Sunday, September 22, 2013

ஈழத்தில் அமைதி நிலவட்டும்!!!

இலங்கைத் தமிழர்களுக்கு அங்கிருக்கும் சிங்களர்களுக்கு சமமான உரிமைகள் கிடைத்திருக்கவில்லை....   இன்னும் எத்தனையோ மன சஞ்சலங்கள். ஓக்கே. இனி அரசியல் ரீதியிலான போராட்டம் அதற்கு சரிப்பட்டுவராது என்று நம்பி தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும் என்று நம்பி அதற்கான ஆயுதப்போராட்டங்களில் உணர்ச்சி மிக்க இளைஞர் கூட்டம் தனித்தனிக் குழுக்களாக களம் இறங்குகிறன.

ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனி ஈழத்தில் ஒரு வித ஈர்ப்பும் ஆசையும் இருந்தாலும், உள்ளதும் போய்விடக் கூடாதே என்ற பதைபதைப்பும் சிலரிடம் இருக்கத்தான் செய்தது. ஆனால் ஒரு கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாருமே அந்த போராட்டதில் இரண்டறக் கலந்து விடும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது....

இதனால் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே புலம்பெயரும் வாய்ப்பில்லாமல் அங்கேயே தங்கிவிட்ட மற்றும் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழ் மக்கள் ஆகியோரது புதிய தலைமுறையானது கல்வி, வேலை வாய்ப்பு உட்பட கௌரவமான அடிப்படை நடமாடும் சுதந்திரம் கூட இல்லாததொரு நாடோடித்தனமான வாழ்க்கைக்கு இந்த போராட்டங்களால் தள்ளிவிடப்பட்டுவிட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் போராளிக்குழுக்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளால் ஒழித்துக்கட்டப்பட, அடுத்த கட்டமான இறுதிப் போரில் அந்த விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் ஒழித்துக்கட்டியது. 

அதன் பிறகு கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அங்கே அரசியல் ரீதியிலான ஒரு முன்னெடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் வடக்கு மாநிலத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்படுகிறது. இலங்கையின் மத்திய அரசால் நடத்தப்படும் தேர்தல் என்று வந்துவிட்ட பொழுதே, அதில் வாக்களிக்க தமிழ் மக்கள் முன்வந்து தங்களுக்குப் பிடித்த அல்லது தாங்கள் நம்பும் ஒரு கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பை 80 சதவிகித மக்கள் ஆதரித்து வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள் என்னும் செய்தி வந்து விட்ட பொழுதே....

இந்த செயல் நமக்கெல்லாம் சொல்லுகின்ற அல்லது உணர்த்துகின்ற செய்தி என்ன என்பதையும் நாம் ஆராய வேண்டும்!

இது எதைக் காட்டுகிறது என்றால்? அவர்கள் அதாவது ஈழத்தில் தற்பொழுது இருந்து கொண்டிருக்கின்ற, (வாழ்ந்துகொண்டிருக்கின்ற அல்ல) நம் தமிழ் மக்கள், அந்த நாட்டின் பிரஜையாகவே இருந்து கொண்டு அரசியல் முன்னெடுப்பின் மூலமாக தங்களுக்கான உரிமைகளை போராடிப் பெறலாம், அல்லது குறைந்தபட்சம் தற்பொழுது இருக்கின்ற முள்வேலி முகாம் சிறைவாச நிலையிலிருந்து மாறி மற்ற இலங்கைப் பிரஜைகள் மாதிரியான அல்லது முப்பதாண்டுகளுக்கு முன்பான தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்தது மாதிரியான, தங்களுக்கான ஒரு குடும்பம், வாழ்க்கை, கல்வி, தொழில் அல்லது வேலை வாய்ப்பு என்று ஒரு வாழ்க்கையை வாழ விரும்புவதைத்தான் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

ஏனெனில் அவர்களுக்கு ஆதரவாக அங்கிருக்கும் அவர்களில் ஒருவர் அல்லாது இந்தியா அல்லது வெளிநாடுகளில் இருந்து யார்? என்ன? எது பேசினாலும் அது அவர்கள் தலைகளிலேயே விடிகின்றது. இங்கிருந்து கொண்டு தங்கள் அரசியல் லாபத்திற்காகவும் சில பல கோடி பணத்துக்காகவும் அங்கிருக்கும் போராளிக்குழுக்களை உசுப்பிவிட்டு, போர் இல்லாத காலங்களில் எல்லாம் கள்ளத்தோணியில் சென்று படம்பிடித்து வந்து அரசியல் உட்பட அனைத்து லாபங்களையும் அடைந்தவர்கள் இறுதிக்கட்டப் போரில் இங்கேயே பதுங்கிப் பம்மிவிட்டு பழியை யார் மீது போடலாம் என்று பல்லிளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் போட்ட குலவைக்கெல்லாம் அங்கிருக்கும் அப்பாவி தமிழர்கள் தான் பொங்கல் அரிசியாக வெந்து தனிந்தார்கள். இப்பொழுது இந்த தேர்தலில் பங்கெடுத்து ஒரு ஆட்சிக்கு வழிவகை செய்திருப்பதன் மூலம் அங்கிருக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சுட்டிக்காட்டுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான்.

