பெண்களிடம் மிகப் பெரும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது, 3. 108 ஆம்புலன்ஸ் திட்டம் (முதல் அறிமுகம்) அதிமுக வினரும் பாராட்டும் வகையில் செயல்படுத்தப் பட்டது, 4. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் (முதல் அறிமுகம்) லட்சக்கணக்கானோர் உண்மையிலேயே உயர் சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றது, 5.கிராம மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நூறு நாள் வேலைத் திட்டம் (முதல் அறிமுகம்), 6. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி (முதல் அறிமுகம்), 7. முன் எப்பொழுதும் கண்டிராத சாலை வசதிகள், 8. கிட்டத்தட்ட அனைத்து நகராட்சிகளிலும் புறவழிச்சாலைகள், 9. எண்ணிலடங்கா மேம்பாலங்கள், 10. குக்கிராமங்களுக்கும் கான்க்ரீட் ரோடுகள் அதன்மீது முதன்முதலாய் பஸ் வசதிகள், 11. கிட்டத்தட்ட அனைத்து பஞ்சாயத்துகளுக்குமே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 12. தண்ணீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஆங்காங்கே பொது குடிநீர் குழாய் இணைப்பு, 13. நிறைய கூட்டு குடிநீர் திட்டங்கள், 14. கான்க்ரீட் வீடு திட்டம் (முதல் அறிமுகம்)....

இதற்கும் மேலாக, சென்னையில் இரண்டு பெரிய பூங்காக்கள், நுண்ணிய உயர்தர நூலகம், அமெரிக்க இயற்கை தர நிர்ணய சான்றிதழ் பெற்ற புதிய தலைமைச் செயலகம், கோவை செம்மொழி மாநாடு, அதன் பொருட்டு மிகப் பெரும் வளர்ச்சியைக் கண்ட கோவையின் சாலைகள், புது மேம்பாலங்கள்.. இத்யாதிகள், திருச்சி மாநகர் நினைத்துக் கூட பார்க்க இயலாத மேம்பாலங்கள், மதுரை மாநகரின் சுற்றுச் சாலைகளும், மேம்பாலங்களும், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மக்கள் வெகுவாக கலந்து கொண்டு உற்சாகமடைந்த கலாச்சார விழாக்கள், சமச்சீர் கல்வி, சமத்துவபுரம் போன்ற கொள்கை ரீதியிலான திட்டங்கள்....

இப்படி நீள்கிறது இந்தப் பட்டியல். இதில் சிலவற்றை இது தப்பு, அது தவறு என்று சிலர் சுட்டிக்காட்ட முன்வரலாம். பரவாயில்லை.. நமது இந்தக் கட்டுரையின் நோக்கம் கருணாநிதி ஆட்சியின் மகாத்மியங்களைக் கட்டியம் கூறுவது அல்ல, மாறாக புதிய ஆட்சியின் முன்பாக உள்ள சவால்களையும், அதை ஜெ. எவ்வாறு கடந்து சிறப்பான நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முன் வர வேண்டும் என்பதையும் பற்றியது தான்.

அதனால் தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே!

தெரிந்தோ தெரியாமலோ, திமுக மீது மக்களுக்கான வெறுப்புகள் பற்றிய மேலே உள்ள பட்டியலை நமது ஊடகங்கள் கொஞ்சம் அதிகமாகவே மக்களிடம் பரப்புரை செய்து விட்டன. அதனால் தான் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத வகையில் திமுக தடுமாறிப் போனது. ஆனால் அது முடிந்து போன கதை. இந்த தவறுகளுக்கெல்லாம், கருணாநிதியின், மிகப்பெரிய அலட்சியப் போக்கே காரணம் என்பது போலவும், ஆட்சி மாறினால் விரைவில் அனைத்தும் சரிசெய்யப் பட்டுவிடும் என்ற எண்ணமும் ஊடகங்களால் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டு விட்டன.

அந்த எதிர்பார்ப்புடனேயே மக்களும் புதிய ஆட்சியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை எல்லாம் (அதாவது இலவசங்களை) ஒன்றரை வருடங்களில் நிறைவேற்றிவிடுவதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். மக்கள் அதையும் குறித்துக் கொண்டார்கள் (மனதில்). இலவசத்திற்கு இந்த அவகாசம் ஓக்கே. ஆனால் மின்சாரம், விலைவாசி உயர்வு, இலங்கைப் பிரச்சினை, குறுநில மன்னர்களின் ஆதிக்கம் இவற்றுக்கெல்லாம் யாரும் அவகாசம் தரத் தயாராயில்லை!

