Tuesday, September 3, 2013

பிறந்த நாள்..!

நினைவு தெளிந்த நாட்களிலிருந்து இது கொஞ்சம் அதிகமான புலகாங்கிதத்தைக் கொடுத்த பிறந்த நாள் என்றே சொல்லலாம்.

சின்ன வயசா இருக்கறச்ச எல்லாம், வகுப்பில் ஒரு சில மாணவர்கள் மட்டும் எதாவது ஒரு நாளில் புத்தாடை உடுத்தியும் கையில் ஒரு பிளாஸ்டிக் டப்பியில் சாக்லேட் குவியலோடும் வந்து சேருவார்கள். அவிங்கள எல்லாம் பார்த்தாலே லைட்டா கடுப்பு ஏறும்! வாத்தியார்ட்ட சொல்லிட்டு, ஒவ்வொருத்தன் மூஞ்சிக்கு நேராவும் அந்த டப்பிய நீட்டுவான்....

சாக்லேட் நெருங்கி வர வர, அவன் மேலிருந்த கடுப்பெல்லாம் நீங்கப்பெற்று, சாக்லேட்டின் சைஸ் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் மனம் லயித்திருக்கும். நாகரீகம் கருதி எல்லோருமே ஒன்றையாகத்தான் எடுத்துக்கொள்வோம். ஆனால் அவனுக்கு அணுக்கமான தோழர்களுக்கு அவனே இன்னொன்றையும் எடுத்துத் தருவான்....!!

அவன் அதை வாங்கிய வேகத்தில் ரஹ்மான் இரட்டை ஆஸ்கார் வாங்கியபோது கொடுத்த போஸ் மாதிரியே எங்களை ஸ்லோமோஷனில் பார்த்துச் சிரித்தவாறே திரும்புவான்...!!!

அதெல்லாம் ஒரு காலம். அஞ்சாவது ஆறாவது படிக்கும் போதெல்லாம் வாழ்க்கையில் லட்சியப் பட்டியலில் இதையும் ஒன்றாக சேர்த்துக்கொண்டேன். வாழ்க்கைல படிச்சி நல்ல பெரிய ஆளா வந்து, நல்ல வேலைல சேர்ந்து நிறைய சம்பாதிச்சி, கேக்கு வெட்டி பர்த்டே கொண்டாடனும். அன்னிக்கு நம்மளோட படிச்ச பசங்கள எல்லாம் தேடித்தேடிப் போய் சாக்லேட் கொடுத்துட்டு வரனும். குறிப்பா அந்த ப்ளாஸ்டிக் டப்பாவுல தான் கொண்டு போய் கொடுக்க வேண்டும்......!!!

இது தான் வளர்ந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் லட்சியமாக மாறிப்போய் விட்டிருந்தது. ஒரு கட்டத்தில் படித்து முடிப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்குமான இடைப்பட்ட அந்த போராட்டச் சுனாமியில் மறக்கடிக்கப்பட்ட சிறு வயது லட்சியங்களோடு இதுவும் கரைந்து போயிருந்தது.

திருமணத்திற்குப் பிறகு, மனைவியால் அந்த லட்சியம் மீட்டெடுக்கப்பட்டாலும், சாக்லெட் கொண்டு போய் சக மாணவர்களிடம் கொடுப்பதாக எடுத்த சபதத்தை நினைத்து ஒவ்வொரு வருடமும் சிரித்துக்கொள்வேன்.  அந்த நாட்களில் பத்திருபது ஃபோன் கால்கள் வாழ்த்துச் செய்தியோடு வரும்.

எப்பவும் கம்பெனி ஊழியர்களுடன் நல்ல விருந்துச் சாப்பாட்டோடு இனிமையாய் கழியும் அந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள். சமீபமாக இரண்டொரு வருடங்களாக இணையத்திலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு பேர் வாழ்த்துச் செய்திகள் வெளியிட அதை பலர் லைக் செய்து வாழ்த்துச் செய்தியும் பின்னூட்டமுமாக இடுவார்கள்.

பிரச்சினைகளை புறம் தள்ளிவிட்டு சந்தோஷமாக இருக்க எத்தனிக்கும் இத்தகைய தருணங்களில் முகம் தெரியாத அந்த தோழமைகளின் வாழ்த்துக்கள் ஒரு வித உற்சாகத்தை தரும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

அந்த வகையில் தான் இன்றைய எனது பிறந்த நாளும் வந்து சேர்ந்தது. நாற்பத்து நான்கை கடந்து நாற்பத்தி ஐந்தில் அடியெடுத்து வைக்கின்றேன். இன்றைக்கு வெளி வேலைகள் அல்லது கடமைகளையெல்லாம் முடித்து விட்டு மதியம் வாக்கில் இணையம் வந்து பார்த்தால், நூற்றுக்கணக்கான தோழமைகளின் வாழ்த்துக் குவியல்கள்.

நிச்சயமாக ஒரு சிறு பிள்ளையாய் மாறிப்போனதாக உணர்ந்தேன். இந்த இணையத்தில் உலவுவதால் அது கெட்டது, இது தீயது என்று எவ்வளவோ விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தாலும், இது மாதிரியான நமக்கே நமக்கான தனிப்பட்ட நாட்களை நமக்கு மென் மேலும் ஒரு மதிப்புக்கூட்டும் களமாக மாற்றுவதில் இணையத்தின் பங்களிப்பை மறுப்பதற்கில்லை.

இனி நம் பள்ளித் தோழர்களை தேடிச் சென்று சல்லாபிக்க முடியுமா? அதற்கு தான் வாய்ப்பிருக்கா?....

ஒரு விடயம் முடிந்து போய்விட்டது என்று எண்ணி கடந்து கொண்டிருக்கும் போது, இல்லை இல்லை, இது இருக்கிறது என்று இந்த இணைய உலகம் தான் இன்று எனக்குக் காட்டியிருக்கின்றது....!!!

என் சிறு வயது லட்சியத்தை இது ஈடேற்றிக் கொடுத்திருக்கிறது. இது எனக்கு மட்டுமான அனுபவமாக இருக்க முடியாது, இங்கிருக்கும், நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்துணை தோழமைகளுக்குமான அனுபவமாகவும் தான் இருக்கும்....!!!

என் முகமறியாவிட்டாலும், நால் நல்லவனா? கெட்டவனா? அல்லது ஏழையா? பணக்காரனா? மேல் சாதியா? கீழ் சாதியா? என்று இப்படியான இன்னபிற கேள்விகள் எதையும் கேட்காமல் சிறு வயது பள்ளித் தோழர்களாய் வாழ்த்துச் சொன்ன இணைய தோழமைகள் அனைவருக்கும் இந்த இனிய நாளில் என் நெஞ்சார்ந்த நன்றியினை கூறிக்கொள்கிறேன்.

நன்றி

2 comments:

Amudhavan said...

கொஞ்சம் தாமதமாக என்றாலும் வாழ்த்துக்கள் நண்பரே.

vijayan said...

இன்னுமொரு நூறாண்டு இரும்.