இந்த சம உரிமை, புண்ணாக்கு கந்தாயமெல்லாம் எங்களுக்கு வேண்டாம் அல்லது பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இப்பொழுது உடனடித்தேவை அடிப்படை உரிமையான காலார எங்கு வேண்டுமானாலும் நடந்து செல்லுகின்ற அந்த சுதந்திரம்!!!

அப்படி நடந்து சென்று தான் விரும்பும் அல்லது தனக்கு சரிப்படும் வேலையைச் செய்யலாம். அதன் பொருட்டு சில காசுகள் சம்பாதித்து, தனக்கென்று ஒரு குடும்பம் அமைத்து அதைக் காப்பாற்றலாம். மூன்று வேலை வயிறாரவோ அல்லது வாழ்வதற்கு போதுமான அளவிற்கோ சாப்பிடலாம், பயமின்றி படுத்து உறங்கலாம், தங்கள் பிள்ளைகளை கல்விச்சாலைக்கு அனுப்பலாம், நாளை அவர்களுக்கு நல்லதொரு வேலை வாய்ப்புகளை அமைத்துத் தரலாம். அடுத்த தலைமுறையிலாவது தம்முடைய பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்த அந்த பழைய பெருமைக்குறிய வாழ்க்கை நிலையை மீட்டெடுக்கலாம்.....!!

இது எல்லாமே சாத்தியமாகும் என்ற நம்பிக்கையோடு தான் அரசியல் பாதைக்கு திரும்பி, இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் இந்த தேர்தலில் பங்கெடுத்து தங்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இனியாவது இங்கிருக்கும் நாம் அவர்களுக்கான முடிவை அவர்களே எடுத்துக்கொள்ள அனுமதிப்போம். நம்முடைய எந்த ஒரு செயல்பாடுகளும் அவர்களுக்கு அங்கே எந்தவொரு நெருக்கடியையும் ஏற்படுத்திவிடாமல் நம் வேலையைப் பார்ப்போம். முதலில் அவர்கள் அங்கே சம நிலைக்கு வரட்டும். இந்தியாவில் அகதிகளாக இருக்கின்றவர்களும் அங்கு சம் உரிமையுடன் குடியேறும் அந்த பொன்னான நிலை உருவாகட்டும்.

முடிந்தால் நாம் அதற்காக நமக்கு தெரிந்த வழிகளில் பிரார்த்தனைகள் மட்டும் செய்வோம்!!!!

ஈழத்தில் அமைதி நிலவட்டும்!! அங்கிருக்கும் எம் தமிழ்ச் சொந்தங்கள் முப்பதாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை நிலையை மீண்டும் மீட்டெடுக்கட்டும்!!!!


3 comments:

தி.தமிழ் இளங்கோ said...

// ஈழத்தில் அமைதி நிலவட்டும்!! அங்கிருக்கும் எம் தமிழ்ச் சொந்தங்கள் முப்பதாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை நிலையை மீண்டும் மீட்டெடுக்கட்டும்!!!! //

பலருடையை கருத்தை எதிரொலித்தீர்கள். நல்லதையே நினைப்போம். இலங்கைத் தமிழர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்.

kkk said...

1. இங்கிருந்து கொண்டு தங்கள் அரசியல் லாபத்திற்காகவும் சில பல கோடி பணத்துக்காகவும் அங்கிருக்கும் போராளிக்குழுக்களை உசுப்பிவிட்டு....
Nehruvin mahalum Nilayana aatchi thanthavarumana, Indira gandhi did that job.
2.இனியாவது இங்கிருக்கும் நாம் அவர்களுக்கான முடிவை அவர்களே எடுத்துக்கொள்ள அனுமதிப்போம்.
Please Vote against CONGRESS Party.

Probably DMK may align with BJP, this time.

வேகநரி said...

நியாயமான கருத்துக்கள், நியாயமான பின்னோட்ட கருத்துக்கள், ஜனநாயக அரசியல் பாதைக்கு திரும்பிய இலங்கையில் வாழும் தமிழர்களை பாராட்டுவோம்.
//இனியாவது இங்கிருக்கும் நாம் அவர்களுக்கான முடிவை அவர்களே எடுத்துக்கொள்ள அனுமதிப்போம்.//
மிகவும் சரி.
தமிழகத்தில் சில சுய இலாபங்களுக்காக எடுக்கபடும் முடிவுகளை அவங்க இலங்கை தமிழர் மீது திணித்து அவர்களை கொடுமைபடுத்த வேண்டாம்.