முழு பௌர்ணமி நாளுக்கு அடுத்த நிமிடமே அமாவாசையை நோக்கிய பயணம் துவங்கி விடுவதைப் போல, ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே குஜராத் மின்சாரம் குதித்து வருகிறது என்றார்கள், இன்று வரையிலும் அது வராதது மட்டுமில்லாமல், இதுவரையில் பாதிக்கப்படாத சென்னையிலும் கூட அதிக அளவில் மின்வெட்டு நடைமுறையில் இருப்பது மக்களிடையே ஒருவித ஏமாற்றத்தை வரவழைத்திருக்கின்றது. இதில் மட்டும் சமச்சீர் கொண்டுவரும் ஜெயலலிதா, ஏழை பணக்காரர்கள் படிப்பில் அதை நடைமுறைப்படுத்த விரும்பாதது கீழ் நடுத்தர வர்க்க மக்கள் மனதில் மிகப்பெரும் கோபக்கனலை ஊதிவிட்டிருக்கிறது.

இலங்கைப் பிரச்சினையிலும் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்றி, அதற்காகப் பாராட்டுக் கூட்டம் எல்லாம் நடத்தி முடிவுற்ற சூட்டோடு, 23 மீன்வர்களும் 5 படகுகளும் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப் பட்டுவிட்டனர். இவ்விஷயத்தில், எந்தச் செயலுக்காக கருணாநிதி கேலி செய்யப்பட்டாரோ, அதே செயலான பிரதமருக்கு கடிதம் எழுதுவதை அம்மாவும் ஆரம்பித்தவுடன், இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று நடுநிலைவாதிகள் குழம்பித் தான் போய்விட்டார்கள்!.

ஒரு சிலருக்கு இதுதான் நிதர்சனம் என்பது இப்பொழுது தான் புரிய ஆரம்பித்திருக்கிறது! தமிழகத் தமிழர்களின் தேவைக்கே டில்லிக்கு காவடி தூக்கி பிச்சை எடுக்கும் நிலையில் தான் தமிழக முதல்வர்களின் அதிகார வரம்பு இருக்கிறது என்னும் பொழுது, இலங்கைத் தமிழர்களுக்காக துறும்பைக்கூட இவர்களால் கிள்ளிப் போட இயலுமா? இயலாதா? என்ற விடுகதைக்கான விடை கொஞ்சம் கொஞ்சமாக விடுபட ஆரம்பித்திருக்கின்றது.

விலைவாசி உயர்வு விஷயத்திலும், எந்தப் பொருளின் விலையும் குறையவில்லை என்பதை விட..., விலையேற்றம் என்பது இன்னும் தடுத்துக்கூட நிறுத்தப்படவில்லை என்பதும் மக்களை வெகுவாக வேதனைப்பட வைத்திருக்கின்றது.

அடுத்ததாக திமுகவின் சாதனைப் பட்டியல்களாக மேலே உள்ளவற்றில் பல திட்டங்கள் மத்திய அரசின் நிதி உதவியைக் கொண்டே பெரும்பாலும் செயல்படுத்தப்பட்டு வந்தன. திமுகவின் ஆரம்ப காலத்தில், தனித் தமிழ் நாடு கோரிக்கையை அறிஞர் அண்ணா முன் வைத்தார். ஆனால் அதைத் தடுக்கும் முயற்சிகளை கொஞ்சம் நிதானத்துடன் உற்று நோக்கி (இலங்கையில் நடந்தது போலத்தான் ஆகும் என்பதை புரிந்து கொண்டு..,) தம் மக்கள் வாழும்வரை நிம்மதியுடன் வாழவேண்டுமா? அல்லது போராடிச்சாக வேண்டுமா? என்ற கேள்விகளை மனதிற்குள் எழுப்பி இறுதியாக "மாநிலத்தில் சுய ஆட்சி, மத்தியிலே கூட்டாட்சி" என்ற சித்தாந்தத்தை முன் வைத்தார்.

1996 லிருந்து அந்த சித்தாந்தத்தை, திமுக சாதுரியமாகப் பின்பற்றி, இன்று வரையிலும்.. இனிமேலும் மத்திய அரசில் கூட்டாட்சி தான் என்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டாட்சி தத்துவத்தால் தான் கடந்த பத்து ஆண்டுகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே திட்டங்கள்... இன்னபிறவும், தமிழகத்திற்கு சாத்தியமாகியிருக்கின்றன. எப்பவுமே முட்டி மோதிக் கொண்டிருந்தால் காரியம் ஆகாது, என்பதைச் சரியாக புரிந்து கொண்ட கருணாநிதி, "நானும் ரௌடி தான்" ஸ்டைலில் மத்திய அரசு ஜீப்பில் தொற்றிக் கொண்டு, இந்த திட்டங்களுக்கு எல்லாம் தேவையான நிதிகளைப் பெற்றார் என்பதை யாரும் மறுக்க இயலாது.

இன்றும் கூட ஜெயலலிதா என்ன செய்கிறார்? டில்லி சென்று பிரதமரைச் சந்தித்து யாசித்த நிதியில், எவ்வளவு அளப்பார்களோ, அதற்கு தகுந்தாற்போல் தான் தமிழக பட்ஜெட்டை போட வேண்டும் என்று, நிதிநிலை அறிக்கைக்கான தேதியை தள்ளி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்! ஆனால் இன்றைய செய்தி என்ன? மத்திய அரசு விடுவித்துக் கொண்டிருந்ததில் 8000 கிலோ லிட்டர் மண்ணென்ணெயைக் குறைத்து விட்டார்களாம். இது கீழ்த்தட்டு மக்களிடம் எவ்வளவு பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என்பது இன்னும் ஒரு மாதம் கழித்து தான் தெரியும்.

ஆக இன்று ஜெயலலிதாவிற்கு முன்பு உள்ள முக்கிய பிரச்சினைகள் என்றால் ஒன்றரை வருடங்களில் 1.85 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் மூன்றும் தர வேண்டும். இதற்கான தேவை 9880 கோடி ரூபாய். வருடத்திற்கு 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மடிக்கணினி இலவசமாக வழங்க வேண்டும், ஒரு ரூபாய் அரிசியை இலவசமாக தருவதால் ஏற்பட்ட கூடுதல் செலவாக இந்த வருடத்திற்கு மட்டும் 6000 கோடி ரூபாய்கள். அதாவது இதுவரை அறிவித்துள்ள புதிய இலவச திட்டங்களுக்காகவே இந்த வருடம் கிட்டத்தட்ட 17500 கோடி ரூபாய்கள் வரையிலும் துண்டுவிழும்.

மற்ற அனைத்து இலவச திட்டங்களும் சென்ற ஆட்சியில் நடைமுறைப்படுத்தியதை அப்படியே அமல்படுத்தியாக வேண்டும். அதனால் அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இவற்றில் சென்ற திமுக ஆட்சியில் செய்த அதிகப்படியான திட்டம் என்றால் அது இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தான். அதற்கு 5 ஆண்டுகளுக்கும் அவர்களுக்கு ஆன கூடுதல் செலவு 4500 கோடி ரூபாய்கள் மட்டுமே. ஆனால் அந்த டீவியை தூக்கி விட்டு அதற்கு ஈடாக அம்மா அறிவித்திருக்கும் அதிகப்படியான இலவச திட்டங்களுக்குத் தான் இந்த 17500 கோடி ரூபாய்கள். அதுவும் இந்த ஒரு வருடத்திற்குள்ளாக!.

இதற்கெல்லாம் மேலாக இலவச ஆடு, கறவை மாடு வழங்கும் திட்டமெல்லாம் வேறு இருக்கிறது! ஐந்து ஆண்டில் 4500 கோடி ரூபாய். ஒன்றரை ஆண்டில் ஆட்டுக் குட்டியையும் கறவை மாட்டையும் சேர்த்து 20000(இருபதாயிரம் கோடி) கோடி ரூபாய்க்கும் மேல்..!! எவ்வாறு சாத்தியமாகும்? அந்த 4500 க்கே அறிவு ஜீவிகள் கொதித்தெழுந்தார்கள். ஒருலட்சம் கோடி கடன் வந்துவிட்டது, வருடத்திற்கு பத்தாயிரம் கோடி வட்டி கட்ட வேண்டியிருக்கிறது என்றார்கள்!! இப்பொழுது அதைவிட 1000 சதவிகித அளவு அதிக இலவசங்களுக்கு எவ்வளவு லட்சம் கடன் தமிழர்கள் மேல் விழும்?, அதற்கு எத்தனை லட்சம் கோடி வட்டி கட்டவேண்டி வரும்? என்று அதே அறிவுஜீவிகள் கணக்குப் போட்டுச் சொல்வார்களா?

ஒரு தவறை ஒருவர் செய்ததற்காக, குற்றம் சுமத்தி தண்டிக்கப்பட்டு, வேறொருவரை அந்த இடத்தில் கொண்டுவந்து அமர்த்தினால்..., அவர் முன்னவரை விடவும் பலமடங்கு அதிகமாக அதே தவறைச் செய்தால் என்ன அர்த்தம்? இதற்கெல்லாம் நிதி ஆதாரம் என்ன? மத்திய அரசு ரெகுலர் பட்ஜெட்டிற்கே போதுமான நிதி வழங்கும் என்று எதிர்ப்பார்க்க இயலாது. ஏனென்றால் இலங்கை உட்பட பல விஷயங்களில் கொள்கை ரீதியாக அவர்களை எதிர்த்து நிற்கின்றீர்கள்! உலக வங்கியில் கடன் வாங்கினால்... ஏற்கனவே ஒரு லட்சம் கோடி ரூபாய், தமிழர்கள் தலையில் கடன்சுமை இருப்பதாகப் பிரச்சாரம் செய்து தான் ஆட்சியைப் பிடித்துள்ளீர்கள்!?
என்ன செய்யலாம்? தெளிவாகப் பின்னப்பட்ட வலையில் காலை வைத்துவிட்டீர்கள் ஜெயலலிதா அவர்களே..!! வீழ்ந்துவிடாமல் விடுதலை ஆகவேண்டும். ஏனெனில் தற்பொழுது உங்களுடைய வீழ்ச்சி என்பது, உங்களுக்கான தனிப்பட்டது அல்ல. அது ஒட்டுமொத்த தமிழர்களின், தமிழகத்தின் வீழ்ச்சியாகிவிடும்! இது தான் உண்மை!!

இலவச டீவி யை நிறுத்துவிட்டீர்கள். மிகவும் நல்லது. அத்தோடு நீங்கள் புதிதாக அறிவித்துள்ள அந்த வீண் ஓட்டரசியலுக்கான இலவசங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். மற்ற இலவசங்கள் மக்களின் வாழ்க்கை முறையோடு ஒன்றியிருப்பதால் அதை மட்டும் பழைய நிலையிலேயே நடைமுறைப்படுத்தும் முடிவை அறிவிக்க வேண்டும். அரசின் நிதிநிலைமை பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தின் முன் வைத்து, இதற்கு மேல் இலவச திட்டங்கள் எதையும் புதிதாக நடைமுறைப்படுத்த இயலாது என்றும், அப்படிச் செய்தால், அவர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் பெரும் துரோகமாக அமைந்துவிடும் என்பதையும் மக்களுக்கு தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். அது உங்களால் முடியும். அதில் உள்ள நியாயத்தை மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
அதன்பிறகு நீங்கள் சொன்ன அந்த ஒன்றரை வருடங்களில் ஒரு தூய்மையான் அரசு நிர்வாகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, வருமானத்தை பெறுக்கும் வழிமுறைகளை செய்து, சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்ட வேண்டும். சென்ற ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் எந்த சிறு தொய்வும் இல்லாமல் செயல்படும்படியாக, மத்திய அரசுடன் சுமுகமான உறவை பலப்படுத்திக் கொண்டு, நிதி ஆதாரங்களை தடையில்லாமல் பெற்றாலே போதும். அதை விடுத்து "சமச்சீர் கல்வி", புதிய தலைமைச் செயலகம், பாதி கடந்த மெட்ரோ ரயில்... போன்றவற்றில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, ரத்தம் வரும்படி நடந்து கொண்டால்.... முதல் கோணல் முற்றிலும் கோணலாகி தீராப்பழியாகிவிடும்!! அலட்சியம் வேண்டாம்.



No comments: